Thursday, March 11, 2010

பேராசிரியர் இரா.சிவசந்திரன் அவர்களுடனான பேட்டி





பாராளுமன்றப் பொதுத்தேர்தல் - 2010
யாழ்ப்பாணதேர்தல் மாவட்டம்




இலங்கை தமிழ் அரசு கட்சி வேட்பாளர்

பேராசிரியர் இரா.சிவசந்திரன் அவர்களுடனான பேட்டி

(1) நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் போட்டியிடத் தீர்மானித்ததன் காரணம் என்ன?
தமிழர் அரசியலில் 30 ஆண்டுகால அறவழிப் போராட்டத்திலும் 30 ஆண்டகால ஆயுதப் போராட்டத்திலும் ஈடுபட்டு இன்று மீண்டும் ஆரம்பப் புள்ளியில் நிற்க வேண்டிய நிலையில் உள்ளது. தமிழரது எதிர்கால அரசியல் என்பது சர்வதேச சூழ்நிலையைக் கவனத்தில் கொண்டு முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஜனநாயக அடித்தளத்தில் நின்றுகொண்டு உலக மனச்சாட்சியைத் தட்டியெழுப்பி எமது தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை போன்றவற்றிற்காகக் குரல் கொடுக்க வேண்டியுள்ளது. இதற்குக் கல்வியாளர்கள் தேவை. சர்வதேச அரங்கில் எமது விடயங்களை எடுத்துக் கூறத்தக்க தெளிந்; அரசியல் புலமையாளர்களின் அவசியத்தினை உணர முடிகிறது. அரசியல் எல்லோரும் சொல்வது போல் சாக்கடை அல்ல. எமது எதிர்கால மேம்பாடு மற்றும் வாழ்வை நிர்ணயிக்கின்ற சக்தியாகவே அரசியலைப் பார்க்க முடிகிறது. எமது அபிவிருத்தி நிலைத்திருக்க எமக்கான அரசியல் தேவை. அபிவிருத்தி என்ற போர்வையில் உலகமயமாக்கல் என்ற அடிப்படையில் பல்தேசிய நிறுவனங்கள் நுழைந்த நாட்டை மேலும் சுரண்டும் போக்குத் தென்படுகின்றது. எமக்குரியதான அபிவிருத்தி எது என்பது பற்றிய தெளிவு அவசியம். இன்றைய அரசியலை வழிநடத்துவோருக்கு இது இன்றியமையாததாகும். கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் அரசியல் தந்த பாடத்தின் அடிப்படையிலேயே இதனைக் கூறுகின்றேன்.


(2) குறிப்பாக நீங்கள் தமிழரசுக் கட்சியில் இணைந்து ஒரு வேட்பாளரானதற்கான அடிப்படை முக்கியத்துவம் என்ன?
வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்டவன் நான் எனது தந்தையாரும்,தாயாரும் பாடசாலை அதிபர்களாகக் கடமையாற்றியுள்ளனர். தீவுப்பகுதியின் அபிவிருத்தியில் அவர்கள் அதிக அக்கறை செலுத்தியவர்கள். அமரர் வி..கந்தையா. புண்டிதர் .பொ.இரத்தினம் போன்றவர்களின் தேசிய மட்டத்திலான அரசியலுக்கு பிரதேச மட்டத்தில் தூணாக நின்றவர் என் தந்தையார். 1944ல் வேலணை கிராமச் சங்க 2ம் வட்டாரத் தேர்தலில் பங்குகொண்டு ஏக மனதாகத் தெரிவாகி கிராமசபை அரசியலில் அவர் ஈடுபட்டார். பிரதேச மட்டங்களில் சமூக, கல்வி சம சேவைகளில் ஈடுபாடு கொண்டு விளங்கியதால் எனது பாரம்பரியத்தில் அரசியல் என்பது புதிதல்ல. இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னரான காலப்பகுதியில் எனது தந்தையின் தந்தை வைத்தியர்.சிதம்பரப்பிள்ளை கூட வேலணை கிராம சபைத் தலைவராக இருந்துள்ளார். எனவே எனது அரசியல் பாரம்பரியம் இரண்டு தலைமுறைக்கு முந்தியது. மேலும் நீண்ட காலமாக நான் தமிழரசுக் கட்சியின் அங்கத்தவனாகவே இருந்து வருகின்றேன். தமிழர்கட்சி அரசியல் இயங்க முடியாமைக்கான காரணம் உங்களுக்கே புரியும். இப்பொழுது அதற்கான சந்தர்ப்பம் வரும் போது கட்சி அரசியலுக்கு வரும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டுள்ளது.

