Thursday, November 1, 2012

துணுக்காய் ‘மங்கை குடியிருப்பில்’ இருந்து விரட்டப்படும் யுத்தத்தால்; நலிவுற்ற மக்கள்!


சிந்தனைக்கூடம் – யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்திக்கான நிறுவனத்தினதும் மாங்குளம் யுகசக்தி எனும் பெண்கள் அமைப்பினதும் ஏற்பாட்டில் மாங்குளம் யுகசக்தி கேட்போர் கூடத்தில் கடந்த சனிக்கிழமை (20.10.2012) அன்று ‘மக்கள் எதிர்கொள்ளும் காணிப்பிரச்சினைகளும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளும்’ எனும் தலைப்பில் முழுநாள் கருத்தரங்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாங்குளம், முத்தையன்கட்டு, முள்ளியவளை, மல்லாவி, துணுக்காய் ஆகிய
பிரதேசங்களிலிருந்து 60ற்கு மேற்பட்ட காணிப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்கள் வருகை தந்திருந்தனர்.
சிந்தனைக்கூடப் பணிப்பாளர் பேராசிரியர் இரா சிவசந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற கிழக்கு மாகாண காணி ஆணையாளர் திரு. கே. குருநாதன் அவர்கள் வளவாளராகக் கலந்துகொண்டார். பொதுவாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் காணி உரிமை சம்பந்தமான சட்டங்கள் பற்றிய விடயங்களைக் குறிப்பட்ட அவர், யாழ்ப்பாணப் பிரதேசங்களில் நிலவும் தேசவழமைச்சட்டத்தினூடான காணி உரிமைகள், வன்னியில் நிலவும் ‘பொமிற்’ காணி உரிமையினை கையாளும் விதங்கள் பற்றி விளக்கமளித்தார். பங்குபற்றுனர் தொடுத்த தனிப்பட்ட காணி தொடர்பான வினாக்களுக்கு சட்டரீதியான விளக்கங்களை வழங்கினார். இதில் மங்கை குடியிருப்பில் வாழ்வோரது பிரச்சினை முக்கியமாகப் பரிசீலனை செய்யப்பட்டது.

Tuesday, October 9, 2012

யாழ்ப்பாணத்தின் அவலம்- பேராசிரியர் இரா.சிவசந்திரன்!



யாழ்ப்பாணக்  குடாநாட்டில் அண்மைக்காலங்களில் நடைபெற்றுவரும் சம்பவங்களை பார்க்கின்ற போது ஒரு பொறுப்புள்ள குடிமகன் என்ற ரீதியில் துன்பமும் வேதனையும் எதிர்காலம் பற்றிய ஜயுறவும் தோன்றுவது தவிர்க்க முடியாததாக உள்ளது. இப் பகுதியில் அரச பிரதிநிதிகள் யார்? யாரிடம் எவ்வகையான அதிகாரங்கள் உள்ளன? மக்களுக்குத்தான் இவர்கள் சேவையாற்றுகின்றார்களா? என்பவை சிக்கலான விடைகாண முடியாத வினாக்களாக எம்முள் எழுகின்றன. இப்பிரதேசம் வாழ் மக்களை அலட்சியப்படுத்தி சிக்கலுக்குள்ளாக்கி பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் சம்பவங்கள் சிலவற்றை இங்கு வரிசைப்படுத்தலாம் என எண்ணுகின்றேன்.

01. யாழ்ப்பாண குடாநாட்டிற்கான வீதி அகலிப்பு நடைபெற்று வருகின்ற போது அதன் எதிர் விளைவுகள் பற்றி எவரும் சிந்தித்ததாக தெரியவில்லை. ‘காப்பெற்’ வீதியாக மாற்றப்படும் போது வீதியில் வாகனங்கள் தொகையாகவும், ஓட்டங்கள் வேகமாகவும், இடம்பெறும். வீதி அபிவிருத்திக்கு திட்டமிடுவோர் இவ் ஆபத்துக்களை உணர்ந்து ஏலவே வீதி ஒழுங்கு முறைகளிற்கேற்ப வீதிக் குறிகாட்டிகளை இடுவது இன்றியமையாத முதற்தேவையாகும். பாதசாரிகளுக்கான நடைபாதைக் குறிகாட்டிகள்; பொருத்தமான இடங்களில் மாநகரசபையின் ஆலோசனை பெற்று இடப்பெறுதல் வேண்டும். மேலும் வேகக்கட்டுப்பாடுகளைக் குறிக்கின்ற அறிவித்தல்கள் பாதையின் ஓரங்களில் காட்சிப்படுத்தப்படவேண்டும். நகர எல்லைக்குள் குறைந்த வேகக்கட்டுப்பாடு பேணப்படுதல் அவசியம். அவ் அறிவித்தல் இன்றும் இப் பிரதேசங்களில் இடப்படவில்லை. இதனால் பலர் தினம் தினம் உயிரிழக்க வேண்டியுள்ளது. 

எமது வழக்கத்தில் உள்ள சில தவறான தமிழ்மொழி பெயர்ப்புகள்- அகரன்



எமது தமிழ் வழக்கத்தில் சில ஆங்கில சொற்களை தவறாக அல்லது மிகைநவிற்சியாக பயன்படுத்தி வருகின்றோம். இச் செயலினை பெருமளவு எமது ஊடகங்களே நீண்ட காலமாக செய்து வருகின்றன. புத்தி ஜீவிகளும் அப்பதவியை முன்னர் வகித்தோரும் தமக்குத் தெரிந்தும் அவற்றைத் திருத்துவதில்லை. சரியான விளக்கத்தை அளிப்பதுமில்லை. மற்றவர்களின் அறியாமையில் தமக்குத்தாமே மாலை போட்டு மகிழும் புத்தியாகச் சீவிப்பவர்களாகவே இவர்கள் உலவுகின்றனர்.

            ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்பது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் தாரக மந்திரம். இதற்கு முன்னுதாரணமாக இங்கு கற்றுக் கொடுத்தோர் இருக்க வேண்டுமல்லவா? இவ் விடயத்திற்கு முதல் உதாரணமாக ‘வாழ்நாள்பேராசிரியர்’ என்ற பதத்தினை ஆராய்வோம். Emeritus என்றால்    Retired or honorably discharged from active Professional duty, but retaining the title of one’s office or position (dean emeritus of the graduate school: editor in chief emeritus  ஒக்ஸ்பேர்ட் ஆங்கில அகராதி விளக்கமளிக்கிறது.


Monday, October 8, 2012

‘சுயமாக எங்களை வாழவிடுங்கள்’ (வன்னிப்பணயம் 3) தினக்கதிருக்காக பேராசிரியர் இரா.சிவசந்திரன்!


ஏ9 பாதையின் மேற்கு புறமாக உள்ள வன்னிப்பெரு நிலப்பரப்பினை மே, யூன் மாதங்களில் சென்று தரிசித்து  அப் பகுதியின் சமூக பொருளாதார நிலைகளை ஆராய சந்தர்ப்பம் கிடைத்தது. கிழக்கு பக்கமாக உள்ள பிரதேசத்திற்கு செல்வதற்கு நீண்ட காலமாக அனுமதி கிடைக்கவில்லை. சென்ற 13ஆம் திகதி வற்றாப்பளை அம்மன் பொங்கல் தினத்தையொட்டி அம்மனை தரிசிப்பதோடு அப்பகுதியையும் தரிசிக்கும் எண்ணம் கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டோம். யாழ் குடாநாட்டிலிருந்து பெருந்தொகையானோர் வாகனங்களில்  வற்றாப்பளை பொங்கலுக்கு செல்வதை  அவதானிக்க முடிந்தது. வட பகுதி ஏ9 பாதை பயணிப்பதற்கு சிரமமாக இருந்தாலும் இவற்றை சமாளித்து பல வாகனங்கள் சென்றன. சாவகச்சேரியில் இருந்து இயக்கச்சி வரை உள்ள ‘துள்ளல் பாதை’ என வர்ணிக்கப்படும் மேடும் பள்ளமும் கொண்ட பாதை நீண்ட காலமாக திருத்தப்படாமல் இருந்து வருகின்றது. இதனூடாக பயணிக்கும் எவரும் இது பற்றி விசனம் கொள்ளாது இருப்பதில்லை.
ஆனையிறவில் வாகன பதிவை மேற்கொண்ட பின் பரந்தன் சந்தியை அடைந்தோம். பரந்தன் முல்லைத்தீவை இணைக்கும் ஏ35 இலக்க வீதி ஏறத்தாழ 40கி.மீ நீளமானது. யுத்தத்திற்கு பின்னர் சிங்கள சுற்றுலா பயணிகள் இதனூடாக முல்லைத்தீவுப் பகுதிக்கு சென்று வருகின்ற போதும் தமிழர்கள் இதனூடாக செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் அம்மன் பொங்கல் தினத்திற்கு சென்றுவரவே தங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.  பரந்தன், முல்லைத்தீவுப் பாதையின் ஊடாக சிறிய வாகனங்கள் செல்லமுடியாத நிலை காணப்பட்டதால் மாங்குளம் சென்று  அதனூடாக முல்லைத்தீவு செல்வதற்காக பயணத்தை மேற்கொண்டோம்;.

