Monday, October 8, 2012

ஏ9 பாதையின் இரு மருங்கும் சிங்கள மயம்- (வன்னி பயணம்- 4) – பேராசிரியர் இரா.சிவசந்திரன்!


யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு 08.08.2011 அன்று காலை 6 மணிக்கு  ஹயஸ் வான் ஒன்றில் புறப்பட்டோம். சிங்கள மயம், புத்தர் மயம், இராணுவ மயம் என தமிழ் அரசியல் வாதிகளும், மக்களும் குறைபட்டுக் கொள்ளுதல் யதார்த்தமென யாழ் – கிளிநொச்சி ஏ9 வீதியின் இரு மருங்கிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுமானங்கள் துல்லியமாக உணர்த்தின.
வீதியில் எதிர்ப்படும் சில இந்துக் கோயில்களை தவிர இப்பாதை அநுராதபுரத்திலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் பாதை போன்றே காணப்பட்டது.  குறுக்கு வீதிகள் பலவும் சிங்களப் பெயரையே தாங்கி நின்றன. கிளிநொச்சியில் வீழ்ந்து கிடக்கும் பாரிய தண்ணீர் தாங்கியை பார்வையிடும் சிங்கள மக்கள் ‘குடிக்கும் தண்ணீர் தாங்கியையும் உடைத்தார்களா!’ என கேள்வி எழுப்புவதற்காக அது காட்சிப் பொருளாகவே பேணப்பட்டு வருகின்றது. யாழ் நூலகம் எரிந்தமையைக் காட்சிப் பொருளாக வைக்காதது எமது தவறு என எண்ணத் தோன்றியது.
தண்ணீர்த் தாங்கிச் சந்தியில் உள்ள நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு சென்றோம். பொறியியலாளர் மிகவும் சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டிருந்தார். கிளிநொச்சிப் பிரதேசக் குளங்களின் புனர் நிர்மாணப்பணிகள் வேகமாக இடம்பெற்று வருவதாகக் கூறினார். முப்பது  செயற்திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அதில் 28 திட்டங்களும் தென்னலங்கையின் பாரிய நிறுவனங்களே ஒப்பந்தங்களைப் பெற்றிருந்தன. தென்பகுதியினரே பணியாளர்களாகவும் காணப்பட்டனர். ‘அபிவிருத்தி’ என்பது அவ்வப் பிரதேச மக்களுக்குச் சுவற வேண்டும். அல்லாதுவிடின் அது அபிவிருத்தி என்ற போர்வையில் சுரண்டலாகவே முடியும் என்பதே பலரின் அபிப்பிராயமாக இருந்தது. 



யாழ் – கிளிநொச்சி ஏ9 பாதையிலிருந்து கிழக்காக 1கி.மீ தொலைவில் உள்ள மருதநகர் குடியிருப்பு பகுதியில் சேர் பொன் இராமநாதன் நம்பிக்கை நிதியத்திற்கு சொந்தமான தனலக்ஷ்மி கமம், 300ஏக்கர் நெல் விளைபரப்பையும், 17 ஏக்கர் மேட்டு நிலத்தையும் கொண்டுள்ளது. 17ஏக்கர் மேட்டுநிலமும் கிளிநொச்சி குளத்தில் கிழக்கு கரையிலிருந்து வீதியோரமாக  2கி.மீ வரை பரவி உள்ளது. இந்த மேட்டு நிலத்தில் தற்போது 52 குடியிருப்புகள்  காணப்படுகின்றன. சேர் பொன் இராமநாதன் வாழ்ந்த காலத்திலேயே இப் பிரதேசம்  அபிவிருத்தி செய்யப்பட்டு பெருமளவு இந்திய வம்சாவழியினர் இங்கு குடியேற்றப்பட்டிருந்தனர்.
கடந்த 50 வருடங்களுக்கு மேலாக இப்பகுதியில் வாழ்ந்து வந்தோரின் பரம்பரையினர் இன்று இங்கு உள்ளனர். வன்னி யுத்தத்தின் போது இவர்களது குடியிருப்பு முற்றாக அழிக்கப்பட்டன. கடந்த ஓராண்டு அளவிலேயே இவர்கள் இப்பிரதேசத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர். ஏலவே அவர்கள் இருந்த குடியிருப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. அழிக்கப்பட்ட குடியிருப்புகள் இருந்த பகுதிகளில் தகரத்தையும், தாழ்பாள்களையும் பயன்படுத்தி  தங்கள் குடியிருப்புகளை  தற்காலிகமாக அமைத்து வாழ்கின்றனர்.
சமீபத்தில் சேர் பொன் இராமநாதன் பெயரில் ஆரம்பப் பள்ளி ஒன்றும், குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானமும் உருவாக்ப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது. ஆரம்பப் பள்ளியில் ஒரு பெண் ஆசிரியை பணியாற்றி வருகின்றார். இப்பாடசாலைக்குரிய கட்டிடமே இக் குடியிருப்பு மக்கள் ஒன்றுகூடும் இடமாகவும் உள்ளது. கடந்த 8ஆம் திகதி சேர் பொன் இராமநாதன் நம்பிக்கை நிதியத்தை சேர்ந்தவர்கள், கரைச்சி உதவி அரசாங்க அதிபர் ஆகியோர்; தலைமையில் குடியிருப்பாளருக்கான பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடும் கூட்டம் இடம்பெற்றது. இராமநாதன் நம்பிக்கை நிதியத்தின் தலைவர் பேராசிரியர். சி.க சிற்றம்பலம், செயலாளர் ஜெகதீஸன், கரைச்சி உதவி அரசாங்க அதிபர் திரு ஜி.நாகேஸ்வரன், பேராசிரியர் இரா.சிவசந்திரன், திரு ரகுலேந்திரன், உலக தமிழ் பண்பாட்டு கழகத்தை சேர்ந்த திரு.வேல். வேலுப்பிள்ளை ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நீண்ட காலமாக இம் மக்கள் தாங்கள் குடியிருக்கும் நிலத்தில் நிலவுரிமையை தங்களுக்கு வழங்கும்படி கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இப் பிரச்சினையே இங்கு ஆராயப்பட்டது. பேராசிரியர் சி;.க.சிற்றம்பலம் தர்மச்சொத்தின் வரையறைக்கு உட்பட்டு நிலவுரிமை வழங்கப்பட சம்மதம் தெரிவித்தார். உதவி அரசாங்க அதிபர் தர்ம சொத்துகளை பங்கிடும் போது எதிர் கொள்ள வேண்டிய சட்ட திட்டங்கள் பற்றி விளக்கமளித்தார். குடியிருப்பாளருக்கு 30 வருட குத்தகையிலே இது வழங்கப்பட முடியும் என்றும் அந்த குத்தகை காணிப் பத்திரமிருப்பின் அவர்கள் அரசாங்க வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவுரை கூறினார்.
வாத பிரதிவாதங்களிற்கு பின்னர் 52 குடியேற்ற வாசிகள் ஒவ்வொருவருக்கும் கால் ஏக்கர் வீதம் (4பரப்பு) வருடாந்தம் 500 ரூபா  குத்தகை பணம் பெறும் வகையில் பத்திரங்கள் வழங்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது. காணி அளவீடுகள் செய்யப்பட்டு ஒவ்வொரு குடியிருப்பாளர் அலகும் குறிக்கப்பட்டு வழங்கப்படும் எனவும் ஏதாவது பிரச்சினைகள் இருப்பின் அவர்கள் மேல் முறையீடு செய்யலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டது. உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் பொதுவாக கிளிநொச்சி மக்களுக்;கும், குறிப்பாக இப் பிரதேச மக்களுக்கும் உதவி செய்யும் பொருட்டு கல்வி, கலை, கலாசார மேம்பாட்டிற்காக ஒரு மண்டபம் உருவாக்குவது என்றும் அதற்காக 5ஏக்கர் காணி வழங்குவதாகவும் உறுதி அளிக்கப்பட்டது.
                       