(3) ஒரு புலமையாளராக அறியப்பட்ட நீங்கள் இலங்கை அரசியலில் இணைந்து கொண்டதை எப்படி உணருகிறீர்கள்?
அரசியல் அலட்சியப்படுத்தக் கூடிய ஒன்றல்ல. மக்களின் பல்துறை அம்சங்களிலும் அதன் வளர்ச்சியிலும் அரசியலின் பங்கே கணிசமாக உள்ளது. எனவே அரசியலில் புலமையாளர்கள் வந்து கலந்து கொள்வது மிகவும் அவசியமானது என கருதுபவன் நான். வடக்குக் கிழக்குப் பிரதேசத்தினை தாயகப் பிரதேசம் என்பதை ஆய்வு அறிவியல் பூர்வமாக நிறுவுவதில் தீவிரமாகச் செயற்படுபவன் நான். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலேயே தமிழர்களுக்கு எதிரான தரப்படுத்தல் ஒடுக்கு முறைக்கு எதிராகத் தீவிரமாகப் போராடும் மனப்பாங்கு எனக்கு இருந்தது. இன்றும் அதே உணர்வுடனேயே செயற்படுகிறேன். இன்று யாழ் தேர்தல் களத்தில் நிற்கின்ற 15 அரசியல் கட்சிகளினதும், 12 சுயேட்சைக் குழுக்களினதும், 324 வேட்பாளர்களின் தகுதி பற்றியும் அவர்கள் மக்களுக்கு என்ன சேவை செய்தனர் என்பது பற்றியும் நீங்கள் அறிவீர்கள். எமது கட்சியில் வேட்பாளர்களாக நிற்கின்ற முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களும் 10 புது முகங்களும் ஒப்பீட்டளவில் புலமையானவர்களாகவே தெரிகின்றனர். இவர்களை ஒற்றுமையாகத் தேர்வு செய்வது தமிழர்தம் அரசியலை முறையாக வழிநடத்தும் என நம்புகிறோம்.


(4) இது தொடர்பாக சமூக நிலைகளில் எவ்வாறான கருத்து நிலைகள் உலாவுகின்றன?
இலங்கையில் யாழ்ப்பாணம் பாரம்பரியமாகவே கல்வியில் உயர் நிலையிலும் சிறந்த புலமையாளர்களையும் கொண்டது. எனவே கல்வியாளர்கள், புலமையாளர்கள் அரசியலுக்குத் தேவை எனும் உண்மை யாழ் சமூகத்திற்கு சொல்லாமலேயே புரியும் ஒரு விடயம். யாழ் தமிழ் வாக்காளர்கள் அறிவு, தெளிவு, துணிவு, அர்ப்பணிப்பு உள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு தயாராகி விட்டார்கள் என்பது புரியத் தொடங்கி விட்டது.


