யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைக்காலங்களில் நடைபெற்றுவரும் சம்பவங்களை பார்க்கின்ற போது ஒரு பொறுப்புள்ள குடிமகன் என்ற ரீதியில் துன்பமும் வேதனையும் எதிர்காலம் பற்றிய ஜயுறவும் தோன்றுவது தவிர்க்க முடியாததாக உள்ளது. இப் பகுதியில் அரச பிரதிநிதிகள் யார்? யாரிடம் எவ்வகையான அதிகாரங்கள் உள்ளன? மக்களுக்குத்தான் இவர்கள் சேவையாற்றுகின்றார்களா? என்பவை சிக்கலான விடைகாண முடியாத வினாக்களாக எம்முள் எழுகின்றன. இப்பிரதேசம் வாழ் மக்களை அலட்சியப்படுத்தி சிக்கலுக்குள்ளாக்கி பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் சம்பவங்கள் சிலவற்றை இங்கு வரிசைப்படுத்தலாம் என எண்ணுகின்றேன்.
01. யாழ்ப்பாண குடாநாட்டிற்கான வீதி அகலிப்பு நடைபெற்று வருகின்ற போது அதன் எதிர் விளைவுகள் பற்றி எவரும் சிந்தித்ததாக தெரியவில்லை. ‘காப்பெற்’ வீதியாக மாற்றப்படும் போது வீதியில் வாகனங்கள் தொகையாகவும், ஓட்டங்கள் வேகமாகவும், இடம்பெறும். வீதி அபிவிருத்திக்கு திட்டமிடுவோர் இவ் ஆபத்துக்களை உணர்ந்து ஏலவே வீதி ஒழுங்கு முறைகளிற்கேற்ப வீதிக் குறிகாட்டிகளை இடுவது இன்றியமையாத முதற்தேவையாகும். பாதசாரிகளுக்கான நடைபாதைக் குறிகாட்டிகள்; பொருத்தமான இடங்களில் மாநகரசபையின் ஆலோசனை பெற்று இடப்பெறுதல் வேண்டும். மேலும் வேகக்கட்டுப்பாடுகளைக் குறிக்கின்ற அறிவித்தல்கள் பாதையின் ஓரங்களில் காட்சிப்படுத்தப்படவேண்டும். நகர எல்லைக்குள் குறைந்த வேகக்கட்டுப்பாடு பேணப்படுதல் அவசியம். அவ் அறிவித்தல் இன்றும் இப் பிரதேசங்களில் இடப்படவில்லை. இதனால் பலர் தினம் தினம் உயிரிழக்க வேண்டியுள்ளது.