இலங்கையில் உள்ளுராட்சி அமைப்புகளும் அவற்றுக்கான தேர்தல் முறைகளும்’ -பேராசிரியர் இரா.சிவசந்திரன்


01. யாழ்ப்பாண தேர்தல் தொகுதியையும், கிளிநொச்சி தேர்தல் தொகுதியையும் உள்ளடக்கிய 19 உள்ளுராட்சி சபைகளுக்கானதும், திருமலை, அம்பாறை, மட்டக்களப்பு பிரதேசங்களில் மொத்தம் 5 உள்ளுராட்சி சபைகளுக்கானதுமான  ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது. கடந்த 30 வருடங்களாக ஆயுதப் போராட்டம் நடைபெற்ற போது உள்ளுராட்சி அமைப்புக்களை பகிஸ்கரித்து  அதன்மூலம் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையே தமிழ் பிரதேசங்களில் காணப்பட்டது. மக்கள் தமக்கு கொடுக்கப்பட்ட அரசியலுரிமைகளை பகிஸ்கரிப்பதன் மூலம் ஜனநாயக ஆட்சி முறைகளை அலட்சியப்படுத்தும் அரசுக்கு எதையும் கற்பிக்க முடியாது. இவ்வாறான பகிஸ்கரிப்பால் மக்களை நேசிக்காத மக்களுக்கான வளங்களையும், வருமானங்களையும் சுரண்டுகின்ற கல்வியறிவற்ற புல்லுருவிகளே இவ் அமைப்புக்களுக்குள் புகுந்து  ஜனநாயகம் என்ற பெயரில் அட்டகாசம் செய்வர். எனவே இதனை தடுக்க வேண்டியது உண்மையாக மக்களை நேசிப்போர்களது கடமையாகும். இதனாலேயே தான் தமிழத் தேசியக் கூட்டமைப்பினர்  தமிழர் பிரதேசங்களில் பரந்துள்ள உள்ளுராட்சி அமைப்புக்களை தம் வசப்படுத்தி அப்பிரதேச மக்களுக்கு நல்லாட்சியை வழங்க முன்வந்துள்ளமை யாவரும் அறிந்ததே. வன்னியில் பெரும்பாலான உள்ளுராட்சி சபைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது போன்று இங்கும் கைப்பற்ற வேண்டியது அவசியமாகும். உள்ளுராட்சி அமைப்புக்களும், தேர்தல் முறைகளும் பற்றி நீண்டகாலமாக இதில் பரிட்சயமற்றிருந்த மக்களுக்கும், வேட்பாளர்களுக்கும் அறிவுறுத்த வேண்டி அதுபற்றி இங்கு விளக்கமளிக்கப்படுகிறது.       


புலம்பெயர்வாழ் தமிழர்களிடம் புலத்தில் தம் புனர்வாழ்வைக் கோரும் தமிழர்கள்!-பேராசிரியர் இரா.சிவச்சந்திரன்


’ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’இ ‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு’ நீண்ட காலமாக தமிழில் ஒலித்துவரும் இப் பொன்மொழிகளின்;; ஆழமான அர்த்தத்தை நாம் இன்னும்  சரியாக உள்வாங்கி ஜீரணித்து கொள்ளவில்லை என்பதனை புலத்தில் வாழ்கின்ற தமிழர்களதும், புலம்பெயர்வாழ் தமிழர்களதும் அண்மைக்கால செல்நெறிகள்  புலப்படுத்துகின்றன.
             தமிழர்கள் உலகில் 40இற்கு மேற்பட்ட நாடுகளில் புலம்பெயர்ந்து செல்வ செழிப்புடனும், கல்வி கேள்விகளில் சிறந்தும், சாதனைகள் பல புரிந்தும் வாழ்வதாக  பெருமைப்பட்டுக் கொள்ளும் நாம் ஈழத்தமிழர் தம் நில பிரதேசத்தில் இன்று எதிர்நோக்கும் வரலாறு காணாத நெருக்கடிகள், பிரச்சினைகள் பற்றி பெரிதும் அக்கறையின்றி இருக்கின்றோம். தமிழ் நிலத்தில் வாழும் தமிழர்கள் 30 வருடத்திற்கு மேற்பட்;ட அவசரகால சட்ட அமுலாக்கத்தின்; கீழ் இராணுவ மயமாக்கல், சிங்கள மயமாக்கல், புத்த மயமாக்கல், உலக மயமாக்கல் என்ற போர்வையில் பல்தேசிய நிறுவனங்களால் சுரண்டலுக்கு உட்படுதல் போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்து வரும் போதும் இவைபற்றி பேசுவதற்கும் வழியற்ற நிலையில்; வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்;. புலம்பெயர்வாழ் மக்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து எமது மக்களின், அரசியல், பொருளாதார, சமூக, கலை, கலாசார, கல்வி, சமயம், சுகநல வாழ்வு ஆகிய துறைகளில் மேம்பாடு காண்பதற்கு உதவி புரிவதற்கான வழிமுறைகள் பற்றி பலர் குறிப்பிட்டிருந்த போதிலும்  முக்கியமான சிலவற்றை இங்கு சுருக்கமாகவும், அழுத்தமாகவும் கூற முற்படுகின்றேன். அவர்களால் அவசரமாகவும், அவசியமாகவும் செய்ய வேண்டிய முக்கிய பணிகளை பின்வருமாறு  வரிசைப்படுத்தலாம்.

ஏ9 பாதையின் இரு மருங்கும் சிங்கள மயம்- (வன்னி பயணம்- 4) – பேராசிரியர் இரா.சிவசந்திரன்!


யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு 08.08.2011 அன்று காலை 6 மணிக்கு  ஹயஸ் வான் ஒன்றில் புறப்பட்டோம். சிங்கள மயம், புத்தர் மயம், இராணுவ மயம் என தமிழ் அரசியல் வாதிகளும், மக்களும் குறைபட்டுக் கொள்ளுதல் யதார்த்தமென யாழ் – கிளிநொச்சி ஏ9 வீதியின் இரு மருங்கிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுமானங்கள் துல்லியமாக உணர்த்தின.
வீதியில் எதிர்ப்படும் சில இந்துக் கோயில்களை தவிர இப்பாதை அநுராதபுரத்திலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் பாதை போன்றே காணப்பட்டது.  குறுக்கு வீதிகள் பலவும் சிங்களப் பெயரையே தாங்கி நின்றன. கிளிநொச்சியில் வீழ்ந்து கிடக்கும் பாரிய தண்ணீர் தாங்கியை பார்வையிடும் சிங்கள மக்கள் ‘குடிக்கும் தண்ணீர் தாங்கியையும் உடைத்தார்களா!’ என கேள்வி எழுப்புவதற்காக அது காட்சிப் பொருளாகவே பேணப்பட்டு வருகின்றது. யாழ் நூலகம் எரிந்தமையைக் காட்சிப் பொருளாக வைக்காதது எமது தவறு என எண்ணத் தோன்றியது.
தண்ணீர்த் தாங்கிச் சந்தியில் உள்ள நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு சென்றோம். பொறியியலாளர் மிகவும் சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டிருந்தார். கிளிநொச்சிப் பிரதேசக் குளங்களின் புனர் நிர்மாணப்பணிகள் வேகமாக இடம்பெற்று வருவதாகக் கூறினார். முப்பது  செயற்திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அதில் 28 திட்டங்களும் தென்னலங்கையின் பாரிய நிறுவனங்களே ஒப்பந்தங்களைப் பெற்றிருந்தன. தென்பகுதியினரே பணியாளர்களாகவும் காணப்பட்டனர். ‘அபிவிருத்தி’ என்பது அவ்வப் பிரதேச மக்களுக்குச் சுவற வேண்டும். அல்லாதுவிடின் அது அபிவிருத்தி என்ற போர்வையில் சுரண்டலாகவே முடியும் என்பதே பலரின் அபிப்பிராயமாக இருந்தது. 

தமிழ்த் தேசியம் என்பது முள்ளிவாய்க்கால் படுகொலையுடன் முடியவில்லை -பேராசிரியர் இரா.சிவசந்திரன்!


நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகள், இந்த நாட்டில் சிங்கள, தமிழ் மக்களிடையே உள்ள  தெளிவான இடைவெளியைக் காட்டி நிற்கிறது. தென்பகுதியில் அரசு சார்ந்த (ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி) கட்சியும், தமிழர் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வெற்றி பெற்றுள்ளன.
 இந்த நாட்டின் கடந்த 62 வருடகால வரலாற்றில் தமிழ்த் தேசியத்தை முதன்மைப்படுத்தாத கட்சிகளுக்கு தமிழ் மக்களது ஆணை கிடைக்கவில்லை. தேசியக் கட்சிகள் என்று தங்களைக் கூறிக் கொள்பவை சிங்கள தேசியத்தையே வலியுறுத்துவதால் அவை எவற்றுக்கும் தமிழர் பகுதியில் இடமில்லை என்பதனை இடம்பெற்ற தேர்தல் முடிவுகள்  துலாம்பரமாக வெளிக்காட்டி நிற்கின்றன.
  இலங்கை என்பது ஒரு தேசியம் என்பதனை தமிழ் மக்கள் ஏற்கவில்லை. கடந்த 62வருடங்களாக மட்டுமன்றி இந்த  உள்ளுராட்சித் தேர்தலிலும் மக்கள்  மீண்டும்  இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். அரசு சொல்வது போல் ஒரு தேசியம் ஒரு நாடு  என்பதனை தமிழ் மக்கள்  என்றும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஆனால் இரு தேசியம் ஒரு நாடு என்பதை ஏற்றுக்கொள்வர்;. தமிழ்த் தேசியம் என்பது முள்ளிவாய்க்கால் படுகொலையுடன் முடிந்துவிடவில்லை என்பதனை ஆணித்தரமாக இத்தேர்தல் மூலம் நிரூபித்துள்ளனர்.
 அரச வளங்களைப் பயன்படுத்தி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சர்கள்  வடபகுதிக்கு வந்திருந்து தீவிரமாகப் பிரசாரம் செய்தது இலங்கை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். அப்படியிருந்தும் மக்கள் அரச கட்சியை நிராகரித்துள்ளனர் என்பதற்கான காரணங்களை அரசு ஆராய வேண்டும்.

இலங்கையில் உள்ளுராட்சி அமைப்புகளும் அவற்றுக்கான தேர்தல் முறைகளும்’ -பேராசிரியர் இரா.சிவசந்திரன்


01. யாழ்ப்பாண தேர்தல் தொகுதியையும், கிளிநொச்சி தேர்தல் தொகுதியையும் உள்ளடக்கிய 19 உள்ளுராட்சி சபைகளுக்கானதும், திருமலை, அம்பாறை, மட்டக்களப்பு பிரதேசங்களில் மொத்தம் 5 உள்ளுராட்சி சபைகளுக்கானதுமான  ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது. கடந்த 30 வருடங்களாக ஆயுதப் போராட்டம் நடைபெற்ற போது உள்ளுராட்சி அமைப்புக்களை பகிஸ்கரித்து  அதன்மூலம் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையே தமிழ் பிரதேசங்களில் காணப்பட்டது. மக்கள் தமக்கு கொடுக்கப்பட்ட அரசியலுரிமைகளை பகிஸ்கரிப்பதன் மூலம் ஜனநாயக ஆட்சி முறைகளை அலட்சியப்படுத்தும் அரசுக்கு எதையும் கற்பிக்க முடியாது. இவ்வாறான பகிஸ்கரிப்பால் மக்களை நேசிக்காத மக்களுக்கான வளங்களையும், வருமானங்களையும் சுரண்டுகின்ற கல்வியறிவற்ற புல்லுருவிகளே இவ் அமைப்புக்களுக்குள் புகுந்து  ஜனநாயகம் என்ற பெயரில் அட்டகாசம் செய்வர். எனவே இதனை தடுக்க வேண்டியது உண்மையாக மக்களை நேசிப்போர்களது கடமையாகும். இதனாலேயே தான் தமிழத் தேசியக் கூட்டமைப்பினர்  தமிழர் பிரதேசங்களில் பரந்துள்ள உள்ளுராட்சி அமைப்புக்களை தம் வசப்படுத்தி அப்பிரதேச மக்களுக்கு நல்லாட்சியை வழங்க முன்வந்துள்ளமை யாவரும் அறிந்ததே. வன்னியில் பெரும்பாலான உள்ளுராட்சி சபைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது போன்று இங்கும் கைப்பற்ற வேண்டியது அவசியமாகும். உள்ளுராட்சி அமைப்புக்களும், தேர்தல் முறைகளும் பற்றி நீண்டகாலமாக இதில் பரிட்சயமற்றிருந்த மக்களுக்கும், வேட்பாளர்களுக்கும் அறிவுறுத்த வேண்டி அதுபற்றி இங்கு விளக்கமளிக்கப்படுகிறது.         

வன்னியில் விளைவித்த வடுக்கள் (வன்னிப்பயணம்-2)-பேராசிரியர் இரா.சிவசந்திரன்!(Att;Photos)


சிந்தனைக்கூடம் – யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மார்ச் முதல் வாரத்தில்  வன்னிப் பிரதேசத்தில் ஒரு மேலோட்டமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.  ஏப்ரல் மாதம் 5ம் திகதி முதல் 12ம் திகதி வரை துணுக்காய், மல்லாவி போன்ற பகுதிகளை மையமாகக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் மேற்கு கரை பிரதேசங்கள் ஆழமான ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன. இவ் ஆய்வு நடவடிக்கையில் பேராசிரியர் இரா.சிவசந்திரன், பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், வி.கமலேஸ்வரன், சி.ரகுலேந்திரன், ஆகியோர் பங்குகொண்டனர். வன்னி நிலம் பற்றிய இவ்வகையான ஆய்வுகள் தொடரவுள்ளன.
‘வன்னிப்பிரதேச வளமும் வாழ்வும் என்ற தலைப்பில் இடம்பெற்ற இவ் ஆய்வில் சமூக கலாசார மேம்பாட்டிற்கான பல  தகவல்களும், தரவுகளும் பெறப்பட்டன.
வவுனிக்குளம், அக்கராயன்குளம், முறிப்புக்குளம், அம்பலப்பெருமாள்குளம், கோட்டைகட்டியகுளம், தென்னியன்குளம், இரணியன்குளம், பனங்காமம், உயிலங்குளம், போன்ற பகுதிகள் ஆய்விற்குட்பட்டன. இவ் ஆய்வு பெரும்பாலும் மக்களிடமும், அரச அதிகாரிகளிடமும், அரச சார்பற்ற நிறுவனங்களுடனும், கல்வியாளர்களிடமும், பாடசாலை ஆசிரிய மாணவர்களிடமும், விடயங்களை கேட்டு அறிவதாகவும்,  உற்றுநோக்கல் மூலம் மக்கள் வாழ்வோடிணைந்த பல அம்சங்களை அவதானித்து தரவுகளை தொகுப்பதாகவும் அமைந்தது.


வளமான வன்னியில் வன்முறையால் விளைவிக்கப்பட்ட வடுக்கள்! – பேராசிரியர் இரா.சிவசந்திரன்(Att;photos)


யாழ்ப்பாணம் சிந்தனைக்கூடம் ஆய்வு அபிவிருததி நிறுவனத்தின் ஏற்பாட்டில் பேராசிரியர் சிவச்சந்திரன் தலைமையிலான குழுவினர் அண்மையில் வன்னிக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை நேரில் அவதானித்தனர். இந்த பயணத்தில் தாம் அவதானித்தவற்றை பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் அனுப்பி வைத்த தகவல்களை இங்கே முழுமையாக தருகிறோம்.
சிந்தனைக்கூடம் – யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் பேராசிரியர் இரா.சிவசந்திரன், பேராசிரியர் சி.க. சிற்றம்பலம், திரு சி.ரகுலேந்திரன், திரு கமலேஸ்வரன், திரு டேவிட் நாகநாதன் ஆகியோர் 11.03.2011 முதல் 14.03.2011 வரை வன்னிப் பயணத்தை மேற்கொண்டு வன்னியின் இன்றைய நிலை, மக்களின் அவல நிலை, பிரதேசத்திற்கான அபிவிருத்தி வாய்ப்புகள் பற்றி ஒரு மேலோட்டமான ஆய்வை மேற்கொண்டோம். அதன் ஆரம்ப அறிக்கையை சிந்தனைக்கூடத்தின் கவனத்திற்கு சமர்ப்பித்திருந்தோம்;. அவற்றில் சில முக்கியமான விடயங்களை ஊடகங்களிற்கு தெரிவிப்பது பொருத்தமென கருதுகின்றோம்.


வடக்கிற்கு படையெடுத்து வந்த வங்கிகளின் தமிழ் விரோத செயற்பாடுகள்- பேராசிரியர் இரா.சிவசந்திரன்!


