நல்லூரில் நட்சத்திர ஹோட்டல் கட்டப்படுவது எமது கலாசாரத்தை அவமதிக்கும் செயல் என யாழ் மாவட்ட தமிழரசுக்கட்சி வேட்பாளர் பேராசிரியர் இரா.சிவசந்திரன் 30.03.2010 செவ்வாய்க்கிழமை நாவாந்துறை சனசமூக முன்றலில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசும்போது தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் தமக்கு ஆதரவு இல்லாத நிலையில், அரசாங்கம் யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்கின்றோம் என்று கூறி வாக்கு பறிக்கும் வேலையை மத்திய வங்கி ஆளுனர் அஜித் கப்ரல் ஊடாக அவசர அவசரமாக 28.10.2010 ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றியுள்ளது.
'ஹோட்டல் நல்லூர்' என பெயரிட்டு நான்கு நட்சத்திர ஹோட்டல் ஒன்றை கட்டுவதற்கான அத்திவாரக்கல் நாட்டும் விழாவை நடாத்தியுள்ளது. இவ் விழாவில்; மத்திய வங்கி ஆளுநர், அரச அதிபர் திரு.கே.கணேஷ; மற்றும் இராணுவ அதிகாரிகள் பங்கு கொண்டிருந்ததைக் காணமுடிந்தது.
நல்லூர் இராசதானியின் நினைவுச் சின்னங்களான சங்கிலியன் வளைவு, மந்திரிமனை, சட்டநாதர் சிவன் கோவிலுக்கு அருகில் நூறு யார் தூரத்தில் இந் நட்சத்திர ஹோட்டல் அமைக்கப்படவுள்ளமை யாழ் கலாசார சீரழிவின் அத்திவார இடுகை என யாழ்ப்பாணவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர். அநூராதபுரம் பொலனறுவையில் கலாசார முக்கோணங்களை அமைத்து தமது வரலாற்றுச் சின்னங்களைப் பேணிவருகின்ற சிங்கள அரசு இங்குள்ள கலாசார மையத்தில் நான்கு நட்சத்திர ஹோட்டல் கட்டுவது எமது கலாசாரச் சீரழிவுக்கான ஆரம்பம் என்பதை தமிழர்கள் புரியாமல் இல்லை. இவர்கள் ஹோட்டல் கட்டுவதற்கு யாழ்ப்பாணத்தில் வேறு இடம் இல்லையா? கடற்கரைகள் சூழவுள்ள யாழ் குடாநாட்டில் பொருத்தமான இடத்தை தெரிந்திருக்கலாம் அல்லவா?
எமது இராசதானி அமைந்திருந்த ஆலயங்கள் அமைந்துள்ள நல்லூரில் ஏன் இக் ஹோட்டல்? நட்சத்திர ஹோட்டல்களில் என்ன நடக்கும் என்பதை நாம் அறியாதவர்கள் இல்லை. சூழல் பேண் சுற்றுலாத்துறையும் தங்குமிடங்களும் வளர்த்தெடுக்கப்படுதை நாம் எதிர்க்கவில்லை.ஆனால் இவர்கள் அபிவிருத்தி என்ற போர்வையில் எம் பண்பாட்டை நாசம் செய்கிறார்கள். இதனால் தான் நாம் எமக்கான அபிவருத்தியை நாமே மேற்கொள்ள வேண்டும் என்கிறோம் . நல்லூரில் நட்சத்திர ஹோட்டல் கட்டும் முயற்சியை யாழ் பொதுமக்கள் எதிர்க்கின்றார்கள். இதனை அரசாங்கத்தின் கவனத்திற்கு சமர்ப்பிக்கின்றோம் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment