சிந்தனைக்கூடம் – யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்திக்கான நிறுவனத்தினதும் மாங்குளம் யுகசக்தி எனும் பெண்கள் அமைப்பினதும் ஏற்பாட்டில் மாங்குளம் யுகசக்தி கேட்போர் கூடத்தில் கடந்த சனிக்கிழமை (20.10.2012) அன்று ‘மக்கள் எதிர்கொள்ளும் காணிப்பிரச்சினைகளும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளும்’ எனும் தலைப்பில் முழுநாள் கருத்தரங்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாங்குளம், முத்தையன்கட்டு, முள்ளியவளை, மல்லாவி, துணுக்காய் ஆகிய
பிரதேசங்களிலிருந்து 60ற்கு மேற்பட்ட காணிப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்கள் வருகை தந்திருந்தனர்.
பிரதேசங்களிலிருந்து 60ற்கு மேற்பட்ட காணிப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்கள் வருகை தந்திருந்தனர்.
சிந்தனைக்கூடப் பணிப்பாளர் பேராசிரியர் இரா சிவசந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற கிழக்கு மாகாண காணி ஆணையாளர் திரு. கே. குருநாதன் அவர்கள் வளவாளராகக் கலந்துகொண்டார். பொதுவாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் காணி உரிமை சம்பந்தமான சட்டங்கள் பற்றிய விடயங்களைக் குறிப்பட்ட அவர், யாழ்ப்பாணப் பிரதேசங்களில் நிலவும் தேசவழமைச்சட்டத்தினூடான காணி உரிமைகள், வன்னியில் நிலவும் ‘பொமிற்’ காணி உரிமையினை கையாளும் விதங்கள் பற்றி விளக்கமளித்தார். பங்குபற்றுனர் தொடுத்த தனிப்பட்ட காணி தொடர்பான வினாக்களுக்கு சட்டரீதியான விளக்கங்களை வழங்கினார். இதில் மங்கை குடியிருப்பில் வாழ்வோரது பிரச்சினை முக்கியமாகப் பரிசீலனை செய்யப்பட்டது.
துணுக்காய் பிரதேச செயலர் பிரிவிலுள்ள மங்கை குடியிருப்பில் 194 குடும்பங்கள் வாழ்கின்றனர். இவர்கள், யாழ்ப்பாணத்திலிருந்து 20 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்து இங்கு குடியேற்றப்பவட்டவர்களாவர். ஒவ்வொருவருக்கும் ‘பொமிற்’ அடிப்படையில் ½ ஏக்கர் மேட்டு நிலப்பரப்பு வழங்கப்பட்டிருந்தது. அதில் வாழ்ந்தோர் தென்னை, பலா, மா போன்ற பயன்தரு மரங்களை நாட்டி பயன்பெற்று வந்தனர். அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியைப் பெற்று இம்மக்கள் தமக்கென குடிமனைகளையும் அமைத்திருந்தனர். வன்னி யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து சென்ற இவர்கள் 2009இல் இறுதியுத்தத்தின் பின்னர் மீளவும் இக்குடியிருப்பிற்கு வந்து குடிமனைகளையும், நிலபுலங்களையும் பராமரித்து கடந்த 3 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் இவர்கள் குடியிருக்கும் காணி தனது உரிமையென காணி உரிமையாளர் ஒருவர் கூறுவதோடு அவர் அரச நிர்வாகிகளையும், பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் அழைத்துச் சென்று இப்பிரதேசத்திலிருந்து பழைய குடியிருப்பாளர்கள் அனைவரும் வெளியேற வேண்டுமென நிர்ப்பந்தித்து வருகின்றனர். குடியிருப்பாளர்களின் பிரதிநிதிகள் கூறும்போது சம்பந்தப்பட்ட காணி உரிமையாளர் தக்க ஆவணங்களை காண்பிக்கவில்லை எனக் கூறுகின்றனர். பிரதேச செயலாளரும் அப்பகுதி கிராம சேவகரும் காணி உரிமையை இவர் தக்க ஆவணங்களுடன் காண்பிக்கவில்லை என்று கூறுகின்றனர். இவருக்கு ஆளும் கட்சியின் செல்வாக்கு உள்ளதால் மக்களும் அதிகாரிகளும் இவர் விடயத்தை அச்ச உணர்வுடன் அணுகுவதாகத் தெரிகின்றது. இப்பிரச்சினைகளை பேச்சுவார்த்தையூடாக தீர்ப்பதற்கான முயற்சிகளை கருத்தரங்கு ஏற்பாட்டாளர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி விடயங்கள் போன்று பல காணிப்பிரச்சினைகளை வன்னி மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். யுத்த காலத்தில் பிரச்சினையுடன் வாழ்ந்து பல்வேறு இடங்களுக்கும் அடிக்கடி இடம்பெயர்ந்து முள்ளிவாய்க்கால் வரை சென்று வந்த வன்னி மக்களின் காணி உரிமையை, சம்பந்தப்பட்டவர்கள் பெற்றுக்கொடுத்து இனியாவது அவர்கள் நிம்மதியாக வாழ வழிசெய்யும் வண்ணம் கருத்தரங்கின் இறுதியில் தீர்மானம் எடுக்கப்பட்டது. அத்தீர்மானத்தை அமுல்படுத்துவதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment