யாழ்ப்பாண மாவட்ட தமிழரசுக் கட்சி பாராளுமன்ற வேட்பாளர் பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் அவர்கள் 03.04.2010 சனிக்கிழமை மாலை கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாசாலை முன்றலில் நடைபெற்ற தமிழர் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் கலந்து உரையாற்றும் பொழுது பின்வரும் கருத்துக்களை முன்வைத்தார்.
எமக்கான அபிவிருத்தியைப் பேணுவதற்கும் எமக்கான அபிவிருத்தியை மேற்கொள்வதற்கும் எமக்குரிய தனித்துவமான தொன்மையான கலை, கலாசாரங்களை வளர்த்தெடுப்பதற்கு எமக்கு சட்டங்களை ஆக்கவல்ல அரசியல் பலம் தேவையாகவுள்ளது. மக்கள் இதனை உணர்ந்து தமிழர் தேசியக் கூட்டமைப்பை பெரும்பான்மை பலத்துடன் பாராளுமன்றம் அனுப்பி எதிர்வரும் ஆறு ஆண்டுகளில் இவற்றை அரசிடம் அடிபணியாது, உறுதியான முறையில் பெற்றுக் கொள்வதற்கு ஆணை தரவேண்டும் என்றார்.
“எமது 62வருடகால நியாயமான உரிமைப் போராட்டத்தை அரசியல் கோரிக்கைகளை ஆயுத வழியில் அமைந்த பயங்கரவாதப் போராட்டம் என்றார்கள். சர்வதேசங்களும் அதற்குத் தூபம் போட்டன. முதல் 30 ஆண்டுகளும் அறவழியில் தானே போராடினோம். காந்தியின் சத்தியாக்கிரகம் அறவழிப் போராட்ட வடிவம் தானே. தந்தை செல்வா தலைமையில் தமிழர் உரிமைக்காக போராடிய போது அரசு ஆயுத பலம் கொண்டு அடித்து, உதைத்து, மண்டையால் இரத்தம் சிந்தச் சிந்த விரட்டியது.
இந்த அநியாயத்தை கண்ணுற்ற இளைஞர்கள் ஆயுத பலத்தை ஆயுத பலத்தால்தான் அடக்க முடியுமென ஆயுதம் ஏந்தினார்கள். அவர்களை ஆயுதம் ஏந்த வைத்தது சிங்கள அரசு தானே … 30 ஆண்டுகள் தொடர்ந்த அந்த நியாயமான கோரிக்கைகளைக் கொண்ட போராட்டத்தை இந்தியா உட்பட 20க்கு மேற்பட்ட சர்வதேச நாடுகளின் நேரடி தலையீட்டையும் 80க்கு மேற்பட்ட நாடுகளின் மறைமுக ஆதரவையும் பெற்று கேவலமான யுத்த தர்மத்துக்கே இழுக்கான முறையில் கடந்த ஆண்டு மேமாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் அழித்தீர்கள். குழிகளை ஏலவே கிண்டிவைத்து விட்டு திட்டமிட்டு 40,000 பொதுமக்களை அப்பாவிகளான பெண்கள், குழந்தைகள் என்று பாராது கனரக ஆயுதங்களைப் பாவித்து கண்தெரியா இருட்டு நேரத்தில் கொன்று புதைத்துள்ளீர்கள். உங்கள் கரங்கள் இரத்தக் கறை படிந்தவை. சர்வதேசக் குற்றவாளிகள் நீங்கள். இதற்கு காலம் பதில் சொல்லும்.
இன்று 62 வருடமாக நாம் கோரி வந்த அதே நியாயத்திற்காக ஆழமான ஜனநாயக வழியில் நின்று குரல் கொடுக்கத்தான் பாராளுமன்றம் வருகின்றோம். உங்களுக்கு ஒத்துழைத்த சர்வதேச நாடுகளையும் சனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட ஏனைய சர்வதேச நாடுகளையும் நோக்கி உரத்த குரலில் எமது நியாயத்தை எடுத்துரைத்து சிங்கள அரசின் திமிரை அடக்கி எமக்குரிய உரிமையை பெற்றுத் தாருங்கள் என அறைகூவல் விடவே பாராளுமன்றம் எமக்குத் தேவை என்கிறோம்.
நம் தனித்துவமான தேசிய இனம், எமக்கு பாரம்பரிய தாயகப் பிரதேசம் உண்டு, பாரம்பரியமாக அப்பிரதேசத்தில் எமக்குரிதான விவசாயத்தை, கடல்தொழிலைச் செய்து வாழும் உரிமை எமக்கு உண்டு. இங்கு தொன்மையாக வாழ்ந்து வரும் மக்களுக்குரிய இறைமையை இணைத்து சுய ஆட்சியை - சுயராஜ்ஜியத்தை கட்டி எழுப்பும் உரிமை எமக்கு உண்டு. அதனைப் பெற சகல வழிகளிலும் உயிரைத் துச்சமாக மதித்துப் போராடுவோம்.” என்று சூளுரைத்தார் பேராசிரியர்.
No comments:
Post a Comment