 வன்னி யுத்தத்தறிற்கு பின்னர் வடமாகாணத்தை அபிவிருத்தி செய்கின்றோம் என்ற கோஷத்துடன் படையெடுத்து வந்த பல்வேறு வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் இங்கு தமிழ் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதையிட்டு இங்குள்ள மக்கள் குழப்பமும், கவலையும் தெரிவிக்கின்றார்கள். யாழ்ப்பாணக் குடாநாட்டில் யுத்தத்தின் பின்னர் ஏறத்தாழ 50ற்கும் மேற்பட்ட வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தமது கிளைகளை அமைத்துள்ளன. ஏலவே இயங்கிய மக்கள் வங்கி, ஹற்றன் தேசிய வங்கி, இலங்கை வங்கி, செலான் வங்கி போன்றவற்றுடன் பல புதிய வங்கிகளும் இணைந்து பிரதேசங்கள் தோறும் தமது கிளைகளை அமைத்து பரவலாக்கியுள்ளன. வங்கிகள் பிரதேசங்களில் அமைக்கப்படும் போது வடபகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமென பொதுவாக நம்பப்பட்டது.  மிகக் குறைந்த பிரதேச இளைஞர்கவே வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். பெருமளவு பணியாளர்கள் தென்பகுதியில் இருந்தே அழைத்து வரப்பட்டுள்ளனர்.
                           பொதுவாக பிரதேச வங்கிகளின் செயற்பாடு அந்த அந்த பிரதேச மக்களின் சேமிப்புக்களை வைப்பிலிட்டு அதனை பல்துறைசார் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு முதலீடு செய்வதற்கு வழங்குவதாகும். புதிதாக தொழில் தொடங்குபவர்களிற்கும், விவசாயிகளுக்கும், கிராமிய கைத்தொழில் முயற்சியாளர்களுக்கும், விவசாயத்தை அபிவிருத்தி செய்யும்; திட்டங்களுக்கும், மீன்பிடியை மேம்படுத்தும் திட்டங்களுக்கும் குறைந்த வட்டியில் இலகு கடன்களை வழங்கி அதனை  அபிவிருத்தி செய்ய உதவுவதே இவ் வங்கிகளின் முக்கிய பணியாகும். தற்போது இரண்டு வருடங்களாக வடமாகாணத்தில் இயங்கும் இவ்வகையான வங்கிகள் இவ்வாறான திட்டங்களை நல்லமுறையில் மக்கள் விரும்பும் வண்ணம் மேற்கொள்வதாக தெரியவில்லை.

Wednesday, February 22, 2012

வன்னிப்பிரதேசக் குடித்தொகை வளர்ச்சியும் குடித்தொகைப் பண்புகளும்.


பேராசிரியர்.இரா.சிவசந்திரன்

இலங்கையின் வன்னிப்பிரதேசம் 7859.3 சதுரக் கிலோமீற்றர் (2924 சதுரமைல்)பரப்பளவைக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாடும் தீவுகளும் தவிர்ந்த வடமாகாணப்பகுதியே வன்னிப் பிரதேசமென வழங்கப்படும். இதற்குத் தெற்கேயும் கிழக்கேயும் உள்ள சில பகுதிகள் வன்னிப் பிரதேசத்தினுள் அடங்குவனவெனக் கொள்ளப்படுகின்ற போதிலும் இக்கட்டுரை மேற்படி பிரதேசத்தையே வன்னிப் பிரதேசமெனக் கொள்கிறது. இது இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 11 வீதத்தையும் வடமாகாணத்தின் மொத்த நிலப்பரப்பில் 87.2 வீதத்தையும் கொண்டுள்ளது. மன்னார் மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம், வவுனியா மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், என்பன இதனுள் அடங்கும். இவை நிர்வாக வசதிக்காக பதினைந்து உதவிஅரசாங்கஅதிபர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை மன்னாரில் நான்கும், முல்லைத்தீவில் நான்கும், வவுனியாவில் நான்கும், கிளிநொச்சியில் மூன்றுமாக அமைந்துள்ளன.

குடித்தொகை வளர்ச்சி 1871 முதல் 1981 வரை

இலங்கையின் முதலாவது ஒழுங்கமைக்கப்பட்ட நாடு முழுவதற்குமான குடித்தொகைக் கணிப்பு 1871 இல் இடம்பெற்றது. இதன்பின் 1881, 1891, 1901, 1911, 1921, 1931, 1946, 1953, 1963, 1971, 1981 ஆகிய ஆண்டுகளில் குடித்தொகைக் கணிப்புகள் இடம்பெற்றன. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறவேண்டிய இக் கணிப்புகள் 1941இல் தடைப்பட்டமைக்கு இரண்டாம் உலக மகாயுத்த நெருக்கடி காரணமாக அமைந்தது. எனினும் இக் கணிப்பீடு 1946 இல் இடம்பெற்றது. 1951இல் இடம்பெறவேண்டிய கணிப்பு 1953இல் மேற்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து 1963இல் அடுத்த கணிப்பு இடம்பெற்றது. இதன்பின் இலங்கை தமது வழக்கமான கணிப்பாண்டிற்கு 1971 இல் திரும்பியது. 1991, 2001 இல் இடம்பெற வேண்டிய முழு நாட்டிற்குமான குடித்தொகைக் கணிப்பு வன்னிப் பிரதேசத்தில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெறவில்லை. 2012 ஆம் ஆண்டு தேசியக் குடித்தொகைக் கணிப்பீடு மோற்கொள்வதற்கான ஆரம்பப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
வன்னிப் பிரதேசக் குடித்தொகை 1981 முதல் மூன்று தசாப்தங்களாக யுத்த சூழ்நிலையால் உள்ளுர் குடிநகர்வுகள், வெளியூர் குடிநகர்வுகள், வெளிநாட்டு குடிப்பெயர்வுகள் என இடம்பெற்று வந்துள்ளன. இவை எவையும் கால ரீதியான முறையான கணிப்பீடுகளுக்குள் வரவில்லை. 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற வன்னியின் இறுதி யுத்தத்தின் போது வன்னியின் மொத்தக் குடித்தொகையும் அகதிகளாக வெளியேறி வவுனியா முகாம்களில் முடக்கப்பட்ட நிலை தோன்றிற்று. உலக வரலாற்றில் குறுங்காலப்பகுதியில் குறிப்பிட்ட பிரதேசத்திலிருந்து முழுமையாக குடித்தொகை வெளியேற்றப்பட்ட நிகழ்வு இங்கேயே இடம்பெற்றுள்ளதெனலாம். அம் மக்கள் இப்பொழுது தான் மீளவும் குடியேறி வருகின்றனர். மீள் குடியேற்றம் முற்றுப்பெறவில்லை. 2012ல் பெறப்படவுள்ள உத்தியோகபூர்வ குடித்தொகை கணிப்பீட்டின் ஊடாகவே இவைபற்றி முறையாக ஆராயமுடியும். அதுவரை 1981 ஆம் ஆண்டு வரை பெறப்பட்ட குடித்தொகைக் கணிப்பீடுகளையே உத்தியோக ரீதியாக பயன்படுத்தப்பட வேண்டுமாகையால் அவ் ஆண்டுவரையான தரவுகள் ஊடாகவே இவ் ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது.



அட்டவணை: வன்னிப் பிரதேசத்தினதும் இலங்கையினதும் குடித்தொகை
வளர்ச்சி 1871 முதல் 1971 வரை


ஆண்டு வன்னிப் இலங்கை
பிரதேசம்

1871 - 2400380
(மார்ச்)

1881 - 2759738
(பெப்ரவரி)

1891 46774 3007789
(பெப்ரவரி)

1901 48662 3565954
(மார்ச்)

1911 51012 4106350
(மார்ச்)

1921 525575 4498605
(மார்ச்)

1931 51591 5306971
(பெப்ரவரி;)

1946 63704 6657339
(மார்ச்)

1946 94731 8097895
(மார்ச்)

1953 163270 10582064
(ஜூலை)

1971 224735 12689899
(ஒக்டோபர்;)

1981 278800 14846800

ஆதாரம்:- குடிசன கணிப்பு, 1981

வன்னிப் பிரதேசத்திற்குரிய குடித்தொகை விபரங்களை 1871 தொடக்கம் 1981 வரை இலங்கைக் குடித்தொகைக் கணிப்பு அறிக்கைகளிலிருந்து பெற முடிகின்றது. 1871 முதல் 1981 வரையான வன்னிப் பிரதேச குடித்தொகை வளர்ச்சியும் இலங்கையின் மொத்தக் குடித்தொகை வளர்ச்சியும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.

அட்டவணைத் தரவுகளின்படி வன்னிப்பிரதேசத்தின் மொத்தக் குடித்தொகை 1891 இல் 46,774 ஆக இருந்து 1971இல் 2,24,735 ஆக அதிகரித்துள்ளதைக் காணலாம். இது 300 வீத அதிகரிப்பாகும். இதே காலப்பகுதியில் இலங்கையின் மொத்தக்குடித்தொகை 323 வீதமாக வளர்ச்சி கண்டது. குடித்தொகை மாற்றங்கள்
வன்னிப் பிரதேசத்தின் குடித்தொகை சில காலங்களில் குறைவாகவும் இன்றும் சில காலங்களில் அதிகமாகவும் வளர்ச்சி கண்டது. பொதுவாக 1946 ஆம் ஆண்டுக்கு முன்னர் குடித்தொகை வளர்ச்சி குறைவாகவே இருந்தது. வன்னிப்பிரதேசத்தின் வருடச்சராசரி வளர்ச்சி வீதம் 1931 ஆம் ஆண்டுவரை 0.5 வீதத்திற்கு மேலாக அதிகரிக்கவில்லை. 1946 ஆம் ஆண்டுக்கு முன்னர் சில குடிமதிப்பீட்டாண்டிடைக் காலங்களில் வன்னிப் பிரதேசம் முழுவதும் குடித்தொகை இழப்பு ஏற்பட்டது. மன்னார் மாவட்டத்தில் இவ் இழப்பு அதிகளவு ஏற்பட்டுள்ளது. 1881 - 1901 இடையிலும் 1911 – 1921 இடையிலும் குடித்தொகை இழப்புகள் இங்கு இடம்பெற்றுள்ளன.

1946 ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற குடித்தொகை இழப்புகளுக்கும், குடித்தொகையின் மெதுவான அதிகரிப்பிற்கும் மலேரியா, கலரா போன்ற தொற்று நோய்கள் இப்பகுதிகளில் அக்காலங்களில் பரவியமையே காரணமாகும். அக்காலங்களில் மருத்துவ, விஞ்ஞான தொழில்நுட்ப முன்னேற்றக்குறைவினால் சிசு மரண வீதம், பிரசவத்தாய்மார் மரணவீதம் என்பன அதிகமாக காணப்பட்டன. மேலும் அன்றைய மக்கள், கல்வியறிவுக் குறைவின் காரணமாகச் சுகாதாரமற்ற வாழ்வு வாழ்ந்தனர். ஆரோக்கிய வாழ்வை வழங்கக்கூடிய சுகாதார நிறுவனங்களும் குறைவாகவே காணப்பட்டன. இக்காரணங்களால் 1946 இன் முன்பு இறப்புவீதம் அதிகமாக இருந்தது. எடுத்துக்காட்டாக 1906-1923 வரை தேசிய இறப்புவீதம் 1000 பேருக்கு 30 – 38 என்றவாறு உயர்ந்து காணப்பட்டது. 1946இல் இது 20 ஆகவும் 1947 இல்14 ஆகவும் வீழ்ச்சிகண்டது. 1946 இல் சிசு மரண வீதம் 1000 பிறப்புக்கு 141 ஆக இருந்தது. 1947 இல் 82 ஆக வீழ்ந்தது. பிரசவத்தாய்மார் மரணம் 1946 இல் 1000 பேருக்கு 16 ஆக இருந்தது. 1950 இல் 6 ஆக வீழ்ச்சி கண்டது. எனவே 1946 ஆம் ஆண்டு குடித்தொகை வளர்ச்சிப் போக்கில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

வன்னிப் பிரதேசக் குடித்தொகை 1946 – 1953 குடிமதிப்பிட்டாண்டிடைக் காலத்திலே 48.7 வீதமாக அதிகரித்துள்ளது. இது 7.0 வருடச் சராசரி வளர்ச்சி வீதமாகும். இவ்இடைக்காலத்திலே தேசிய வருடச்சராசரிக் குடித்தொகை வளர்ச்சி வீதம் 3.1 ஆக மாத்திரமே காணப்பட்டது. 1946 – 1953 இடைப்பட்ட கால குடித்தொகை வளர்ச்சியானது வன்னிப் பிரதேசம் முழுவதும் சடுதியானதோர் அதிகரிப்பபைக் காட்டுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் 78.3 வீத அதிகரிப்பும், வவுனியா மாவட்டத்தில் 51 வீதமான வளர்ச்சியும் மன்னார் மாவட்டத்தில் 39 வீத வளர்ச்சியும் 1946 – 1953 குடிமதிப்பீட்டாண்டைக் காலத்தே ஏற்பட்டது. 1931 1946 குடிமதிப்பீட்டாண்டைக் கால வளர்ச்சி ஓரளவு அதிகமாக காணப்படுவதற்கு பத்தாண்டுக்கொருமுறை எடுக்கப்படவேண்டிய குடிமதிப்பு இக்காலத்தே பதினைந்து வருட இடைவெளியில் எடுக்கப்பட்டதே காரணமாகும். 1946 இன் பின்னர் ஏற்பட்ட சடுதியான குடியதிகரிப்புக்கு பிறப்பு வீதம் நிலையாக இருக்க இறப்புவீதத்திலேற்பட்ட வீழ்ச்சியே காரணமாகும். இவ் இறப்பு வீத வீழ்ச்சிக்கு 1946 இல் மலேரியா நோய்த்தடைக்காக நாடு முழுமைக்கும் டி.டி.ரி மருந்து தெளிக்கும் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதே உடனடிக் காரணமாகும். இதனைத் தவிர நாட்டின் சுகாதார சேவையில் ஏற்பட்ட துரித அபிவிருத்தியும் காரணமாக அமைந்தது. இக்காலத்திலே கிராமங்கள் தோறும் சுகாhதாரவசதிகள் அதிகரிக்கப்பட்டன. சுற்றுப்புறச் சூழ்நிலைகளைச் சுத்தமாக வைத்திருக்கச் செய்வதில் அரசு கவனம் செலுத்தியது. பாடசாலைப் பிள்ளைகளுக்கு இலவச பால், மதிய உணவு விநயோகம் என்பன குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க துணைபுரிந்தன. பொதுவாக இலங்கை மக்களது ஆரோக்கியம் பேணப்பட்டதற்கு உணவு மானிய முறை இக்காலத்திலே அறிமுகப்படுத்தப்பட்டமையும் முக்கிய காரணமாகும். இம் முறையினால் மக்கள் அரிசியையும் ஏனைய உணவுப்பொருட்களையும் மலிவாகப் பெறமுடிந்தது. இதனால் மக்களது உணவில் ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கவே ஆயுட்காலம் அதிகரித்ததோடு ஆரோக்கியமான வாழ்வால் இறப்பு வீதத்திலும் அதிகளவு வீழ்ச்சி ஏற்பட்டது. இக் காலத்திலே இலவசக்கல்விமுறை அறிமுகத்தால் கல்வியறிவு வளர்ந்தமையும், தொற்றுநோய்த்தடை மருந்துகள் பழக்கத்திற்கு வந்தமையும் இறப்புவீத வீழ்ச்சிக்குரிய மேலும் சில காரணங்களாகும்.

வன்னிப் பிரதேசம் குடித்தொகை 1946 இன் பின்னர் வேகமாக அதிகரித்தமைக்கு இயற்கை அதிகரிப்பு மாத்திரம் காரணமன்று, பெருமளவு இடம்பெற்ற குடிநகர்வும் முக்கிய காரணமாக அமைகின்றது. இலங்கை சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து 1950 ஆம் 1960 ஆம் ஆண்டுகளில் வன்னிப் பிரதேசத்தில் பழைய நீர்ப்பாசனக் குளங்களைப் புனரமைப்புச் செய்து திட்டமிட்ட குடியேற்றங்கள் பெருமளவு ஏற்படுத்தப்பட்டன. யாழ்ப்பாணக் குடாநாடு அதனைச் சேர்ந்த தீவுகள் என்பவற்றிலிருந்தும் ஏனைய அண்மைய பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து குடியேற்றத்திட்டங்களில் குடியேறினர். இதனாலும் குடித்தொகை அதிகரிப்பு ஏற்பட்டது. 1953-1963 குடிமதிப்பீட்டாண்டிடைக் காலத்திலே வன்னிப்பிரதேசக் குடித்தொகையின் வளர்ச்சி 72.4 வீதமாக அதிகரித்திமைக்கு இதுவே முக்கிய காரணமாகும்.கிளிநொச்சி மாவட்டத்திலும், வவுனியா மாவட்டத்திலும் அதிகளவு குடியேற்றத் திட்டங்கள் அமைக்கப்பட்டமையால் இப்பகுதிகளின் குடிவளர்ச்சி 1953-1963 குடிமதிப்பீட்டாண்டிடைக் காலத்திலே முறையே 117.1 வீதமாகவும் 95.4 வீதமாகவும் அதிகரித்து காணப்பட்டது. 1963-1971 இடைப்பட்ட காலத்திலே குடியதிகரிப்பில் ஓரளவு வீழ்ச்சி காணப்படுகின்றது. குடும்பக்கட்டுப்பாட்டுத்திட்டத்தால் இயற்கை அதிகரிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியும் இக்காலத்திலே அதிகளவு குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கப்படாமையும் இதற்கான காரணங்களெனலாம். எனினும் இவ் இடைக்காலத்திலே தேசிய குடித்தொகையின் வருடச் சராசரி வளர்ச்சி வீதம் 2.2 ஆகக் காணப்பட, வன்னிப் பிரதேசத்தின் குடித்தொகையின் வருடச்சராசரி வளர்ச்சி 4.7 ஆகக் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

குடியடர்த்தியும் பரம்பலும்

வன்னிப் பிரதேசத்தின் 1971 ஆம் ஆண்டுக்குரிய சராசரிக்குடியடர்த்தி சதுரமைலுக்கு 77 பேராகும். இலங்கையின் சதுரமைலுக்குரிய குடியடர்த்தியான 508 பேருடன் யாழ்ப்பாணக்குடாநாட்டின் குடியடர்த்தியான 1513 பேருடனும் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகும். வன்னிப்பிரதேசத்தின் பெருமளவு பரப்பில் காடுகள் பரந்திருப்பதே இதற்குரிய முக்கிய காரணமாகும்.

குடித்தொகைத் தரவுகளின்படி 1891 முதல் 1946 வரையான ஜம்பத்தைந்தாண்டு காலத்தில் சதுரமைலுக்குரிய குடியடர்த்தியில் 6 பேரே அதிகரித்திருந்தனர். 1946 முதல் 1971 வரையான இருபத்தைந்து ஆண்டு காலத்தில் சதுரமைலுக்குரிய குடியடர்த்தியில் 55 பேர் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு இயற்கையான குடியதிகரிப்பும், குடிநகர்வால் ஏற்பட்ட குடி அதிகரிப்பும் இவ் இடைக்காலத்தில் அதிகரித்தமையே காரணமாகும். 1946 இன் பின் வன்னிப் பிரதேசக்குடியடர்த்தி வேகமாக அதிகரித்துவரும் போக்கை காட்டுகின்றது. எனினும் 1971 இல் வன்னிப்பிரதேசத்தின் குடியடர்த்தி யாழ்ப்பாணக் குடாநாட்டுக் குடியடர்த்தியை விட இருபதுமடங்கு குறைவாகவும் இலங்கையின் குடியடர்த்தியைவிட 7 மடங்கு குறைவானதாகவும் உள்ளது இது 1963 இல் முறையே இருபத்தைந்து மடங்கு குறைவாகவும் எட்டு மடங்கு குறைவாகவும் காணப்பட்டது.

வன்னிப்பிரதேசத்தின் புவியியல் ரீதியான குடிப்பரம்பல், பொதுவாக தொட்டம் தொட்டமாகக் குடிச்செறிவு அமைந்திருப்பதையே காட்டுகின்றது. இவை பெரும்பாலும் குளங்களை அண்டிய குடியிருப்புகளாகவே அமைந்துள்ளன. மன்னார் தீவு, கட்டுக்கரை குளத்தையண்டிய பகுதிகள், வவுனியா நகரம், கிளிநொச்சி குடியேற்றத்திட்டப்பகுதிகள், முள்ளியவளைப்பகுதி, முல்லைத்தீவு நகரம், என்பனவே குறிப்பிடத்தக்ககுடிச்செறிவு கொண்ட பகுதிகளாகும். குடிச்செறிவு குறைந்த பகுதிகள் குளங்களற்ற பகுதிகளாகவும், காடுகள் அடர்ந்த பகுதிகளாகவும், பெருமளவு பயன்படுத்தப்படாத நிலத்தையடக்கிய பகுதிகளாகவும் காணப்படுகின்றன.


1981ஆம் ஆண்டு குடித்தொகைப் பண்புகள்

1981 ஆம் ஆண்டுக் குடித்தொகை கணிப்பீட்டின்படி இங்கு ஆய்வுக்குட்பட்ட வன்னிப் பிரதேசக் குடித்தொகை 2இ78இ800 ஆகும். இது இலங்கையின் மொத்தக் குடித்தொகையின் 1.8 வீதமாகவும், வடமாகாணக்குடித்தொகையின் 25.7 வீதமாகவும் உள்ளது. வடமாகாணத்தின் மொத்த நிலப்பரப்பில் யாழ்ப்பாணக்குடாநாடு 12.8 வீதத்தை உள்ளடக்கியுள்ள போதிலும் இங்கேயே அதிகளவு குடித்தொகை காணப்படுகின்றது. இதற்கு மாறாக வன்னிப் பிரதேசம் வடமாகாணத்தின் மொத்த நிலப்பரப்பில் 87.2 வீதத்தை கொண்டிருந்த போதிலும் இங்கு குறைவான குடித்தொகையே உள்ளது. 1981 இல் வடமாகாணக்குடித்தொகையில் 74 வீதத்தினர் குடாநாட்டிலும் 26 வீதத்தினர் வன்னிப்பிரதேசத்திலும் காணப்பட்டனர். 1963 ஆம் ஆண்டுக் குடித்தொகை மதிப்பீட்டின் போது இத்தொகை முறையே 77 வீதமாகவும் 23 வீதமாகவும் காணப்பட்டது. 1901 முதல் 1953 வரை இடம்பெற்ற குடித்தொகை மதிப்புகளின் தரவுகளின்படிசராசரியாக 86 வீதத்தினர் குடாநாட்டிலும் 14 வீதத்தினர் வன்னிப் பிரதேசத்திலும் காணப்பட்டனர்.

கிராம, நகரக் குடித்தொகை

வன்னிப் பிரதேசத்தின் 1981 ஆம் ஆண்டுக்குரிய நகரக்குடித்தொகை 39427 ஆகவும், கிராமக் குடித்தொகை (பெருந்தோட்டம் உட்பட) 185308 ஆகவும் உள்ளது. இது முறையே 17.5 விதமும் 82.5 வீதமுமாகும். இலங்கையின் நகரக்குடித்தொகை வீதமான 22.4 உடன் ஒப்பிடுகையில் இது குறைவாகவே உள்ளது. இலங்கையில் மாநகரசபை, நகரசபை, என நகரங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இந் நிர்வாகப் பிரிவின் எல்லைக்குள் வாழ்பவர்கள் நகரவாசிகளெனக் கணிக்கப்படுகின்றனர். வன்னிப் பிரதேசத்தில் 89 கிராமசேவகர் பிரிவுக்குட்படும் கிராமங்களும் நான்கு நகரங்களும் உள்ளன. இவற்றுள் வவுனியா நகரசபை அந்தஸ்தையும் ஏனைய மூன்றும் பட்டின சபை அந்தஸ்தையும் பெற்றுள்ளன. நான்கு நகரங்களுள் மன்னார், முல்லைத்தீவு என்பன கரையோரமாகவும் வவுனியா, கிளிநொச்சி என்பன நடுவேயும் அமைந்துள்ளன. வன்னிப் பிரதேசத்தின் மொத்த நகரக் குடித்தொகையில் 52 வீதத்தை வவுனியா மாவட்டம் அடக்கியுள்ளது. வவுனியா பட்டினம் தனியாக 40 வீத நகரக்குடித்தொகையைக் கொண்டுள்ளது. எஞ்சிய நகரத் தொகையில் மன்னார் மாவட்டம் 28 வீதத்தையும் கிளிநொச்சி மாவட்டம் 20 வீதத்தையும் அடக்கியுள்ளது.

குடித்தொகை கூட்டு (1981)

குடித்தொகைக் கட்டினுள் அடங்கும் வயதமைப்பு, ஆண் பெண் விகிதம், இனப்பிரிவு, மதப்பிரிவு, வேலைப்பகுப்பு என்பன பற்றிய ஆய்வுகள் சமூக, பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் பெறுகின்றன.

வயதமைப்பு

வன்னிப் பிரதேசக் குடித்தொகையில் வயதமைப்பை நோக்கும் போது இளம்வயதுப் பிரிவினர் அதிகமாகக் காணப்படுவதை முக்கிய அம்சமாகக் கொள்ளலாம். 1981 ஆம் ஆண்டுக் குடிக்கணிப்பின்படி இங்கு 42.5 வீதத்தினர் 14 வயதிற்குட்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர். 52.7 வீதத்தினர் தொழில் புரியக்கூடிய 15 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்டோராவர். மகப்பேற்று வளம்மிக்க 15 – 44 வயதுப் பிரிவினர் 43 வீதத்தினராகக் காணப்படுகின்றனர். 60 வயதிற்கு மேற்பட்டோர் 4.8 வீதத்தினராக உள்ளனர். 15 வயதிற்கு குறைந்தவர்களும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் சார்ந்திருப்போர் தொகையில் அடங்குவர். தொழில்புரியும் ஒவ்வொரு 100 பேரில் இங்கு 90 பேர் தங்கி வாழ்கின்றார்கள். நாடு முழுவதற்குமான தரவின்படி 100 பேரில் தங்கிவாழ்வோர் 84 பேராகும். தங்கிவாழும் இப்பிரிவினர் பெருமளவு செலவினங்களை ஏற்படுத்துபவர்களாகவும் உள்ளனர். இலங்கையிலும் ஏனைய வளர்முக நாடுகளிலும் குடித்தொகையில் 40-50 வீதத்தினர் 15 வயதிற்குக் குறைந்தவர்களாகக் காணப்படுகின்றனர். வளர்ச்சியடைந்த நாடுகளில் இவ் வயதுப் பிரிவினர் 20 33 வீதத்தினராகவே உள்ளனர்.
இலங்கையிலன் குடித்தொகையில் இளம்வயதுப் பிரிவினர் அதிகம் காணப்படுவதினால் அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, கல்வி, சுகாதார வசதிகள் என்பவற்றிற்காக அரசுக்குப் பெருமளவு செலவினம் ஏற்படுகின்றது. இது இலங்கை எதிர்நோக்கும் பாரிய பொருளாதார பிரச்சனைகளுக்கு முக்கியத்துவமானதொரு காரணமாகவும் அமைகிறது. 1981 ஆம் ஆண்டு இலங்கையின் குடித்தொகையில் 39.3 வீதத்தினர் 15 வயதிற்குட்பட்டவர்களாக காணப்பட்டனர். பொதுவாக வன்னிப் பிரதேசக் குடித்தொகையிலும் இவ் வீதம் தேசிய வீதத்திலும் சற்று அதிகமாக காணப்படுகின்றது.