(5)உங்களது சமூகத் தொடர்பு அதன் வழியான சமூகம் பற்றிய புரிதல் உங்களது அரசியலுக்கு துணை நிற்குமா?
நான் பல்கலைக்கழக விரிவுரையாளனாக, புவியியற்துறை ஆய்வாளனாக, அதன் தலைவனாக, கலைப்பீடாதிபதியாக, புறநிலைப் படிப்புக்கள் அலகின் இணைப்பாளராக பல்வேறு தளங்களில் புலமை சார்ந்து செயற்பட்டு வந்த போது சமூகத் தொடர்பினையும் அது பற்றிய தெளிவினையும் நன்றாகவே உள்வாங்கியுள்ளேன். இதை விட எனது இலக்கிய, கலையுலகத் தொடர்பும் இதற்கான ஆழத்தினை கொடுத்துள்ளது என நம்புகிறேன். ஊற்று, ஆய்வு, சிந்தனை, மார்க்கம், தமிழ்க் கலை ஆகிய இதழ்களில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதிய போதும்; அகிலம் எனும்; சமூக, அறிவியல் இதழினை வெளியிட்ட போதும் இதனை நான் தெளிவாகவே புரிந்து வைத்துள்ளேன். நான் பல்கலைக்கழகத்தில் இருந்த போது மக்களுடன் இணைந்தவனாகவும் சமூக சேவைக்கான புலம்களைத் தேடுபவனகாவும் இருந்துள்ளேன். நாம் அறிவைப் பரவலாக்கம் செய்பவர்களாகவே பணிபுரிந்து வந்தோம். பொருளாதார, சமூக, அரசியல் மேம்பாட்டை எவ் வழிகளில் வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பதை நாம் அறிவோம். அது மக்களுக்கும் நன்றாகவே தெரியும்.


(6) உங்களுடைய பார்வையில் பாராளுமன்றத் தேர்தல் 2010 எப்படி?
பொதுவாக ஜனநாயக அரசியலைப் பலமுள்ளவர்கள் கேலிக் கூத்தாக்கும் நிலையே காணப்படுகிறது. உலக நாடுகளில் பல கட்சி ஆட்சிமுறை நிலவுவதைக் காணலாம். இங்கு எதிர்க் கட்சிகளை முற்றாக அழிக்கும் நோக்கில் அரசகட்சிகள் செயற்படுவது அரசியல் நாகரிகமற்ற செயலாகும். விமர்சனங்கள், கருத்துப்பரிமாற்றங்கள் என்பன ஆரோக்கியமான ஜனநாயக முறைக்கு அவசியம். தமிழ்ப் பிரதேசத் தேர்தலில் ஆளும் கட்சி ஆதரவாளர்களே பல சுயேட்சைக் குழுக்களை தேர்தலில்; களமிறக்கியமை திட்டமிட்டு ஜனநாயகத்தை புதைகுழிக்குள்; தள்ளும் நடவடிக்கையாகவே மக்கள் உணர்கின்றார்கள். அவர்களின்பால் வெறுப்புக் கொள்கிறார்கள். தமிழர்களின் ஒற்றுமையைச் சிதைப்பது தான் இதன் அடிப்படை நோக்கம். இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் தேர்தலின் பின் தமிழர் கூட்டமைப்புடன் பேசி தமிழருக்கான நிரந்தரத் தீர்வு வேண்டுமென மகிந்த அரசை வற்புறுத்தி வருகின்றன. இன்நிலையில் கூட்டமைப்பின் பலம் சிதைக்கப்பட்டால் பேரம் பேசும் வலு சிதைக்கப்பட்டு தமிழர் அரசியல் பலவீனமாகி விடும். இதனைக் கல்வியில் சிறந்த தமிழ் மக்கள் புரியாமல் இல்லை. ஏப்பிரல் 8ல் மக்கள் இவர்களுக்கு தகுந்த பாடத்தைப் புகட்டுவர். இது நிட்சயம். பொறுத்திருந்து பாருங்கள். இங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தமிழரசுக் கட்சி வேட்பாளர்களாக நிற்கின்றவர்கள் பெரும் பலத்துடன் தேர்வு செய்யப்பட்டு பாராளுமன்றம் செல்வார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.




No comments:

Post a Comment