Monday, October 8, 2012

புலம்பெயர்வாழ் தமிழர்களிடம் புலத்தில் தம் புனர்வாழ்வைக் கோரும் தமிழர்கள்!-பேராசிரியர் இரா.சிவச்சந்திரன்


’ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’இ ‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு’ நீண்ட காலமாக தமிழில் ஒலித்துவரும் இப் பொன்மொழிகளின்;; ஆழமான அர்த்தத்தை நாம் இன்னும்  சரியாக உள்வாங்கி ஜீரணித்து கொள்ளவில்லை என்பதனை புலத்தில் வாழ்கின்ற தமிழர்களதும், புலம்பெயர்வாழ் தமிழர்களதும் அண்மைக்கால செல்நெறிகள்  புலப்படுத்துகின்றன.
             தமிழர்கள் உலகில் 40இற்கு மேற்பட்ட நாடுகளில் புலம்பெயர்ந்து செல்வ செழிப்புடனும், கல்வி கேள்விகளில் சிறந்தும், சாதனைகள் பல புரிந்தும் வாழ்வதாக  பெருமைப்பட்டுக் கொள்ளும் நாம் ஈழத்தமிழர் தம் நில பிரதேசத்தில் இன்று எதிர்நோக்கும் வரலாறு காணாத நெருக்கடிகள், பிரச்சினைகள் பற்றி பெரிதும் அக்கறையின்றி இருக்கின்றோம். தமிழ் நிலத்தில் வாழும் தமிழர்கள் 30 வருடத்திற்கு மேற்பட்;ட அவசரகால சட்ட அமுலாக்கத்தின்; கீழ் இராணுவ மயமாக்கல், சிங்கள மயமாக்கல், புத்த மயமாக்கல், உலக மயமாக்கல் என்ற போர்வையில் பல்தேசிய நிறுவனங்களால் சுரண்டலுக்கு உட்படுதல் போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்து வரும் போதும் இவைபற்றி பேசுவதற்கும் வழியற்ற நிலையில்; வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்;. புலம்பெயர்வாழ் மக்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து எமது மக்களின், அரசியல், பொருளாதார, சமூக, கலை, கலாசார, கல்வி, சமயம், சுகநல வாழ்வு ஆகிய துறைகளில் மேம்பாடு காண்பதற்கு உதவி புரிவதற்கான வழிமுறைகள் பற்றி பலர் குறிப்பிட்டிருந்த போதிலும்  முக்கியமான சிலவற்றை இங்கு சுருக்கமாகவும், அழுத்தமாகவும் கூற முற்படுகின்றேன். அவர்களால் அவசரமாகவும், அவசியமாகவும் செய்ய வேண்டிய முக்கிய பணிகளை பின்வருமாறு  வரிசைப்படுத்தலாம்.


01. கடந்த 62 வருடங்களாக அற வழியிலும், ஆயுத வழியிலும்  அரசியலுரிமைக்காக போராடியும்  சிங்கள அரசு சர்வதேச உதவிகளைப் பெற்று  எம்மை வீழ்ச்சியடைய வைத்துள்ள நிலையில் வீழ்ந்துள்ள எமது மக்கள் மீள்எழுச்சி பெறுவதற்கு புலம்பெயர் சமூகம் சர்வதேச அரசியல் பலத்தை எமக்கு பெற்றுத் தருவதற்கு தந்திரோபாயமான முறையில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழர் நிலத்தை பாதுகாப்பதுடன் தமிழ்த்தேசியத்தை நிலை நிறுத்துவதோடு ஜனநாயக வழியில் நிலைத்து நிற்கத்தக்க சுய ஆட்சி முறை ஒன்றினைத் தமிழர் பெறுவதற்கு இவர்கள் புலத்தில் வாழ்வோரோடு இணைந்து உதவ வேண்டும். சர்வதேசம் எமக்கு கற்பித்தபடி ஜனநாயக வழியிலேயே நாம் இனி போராட வேண்டியவர்களாக உள்ளோம். எனவே ஜனநாயகத்தை மதிக்கின்ற அதுவே மனித வாழ்விற்கு இன்றியமையாத சரியான சித்தாந்தம் என கூறுகின்ற சர்வதேச ஜனநாயக நாடுகள் பால்; புலம்பெயர் தமிழர்கள் எமது நியாயமான குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும்.
02. இன்றைய நிலையில் எமது பிரதேசத்தில் பொருளாதார, சமூக, கல்வி, கலாசார அபிவிருத்திக்கு புலம்பெயர் தமிழர் உதவி புரிதல் வேண்டும். உதாரணமாக தெரிந்தெடுக்கப்பட்ட இடங்களில் முதலிடுவதன் மூலம் விவசாய பண்ணைகளை அமைக்க முடியும், இவை கூட்டுப் பண்ணைகளாக அமைக்கப்பட்டால் பிரதேச வாழ் மக்கள் அதனால் பயன்பெற முடியும். கைத்தொழில் துறையில் பல முதலீடுகளை செய்து தனியார் கைத்தொழில் நிறுவனங்களை உருவாக்கலாம். முக்கியமாக விவசாயம் சார் கைத்தொழில்களை உருவாக்குவதற்கான வாய்ப்பான பிரதேசமாக இது உள்ளது. (உ.ம்-காய்கறி, பழங்களை பொதி செய்தல், பழச்சாறு உற்பத்தி) இவற்றை புலம்பெயர் மக்கள் வாழும் இடங்களில் சந்தைப்படுத்தலாம். மற்றும் போக்குவரத்து துறையிலும் முதலிடலாம், (சொகுசு வாகனங்களை சேவையில் ஈடுபடுத்துதல்) மீன்பிடி அபிவிருத்திக்கும், அதனை பதனிட்டு, பொதியிட்டு ஏற்றுமதி செய்யும்  தொழிலிலும் முதலிடலாம். (உ.ம்- இறால், கணவாய் பொதியிடல்) எமது சமூகத்தின் பல முகங்களும் இன்று மோசமாக கோரமாக்கப்பட்டுள்ளன. இளைஞர், பெண்கள், முதியோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மிக மோசமானதாக உள்ளன. தமிழ்ப் பண்பை மறந்து திரியும் போக்கு இளைஞர்களிடம் வேகம் கொண்டுள்ளது. பெண்கள் உரிய பாதுகாப்பின்றி அல்லல் படுகின்றார்கள். விதவைகளின் தொகை அதிகரித்துள்ளமை  இளம் வயதுத் திருமணங்களால் பெண்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் என்பன சமூகத்தின் போக்கை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. முதியோர் ஆதரவற்று அல்லல்படுகின்றார்கள்.  புலம்பெயர்வாழ் தமிழர்கள் இவற்றை நன்கு சிந்தித்து இப் பிரச்சினைகளில் இருந்து இவர்களை மீட்பதற்கான ஆக்கபூர்வமான திட்டங்களை அமுல் நடத்தலாம். ஏனெனில் இவ்வாறான சமூக சேவைகளை மேற்கொள்வதற்கான நிறுவனங்களை நடத்துவதற்கு நிதி தேவைப்படுகின்றது.(உ.ம்- முதியோர் இல்லம் அமைத்தல், விதவைகளுக்கான மறுவாழ்வு நிறுவனங்களை உருவாக்குதல்)

03. கல்வி என எடுத்துக் கொண்டால் புலம்பெயர்ந்து வாழும் இளம் சமுதாயத்தினர் நல்ல முறையில் பயின்று வருகின்ற ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளை எமது பிரதேச இளைஞரும் பெறும் பொருட்டான வழிவகைகளைக் காணுதல் வேண்டும். இதற்காக நிதி முதலீடு செய்து தனியார் கல்வி நிறுவனங்களை உருவாக்க முடியும். மேலும் துறைசார் நிபுணத்துவ ஆலோசனை நிறுவனங்களை  உருவாக்கி அதனூடாக முறையாக வழிகாட்ட முடியும்.  பரந்து வாழும் தமிழர்கள் பயன்பெறும் பொருட்டு தமிழருக்கு தேவையான தமிழ், ஆங்கில நூல்களை கணனிமயப்படுத்தி எண்மிய நூலகங்களாக மாற்றுவதற்கு உதவி புரிய முடியும். இதற்கான முயற்சிகள் சில நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் இதனை துரிதப்படுத்த நிதி ஆதாரங்களை  வழங்க முடியும்.
04. பல்துறைசார் சிந்தனையாளர் குழுக்களை (Think Tank)) உருவாக்கி தமிழருக்கு விரோதமாக சிங்கள அரசு செய்யும் சூழ்ச்சி திட்டங்களை நுட்பமாக கண்டறிந்து அதனை பிற நாட்டவருக்கு வெளிப்படுத்துவதோடு  எவ்வகையில் இதனை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் அறிவுறுத்தலாம். எமது இளைஞர்களை நிபுணர்களாக உருவாக்குவதற்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்கள் கற்பதற்கு அனுமதி பெற்று கொடுப்பதோடு அவர்களின் கற்கைக்காலத்திற்குரிய நிதி வசதிகளையும் செய்து கொடுத்தல் வேண்டும்.
05. தமிழர்கள் தமது வரலாற்றில் நிகழ்ந்த சம்பவங்களை ஆவணப்படுத்தும் பண்பை குறைவாகவே கொண்டுள்ளார்கள். முறையாக வரலாற்று தகவல்களை கூட நாம் ஆவணப்;படுத்துவதில்லை. உண்மையில் வன்னியில் இடம்பெற்ற யுத்தக் கொடுமைகளான இறப்பு, விதவைகளாக்கப்பட்டோர் விபரம், அவயவங்களை இழந்தோர் விபரம், பாதிக்கப்பட்ட சிறுவர்களின் விபரம், மக்களின் குடியிருப்புகள், வாகனம் போன்ற பொருட்களின் அழிவு என்பன இன்றுவரை முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை. இத் தரவுகளை பயன்படுத்தி முன்வைக்கும் எமது கோரிக்கைகளே வலிமை வாய்ந்தவையாக அமையும். இவையே நீதி நியாயங்களை எமக்கு பெற்றுத்தரும். இதனை புலம்பெயர் தமிழர்கள் நிறுவனங்களை உருவாக்கி ஆவணப்படுத்த முயலுதல் வேண்டும்.
06. புலம்பெயர் தமிழ்மக்கள் புலம்பெயர் நாட்டில் பிரஜாவுரிமை பெற்றிருந்தாலும் தாய் நாட்டின் பிரஜாவுரிமையையும் விட்டுக் கொடுக்காது இரு நாட்டு பிரஜாவுரிமை கொண்டவர்களாக விளங்க முற்பட வேண்டும். மேலும் சொந்த நாட்டில் வாக்குரிமைகளையும் பயன்படுத்த வேண்டும். வெளிநாட்டில் வாழும் இந்தியப் பிரஜைகள் தமது வாக்குரிமைகளை பயன்படுத்தி வருகின்றமையை இதற்கு முன்னுதாரணமாகக் கொள்ளலாம்.
07. புலம்பெயர் தமிழர்கள் ஈழ அரசியலை பொழுதுபோக்காகவும், உணர்வு ரீதியாகவும் பேசுவதை விடுத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். முதலாவதாக புலம்பெயர்வாழ் தமிழர்  அந்தந்த நாடுகளில் அரசியலில் செல்வாக்கு மிக்கவராக மாற்றம் பெறவேண்டும். இதற்கு முன்மாதிரியாக சமீபத்தில் கனடா அரசியலில் நுழைந்த செல்வி.சிற்சபேசன் அவர்களின் முயற்சியை கூறலாம். அரசியலில் நுழைந்த காரணத்தினாலேயே கனடா பாராளுமன்றில் எமது பிரச்சினையை பேச முடிகிறது. இதனை முன்னுதாரணமாகக் கொண்டு தத்தம் நாடுகளில் அரசியலில் செல்வாக்கு செலுத்தி எமது பிரச்சினையை சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்று உதவ வேண்டும்.
08. புலம்பெயர் தமிழர்கள் ஒவ்வொருவரும்  தமிழ் நிலத்தில் தமிழ்மக்களிற்காக ஏதோ ஒரு தர்மகாரியம் செய்ய வேண்டும். பெரும்பான்மை புலம்பெயர் தமிழர்கள் தற்போது இங்கு கோயில் கோபுரங்களையே பெரும் பொருட்செலவில் அமைத்து வருகின்றார்கள். உண்மையில் ‘ஏழைகளின் சிரிப்பிலேயே’ இறைவனை காண முடியும். வறுமையில் வாழும் ஈழத்தமிழர்களின் முகத்தில் மலர்ச்சியை தரிசிப்பதே கோபுர தரிசனத்தை விட புண்ணியம் தருவதாகும்.
‘ஆன்றோர் ஏழைக்கு எழுத்தறிவித்தலே கோடிபுண்ணியம் தரும்’ என்ற                                   பாரதியின் குரல் எம்மை வழிநடத்த வேண்டும்.
09. சுகநல வாழ்வு, சூழல் பேணுதல் போன்ற விடயங்களிலும் புலம்பெயர்வாழ் தமிழர்கள் அக்கறை செலுத்துதல் இன்றியமையாதது. சுற்றுலாத்துறை வளர்ச்சி என்ற போர்வையில்; பல்தேசிய நிறுவனங்களால் எமது சூழல் வளங்கள் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அழகிய கடற்கரைகள், பசும் சோலைகள் அழிக்கப்பட்டு வருகின்றன. சூழல்பேண் சுற்றுலா துறைகளை வளர்க்க புலம்பெயர் தமிழர்களின் நிதி பயன்பட முடியும். அழகிய பசுமை நிறைந்த பூங்காக்களை கிராமம் தோறும் உருவாக்குதல், கடற்கரையோரங்களில் உல்லாசபடகு ஓட்டங்களுக்கான வசதிகளை செய்து குழந்தைகளை மகிழ்விப்பதற்கான வழிவகைகளை உருவாக்குதல் போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.
     சுகநல வாழ்விற்குரிய மருத்துவ சாலைகள், விளையாட்டு அரங்குகள், என்பனவும் உருவாக்கப்படலாம். தனியார் மருத்துவ மனைகளை புலம்பெயர்வாழ் தமிழர்கள் தம் நிதிவளத்தைப் பயன்படுத்தி உருவாக்கி சுகநல வாழ்வு பேணலாம். அவுஸ்ரேலியா வாழ் புலம்பெயர்வாழ் தமிழர் வைத்திய கலாநிதி நடேசன் அவர்கள் தனது பூர்வீக நிலமான எழுவைதீவில் மருத்துவமனை ஒன்றை உருவாக்கி சமீபத்தில் மக்களிற்கு அளித்ததை முன்னுதாரணமாகக் கொள்ளலாம். எமது பிரதேசத்தில் பரந்துள்ள மருத்துவமனைகளிற்கான தேவைகளை கண்டறிந்து அவற்றின் மேம்பாட்டிற்கு தம்மாலான உதவிகளை புரியலாம். 
                     புலம்பெயர் தமிழர்கள் மேலே கூறிய விடயங்களை மனங்கொண்டு விரைவில் செயற்படுவார்களேயானால் அது வீழ்ந்து கிடக்கும் ஈழத்தமிழர்களை தூக்கி நிறுத்தி மீள் எழுச்சிபெற வைக்கும் என்பதில் ஜயமில்லை.


புலம்பெயர்வாழ் தமிழர்களிடம் புலத்தில் தம் புனர்வாழ்வைக் கோரும் தமிழர்கள்!-பேராசிரியர் இரா.சிவச்சந்திரன்

No comments:

Post a Comment