ஆண், பெண் விகிதம்

குடித்தொகையில் ஆண்,பெண் பாகுபாடு பற்றிய ஆய்வும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. சமூக, பொருளாதார அபிவிருத்தித் திட்டமிடலுக்கு இவ்விபரங்கள் அவசியம் வேண்டப்படுகின்றன. ஆண், பெண் வயதமைப்பும், விகிதாசாரமும் குடித்தொகை வளர்ச்சிக்கான காரணத்தைத் தேடுவோர்க்கு முக்கியமானதாகும்.
வன்னிப் பிரதேசத்தின் மொத்தக் குடித்தொகையில்(1981) 1,23,594 ஆண்களும் 1,01,141 பெண்களும் காணப்படுகின்றனர். இதிலிருந்து 22,453 ஆண்கள் பெண்களைவிடக் கூடதலாக இங்கு உள்ளதை அவதானிக்கலாம். ஒவ்வொரு 100 பெண்களுக்கும் 122 ஆண்கள் என்ற விகிதத்தில் பால் விகிதம் இங்கு அமைந்துள்ளது. இலங்கைக்குரிய அவ் விகிதம் 100 பெண்களுக்கு 106 ஆண்கள் என்றவாறு அமைகின்றது. எனவே தேசிய விகிதத்திலும் இங்கு அதிகமாக காணப்படுகின்றது.

குடித்தொகைத் தரவின்படி யாழ்ப்பாண மாவட்ட வன்னிப்பகுதியிலேயே ஆண், பெண் விகிதம் ஆண் சார்பாக அதிகமாக உள்ளது. இதற்கு அடுத்த இடத்தை வவுனியா மாவட்டம் வகிக்கின்றது. இப்பகுதிகளில்; அதிகளவு விவசாயக் குடியேற்றத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டமையால் அதிகளவு ஆண்கள் குடிநகர்ந்து வந்தமையே இதற்கு முக்கிய காரணமெனலாம். காடுகளால் சூழப்பட்ட குடியேற்றத்திட்டப்பகுதிகளில் பாதுகாப்பு உறுதியற்று இருப்பதாலும், கல்வி வசதி, சுகாதாரவசதி, போக்குவரத்துவசதி என்பன குறைவாக இருப்பதாலும் குடும்பத்தலைவன் தனது மனைவி பிள்ளைகளை பிறந்த ஊரில் விட்டு வருவதையே விரும்புகின்றான். இதுவே குடியேற்றத்திட்டப் பகுதிகளில் ஆண்கள் குடித்தெகை அதிகமாக இருப்பதற்குரிய முக்கிய காரணமாகும். குடியேற்றத்திட்டத்திற்கு மாத்திரமன்றி வர்த்தகம், போக்குவரத்துப் போன்ற தொழிற்றுறைக்காகவும் ஏனைய பொருளாதார நடவடிக்கைகளுக்காகவும் ஆண்கள் குடிநகர்வு இங்கு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் அதனைச் சேர்ந்த தீவுப்பகுதிகளிலுமிருந்தே அதிகளவு குடிநகர்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1981 ஆம் ஆண்டுக் குடித்தொகை மதிப்பு அறிக்கை தரும் பிறந்த இடம் பற்றிய தரவுகளிலிருந்து வவுனியா மாவட்ட குடித்தொகையில் 58 வீதத்தினரும் மன்னார் மாவட்டக் குடித்தெகையில் 71 வீதத்தினரும் அம் மாவட்டங்களுக்கு வெளியே பிறந்தவர்களாகவே உள்ளனர். எனவே வன்னிப் பிரதேசக் குடித்தொகை வளர்ச்சியில் குடிநகர்வு முக்கிய இடத்தை வகிக்கின்றது. குடித்தொகை ஆண் சார்பாக இருப்பதற்கு குடிநகர்வு மாத்திரம் காரணமன்று. பிறப்பில் ஆண்களின் பிறப்பு அதிகமாக இருப்பதும், இறப்பு விகிதத்தில் பெண்களின் பங்கு அதிகமாக இருப்பதும் மேலதிக காரணங்களெனத் தேசிய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இனம்

இலங்கை பல இன மக்கள் வாழும் நாடென்பதை வன்னிப்பிரதேசமும் பிரதிபலிக்கின்றது. எனினும் இங்கு சில இனத்தவர்களே செறிந்து வாழ்கின்றனர். இலங்கையில் வாழ்கின்ற ஒவ்வொரு இனத்திற்கும்
வித்தியாசமான வரலாற்று, சமூக மதப் பின்னனிகள் உண்டு. 1911 ஆம் ஆண்டுக் குடித்தொகைக் கணிப்பீட்டிலிருந்தே தற்பொழுது குறிக்கப்படும் இனப்பிரிவுகளின் அடிப்படையில் தரவுகள் பெறப்பட்டு வருகின்றன. மொழி, மத புவியியற் பின்னணிகள் இனப்பாகுபாட்டில் முக்கியத்துவம் வகிக்கின்றன.
வன்னிப் பிரதேசம் அதிகளவில் தமிழர் வாழும் பகுதியாகும். தமிழர்களுக்கு வன்னி நிலத்துடன் ஒன்றிய நீண்ட வரலாற்றுப் பின்னணி உள்ளதால் இப்பிரதேசம் தமிழரது பாரம்பரியத் தாயகத்தின் ஒரு பகுதியெனக் கொள்ளப்படுபகின்றது. வன்னிப் பிரதேசத்தின் மொத்தக் குடித்தொகையில் 62.2 வீதமானவர்கள் இலங்கைத்தமிழர்களாவர். இவ் வீதம் கிளிநொச்சி மாவட்டத்தில்; 79.8மூ ஆகவும் வவுனியா மாவட்டத்தில் 51மூ ஆகவும் உள்ளது. வன்னிப் பிரதேசத்தின் மொத்தக்குடித்தொகையில் இந்தியத் தமிழர் 16.1 வீதத்தினராகக் காணப்படுகின்றனர். மலையகப்பெருந்தோட்டங்களுக்குக் கூலித்தொழிலாளர்களாகப் பிரித்தானியரால் தென்னிந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்டவர்களின் வழித்தோன்றல்களே இவர்களாகும். இன்று பெருந்தோட்டத்தில் நிலவும் வேலையில்லாப் பிரச்சனை இனப்பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் வன்னிப்பிரதேசத்திற்குக் குடிநகர்ந்து வந்து விவசாயக் கூலித் தொழிலாளர்களாக இவர்கள் வாழ்கின்றனர். இலங்கை, இந்தியச் சோனகர் வன்னிப் பிரதேச மொத்தக்குடித்தொகையில் 12.5 வீதத்தினராவர். இவர்கள் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரிலும், அண்மைய பல கிராமங்களிலும் செறிந்து வாழ்கின்றனர். மன்னார் மாவட்ட மொத்தக் குடித்தொகையில் இவர்களின் பங்கு 26.8 வீதமாகும். மன்னார் வர்த்தகத்துறைமுகமாக விளங்கிய காரணத்தால் இவர்களது குடியிருப்புகள் இங்கு அதிகம் ஏற்பட்டன.

வன்னிப்பிரதேசக் குடித்தொகையில் தமிழ் பேசும் மக்கள் 90.9 வீதத்தினராவர். இலங்கைத்தமிழர், இந்தியத்தமிழர், இலங்கைச்சோனகர், இந்தியச்சோனகர், ஆகியோர் தமிழ் மொழி பேசும் மக்களாகும்.வவுனியா தெற்கு சிங்கள உ.அ.அ பிரிவைத்தவிர ஏனைய பகுதிகளில் தமிழ்மொழி பேசும் மக்களே பெரும்பான்மையினராக உள்ளனர். வன்னிப் பிரதேசத்தில் சிங்கள மொழி பேசும் மக்கள் மொத்தக் குடித்தொகையில் 9 வீதத்தினராகும். வவுனியா மாவட்டத்தில் மொத்தக்குடித்தொகையில் இவர்களது பங்கு 16.3 வீதமாகவுள்ளது. மன்னார் மாவட்டத்தின் குடித்தொகையில் 4.6 வீதத்தினர் சிங்கள மக்களாவர். மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரம், மடுறோட் ஆகிய பகுதிகளில் இவர்களது பரம்பல் காணப்படுகின்றது. வவுனியா மாவட்டத்தில் மாமடுவ, மடுக்கந்தை. ஈரப்பெரியகுளம், உலுக்குளம், ஆகிய கிராமசேவகர் பிரிவுகள் சிங்கள மக்கள் செறிவாக வாழும் பகுதிகளாகும். 1963 ஆம் ஆண்டுக் குடித்தொகை கணிப்பீட்டை ஒப்பிட்டு நோக்கும் போது வன்னிப் பிரதேசத்தில் குறிப்பாக வவுனியா மாவட்டத்தின் மொத்தக் குடித்தொகையில் சிங்களமக்களின் வீதம் அதிகரித்துள்ளதைக் காணலாம்.