பொதுவாக இங்கு வாழும் மக்கள் யுத்தத்தால் பாதிப்படைந்தவர்களாக காணப்படுகின்றனர். கணவரை இழந்த இளம்  தாய்மார், உழைக்கும் பிள்ளைகளை இழந்த முதியவர்கள், குழந்தைகளை இழந்தவர்கள், கை கால் ஊனமுற்றவர்கள், போன்ற பலரை அடையாளம் காணக் கூடியதாக இருந்தது. பொதுவாக இங்குள்ள சிறு பிள்ளைகள் ஊட்டச்சத்து குறைந்தவர்களாக மெலிந்த தோற்றத்துடன் காணப்படுகின்றனர். யுத்தத்தில் நடந்த பிரச்சினைகள் பற்றி கேட்ட மாத்திரத்தில் கண்ணீர் விட்டு அழுத நிலையையும் காணக்கூடியதாக இருந்தது, உண்மையில் இவர்களது மனநிலை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பின் சமநிலை அடையவில்லை என்பதை  இது காட்டியது.
                        
பொதுவாக வன்னிப் பிரதேச மக்களின் நிலை இவ்வாறு இருக்கின்ற போதிலும் இக் குடியிருப்பு மக்களுக்கு உளவள துணையின் அவசியமும், ஊட்டச்சத்துள்ள உணவுகளை சிறுவர்களுக்கு வழங்கும் தேவையும் அவசர தேவையாக உள்ளதை இனம் காண முடிகின்றது.
                       
மேலும் இங்கு சனசமூக நிலையம், மாணவர்களுக்கான நூல்நிலையம், பொழுதுபோக்கிற்கான விளையாட்டு மைதானம், என்பன உடனடியாக உருவாக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. வெளிநாட்டில் இருந்தும், தென்னிலங்கையில் இருந்தும் வருவோர் தங்களை சந்தித்து பல உறுதி மொழிகளை வழங்கிச் செல்கின்றார்கள் என்றும் அவை செயல் வடிவம் பெறவில்லை என்றும் இம் மக்கள் குறைபட்டுக் கொண்டனர். இங்குள்ள தேவை பற்றிய திட்டங்களை உருவாக்குவதற்கு நம்பிக்கை நிதியத்தினரால் உப குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம் மக்களின் வாழ்வு செழிமையுற புலம்பெயர் வாழ் மக்கள் பெரிதும் உதவியளிக்க முடியும்.


ஏ9 பாதையின் இரு மருங்கும் சிங்கள மயம்- (வன்னி பயணம்- 4) – பேராசிரியர் இரா.சிவசந்திரன்!

No comments:

Post a Comment