மதம்

வன்னிப் பிரதேசம் தமிழர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசமாக இருப்பதால் தமிழரது முக்கிய மதமான இந்துமதத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர். வன்னிப் பிரதேசத்தின் மொத்தக் குடித்தொகையில் இந்துக்கள் 58.2 வீதத்தினராகக் காணப்படுகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில்; இந்துக்கள் 87.4 வீதத்தினராகவும், வவுனியா மாவட்டத்தில் 65.4 வீதத்தினராகவும் உள்ளனர். தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளுள் மன்னார் மாவட்டத்திலேயே இந்துமதத்தினர் குறைவாகக் (30 வீதம்) காணப்படுகின்றனர். மன்னார் சர்வதேச வர்த்தகத்துறையாக விளங்கியதும், போர்த்துக்கேயரது கெல்வாக்கின்கீழ் இது நீண்ட காலமாக இருந்து வந்ததும் இங்கு முஸ்லீம், றோமன்கத்தோலிக்க மதங்கள் அதிகளவு பரவ ஏதுவாயிற்று.

மன்னார் மாவட்டத்தின் மொத்தக்குடித்தொகையில் 37.8 வீதத்தினர் றோமன்கத்தோலிக்கர்களாகக் காணப்படுவதற்கு போர்த்துக்கேயரது செல்வாக்கே காரணமாகும். இவர்கள் மன்னார் தீவுப்பகுதி, முசலிப்பகுதிகளில் பெரும்பான்மையினராக உள்ளனர். வன்னிப் பிரதேசத்தில் மொத்தக் குடித்தொகையில் றோமன்கத்தோலிக்கரும், ஏனைய கிறீஸ்தவர்களும் 20.6 வீதத்தினராக உள்ளனர். வவுனியாவின் மொத்தக் குடித்தொகையில் 12 வீதத்தினராக றோமன்கத்தோலிக்கர் உள்ளனர்.

இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் இந்திய, இலங்கைச்சோனகர்களும் மலாயர்களும் முஸ்லீம்களென அழைக்கப்படுகின்றனர். வன்னிப் பிரதேசத்தின் மொத்தக் குடித்தொகையில் இவர்கள் 13.2 வீதத்தினராவர். முஸ்லீம்கள் செறிவாக வாழும் பகுதிகளில் ஒன்றாக மன்னார் மாவட்டமும் கொள்ளப்படுகின்றது. ஒரு மதப்பிரிவினர் தனிப்பெரும்பான்மையினராக இல்லாதமை இப் பிரதேசத்தில் முக்கிய பண்பாகும்.

சிங்களம் பேசும் மக்களிற் பெரும்பான்மையானோர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களாவர். வன்னிப் பிரதேசத்தின் மொத்தக்குடித்தொகையில் பௌத்த மதத்தைச் சேர்ந்தோர் 7.9 வீதத்தினராகக் காணப்படுகின்றனர். வன்னிப் பிரதேசத்தில் வவுனியா மாவட்டமே அதிகளவு (14.8 வீதம்)பௌத்தர்களைக் கொண்டுள்ளது. வவுனியா தெற்கு சிங்கள உ.அ.அ பிரிவே பௌத்த மதத்தினரை அதிகளவிற் கொண்ட பகுதியாகும். வன்னிப்பிரதேசத்தின் நகரப்பகுதிகளில் இவர்கள் ஓரளவு செறிந்துள்ளனர். ஏனைய பகுதிகளில் ஆங்காங்கே பரந்து காணப்படுகின்றனர்.

வேலைவாய்ப்பு

வன்னிப் பிரதேச மொத்தக் குடித்தொகையில் 32.1 விதத்தினரே தொழில்வாய்ப்பைப் பெற்றுள்ளனர். தொழில்வாய்ப்பு பெற்றவர்களில் ஆண்களின் பங்கு 93.3 வீதமாகவும் பெண்களின் பங்கு 6.7 வீதமாகவும் காணப்படுகின்றது. தொழில் வாய்ப்புப் பெற்றவர்களில் 65 வீதத்தினர் விவசாயச் செய்கையில் ஈடுபட்டவர்களாகவும் 35 வீதத்தினர் விவசாயமல்லாத பிற துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றவர்களாகவும் காணப்படுகின்றனர். இப்பிரதேசத்தின் முக்கிய தொழிற்றுறை விவசாயமாக இருந்த பொழுதிலும் மொத்தக்குடித்தொகையில் 20.2 வீதத்தினரே விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயத்தில் ஈடுபட்டிருப்போரில் ஆண்களின் பங்கு 94 வீதமாக உள்ளது. ஆண் உழைப்பாளர்களில் தங்கிவாழ்வோர் தொகை அதிகமாக இருப்பதை இவை உணர்த்துகின்றன. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், ஆகியோர் உழைப்பவர்களில் தங்கிவாழ்வோராகக் காணப்படுகின்றனர். இப்பிரதேசத்தின் மொத்தக்குடித்தொகையில் 45 வீதத்தினராகக் காணப்படும் பெண்கள் வீட்டு வேலைகளுடனும் பகுதி நேர வேலைகளுடனும் திருப்தியடைவதால் குறைந்தளவே தொழில்வாய்ப்பைப் பெற்றுள்ளனர். மொத்தப் பெண் குடித்தொகையில் 4.6 வீதத்தினரே தொழில்வாய்ப்பை பெற்றவர்களாவர். இதில் 57.3 வீதத்தினர் விவசாயச் செய்கையில் ஈடுபட்டிருக்க 42.7 வீதமானோர் விவசாயமல்லாத தொழில்களில் அமர்ந்துள்ளனர்.

முடிவுரை

வன்னிப் பிரதேசக் குடித்தொகைக் கணிப்புகள் உத்தியோக பூர்வமாக 1981 இன் பின்னர் இடம்பெறவில்லை. வன்னியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நிலவிய யுத்த சூழ்நிலைகளே இதற்கான காரணமாகும். இலங்கை அரசு இப் பிரதேசத்தில் தனது நிர்வாகக் கட்டுப்பாடுகளை இழந்திருந்தது. மக்களிற்கான வாழ்வாதார விடயங்களைக் கவனிப்பதற்கான சில கணிப்பீடுகள் இடம்பெற்றன. எடுத்துக்காட்டாக உணவு விநியோகம், மருத்துவ சேவை போன்றவற்றை மேற்கொள்ள சில கணிப்பீடுகளை செய்து வந்துள்ளது. தேசிய மட்டத்தில் 1991, 2001 ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட குடித்தொகைக் கணிப்பீடு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறவில்லை. 1981 ஆம் ஆண்டு குடித்தொகைக் கணிப்புகளில் இருந்தே வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான உத்தேச மதிப்பீடுகள் பெறப்பட்டு நிர்வாகத் தேவைக்காககப் பயன்படுத்தப்பட்டு வந்தன.
வன்னி யுத்தத்தின் இறுதிக் காலகட்டமான 2009 மே மாதம் வன்னி மக்கள் யாவரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதிக்கு ஒதுக்கப்பட்டனர். 2009 மே 18 இன் பின் இவர்கள் அனைவரும் வவுனியா இடைத்தங்கல் முகாம்களின் இடம்பெயர்ந்த அகதிகளாக தங்கவைக்கப்பட்டனர். அகதி முகாம்களில் எடுக்கப்பட்ட கணிப்பீட்டின் படி அங்கு 3,17,000 மக்கள் பதிவு செய்யப்பட்டனர்.

வன்னியின் உக்கிர யுத்தம் நடந்த காலமாகிய 2009 மார்ச், ஏப்ரல் மாதங்களில் இங்கு 4,29,059 மக்கள் காணப்பட்டதாக கிளிநொச்சி முல்லைத்தீவு அரசஅதிபர்களும், ஜ.நா நிறுவனத்தின் அறிக்கைகளும் குறிப்பிட்டதோடு இக் கணிப்பீடுகளையே மக்களுக்கான நிவாரணக் கொடுப்பனவுக்கும் பயன்படுத்தினர்.

வன்னி யுத்தம் முடிவடைந்து இரு வருடங்களாகியும் மீள் குடியேற்றம் முறையாக இடம்பெறவில்லை. பெருந்தொகையான மக்களது வீடுகள், பயன்தரு மரங்கள் போன்ற வாழ்வாதாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்ட நிலையில் மீள் குடியேற்றம் மெதுவாகவே இடம்பெற்று வருகின்றது. மீள் குடியேற்றம் முறையாக இடம்பெற்று முற்றுப் பெற்ற பின்னரே 2012 ஆம் ஆண்டுக்கான தேசிய குடித்தொகைக் கணிப்பீடுகள் இடம்பெற வேண்டும். இக் கணிப்பீடுகளில் இருந்தே வன்னிக் குடித்தொகையில் 1981 ஆம் ஆண்டின் பின் 30 வருட காலம் நிகழ்ந்த பாரிய மாற்றங்கள், குறிப்பாக குடிமனை அழிவுகள்,இறப்புக்களின் தொகை, ஊனமுற்றோர் தொகை, விதவைகளின் தொகை காணாமல்போனோர் தொகை போன்ற அம்சங்கள் தெரியவரும் என குடிப்புள்ளிவிபரவியலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்