Monday, October 8, 2012

வளமான வன்னியில் வன்முறையால் விளைவிக்கப்பட்ட வடுக்கள்! – பேராசிரியர் இரா.சிவசந்திரன்(Att;photos)


யாழ்ப்பாணம் சிந்தனைக்கூடம் ஆய்வு அபிவிருததி நிறுவனத்தின் ஏற்பாட்டில் பேராசிரியர் சிவச்சந்திரன் தலைமையிலான குழுவினர் அண்மையில் வன்னிக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை நேரில் அவதானித்தனர். இந்த பயணத்தில் தாம் அவதானித்தவற்றை பேராசிரியர் இரா.சிவச்சந்திரன் அனுப்பி வைத்த தகவல்களை இங்கே முழுமையாக தருகிறோம்.
சிந்தனைக்கூடம் – யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் பேராசிரியர் இரா.சிவசந்திரன், பேராசிரியர் சி.க. சிற்றம்பலம், திரு சி.ரகுலேந்திரன், திரு கமலேஸ்வரன், திரு டேவிட் நாகநாதன் ஆகியோர் 11.03.2011 முதல் 14.03.2011 வரை வன்னிப் பயணத்தை மேற்கொண்டு வன்னியின் இன்றைய நிலை, மக்களின் அவல நிலை, பிரதேசத்திற்கான அபிவிருத்தி வாய்ப்புகள் பற்றி ஒரு மேலோட்டமான ஆய்வை மேற்கொண்டோம். அதன் ஆரம்ப அறிக்கையை சிந்தனைக்கூடத்தின் கவனத்திற்கு சமர்ப்பித்திருந்தோம்;. அவற்றில் சில முக்கியமான விடயங்களை ஊடகங்களிற்கு தெரிவிப்பது பொருத்தமென கருதுகின்றோம்.



வன்னிப் பயணத்திற்கான திட்டத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவை 11.03.2011 மாலை சென்றடைந்த நாங்கள் வவுனியாவில் இருந்து நெடுங்கேணிக்கு முதல் பயணத்தை மேற்கொண்டோம். ஏ9 பாதையில் ஓமந்தை பாதுகாப்பு சாவடியில் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட  பின்னர் புளியங்குளம் சந்தியிலிருந்து புளியங்குளம் – முல்லைத்தீவு வீதியில் பயணித்து நெடுங்கேணி என்ற இடத்தை சென்றடைந்தோம். (இரு சந்திகளிலும் மீண்டும்  பாதுகாப்பு சோதனைகள் இடம்பெற்றன)  வவுனியாவில் இருந்து புளியங்குளம் வரையான  ஏ9 வீதி ஓரளவுக்கு பயணிக்க கூடியதாகவும் புளியங்குளத்திலிருந்து நெடுங்கேணி வரையான வீதி கிரவல் மண்  வீதியாகவும் காணப்பட்டது. வாகனத்தை  பெரும் சிரமத்தின் மத்தியிலேயே ஓட்டிச்செல்ல முடிந்தது. இதனூடாகவே முல்லைத்தீவிற்கு செல்கின்ற அரச தனியார் வாகனங்கள் அடிக்கடி சென்றுவருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
நாங்கள் சென்ற வேளை உள்ளுராட்சி தேர்தல் காலமாகையால் அரச வாகனங்கள் பல தேர்தல் பணிக்காக இவ் வீதியூடாக சென்றுவருவதை அவதானிக்க முடிந்தது. நெடுங்கேணியில் இருந்து 5கி.மீ தொலைவில் முல்லைத்தீவு மாவட்ட எல்லை காணப்படுகின்றது. கனகராயன் ஆறு, பேராறு போன்ற ஆறுகளின் கிளைகளில் காணப்படுகின்ற இரண்டு பாரிய குளங்கள் நெடுங்கேணி குடியிருப்பு பகுதியில் காணப்படுகின்றன. யுத்தத்திற்கு முன்னர் நெடுங்கேணி நல்ல செழிப்புள்ள விவசாய கிராமமாக காணப்பபட்டதெனலாம். இங்கு கோயில்கள், பாடசாலை, வீதியோரமாக கடைகள் என்பன காணப்படுகின்ற போதும் அவற்றின் கட்டிடங்கள்  இன்று பெருமளவு அழிவடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன. அழகிய மாஞ்சோலை என்ற பூங்காவில் கிராமத்தவர் பலரையும் சந்தித்து கலந்துரையாடக்கூடிய வாய்ப்பு கிட்டியது. (படம் -1)நெடுங்கேணி மத்திய மகா வித்தியாலயத்தின் ஓய்வு பெற்ற அதிபர் திரு சந்திரசேகரி அவர்களுடன் உரையாடிய போது பல்வேறு விடயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.  அறுபத்துமூன்று வயதான இப் பெரியார்  வன்னி இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் வரை சென்று திரும்பிய  துயரமான  தனது அனுபவங்களை  கனத்த இதயத்துடன் பகி;ர்ந்து கொண்டார். சில மணி நேரமே இவருடன் உரையாட முடிந்ததென்றாலும்; வாரக்கணக்காக தன்னால் வன்னிக் கதைகளை கூற முடியும் எனவும் கூறினார்.
இவ்வாறானவர்களிடமிருந்து வன்னியில் நிகழ்ந்த விடயங்களை அவர்கள் குரலிலேயே பதிவு செய்து உலகத்துக்கு கூறவேண்டு;ம் என்ற எண்ணம் தோன்றியது. இவ்வாறு பல பெரியவர்கள், இளம் வயதுப்பிரிவினர், இளைஞர்களிடம் பல்வேறு விடயங்கள் பற்றி பேசியதோடு யுத்தத்தின் இறுதி நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் பற்றியும் தெரிந்துகொள்ள முடிந்தது.
இவற்றையெல்லாம் ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வலுத்தது. முன்னர் பதவி வகித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குளங்கள், வாய்க்கால்களை அமைக்க உதவியமை, குடியேற்ற திட்டங்களை உருவாக்க உதவியமை, வீதி அபிவிருத்திக்கு உதவியமை போன்றவற்றை நன்றியுடன் நினைவு கூரும் இவர்கள் தற்போதுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் காலத்தை தவிர மற்றைய காலங்களில் இப்பகுதிக்கு தலை காட்டுவது இல்லை என்றும் குறைபட்டனர். மாஓயாவின் வடிகாலமைப்பில் அமைந்துள்ள பதவியா, பராக்கிரமபுர போன்ற இக்கிராமத்திற்கு தென் எல்லையில் அமைந்துள்ள சிங்கள குடியேற்ற திட்டங்களால் தங்கள் நிலங்கள் பறிபோவதாக இம் மக்கள் தெரிவித்தனர். மேலும் கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கிராமங்களில் வாழ்ந்து அவை முற்று முழுதாக சிங்களமயமாக்கப்பட்ட பின்னர் புலம் பெயர்ந்து, நெடுங்கேணியில் வாழும் சிலரையும் சந்தித்து விபரங்களை பெற முடிந்தது.
12.03.2011 அன்று வவுனியா-மன்னார் வீதியாக பயணித்தோம். வழியில் நெலுங்குளம் என்னும் இடத்தில் திரு த.இராமச்சந்திரன் என்பவரது  லிங்கன் விவசாய பண்ணையைச் சென்று பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.(படம்-2) 27 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த அந்த விவசாயப் பண்ணையில் நெல் விளைபரப்பு, வாழைத்தோட்டம், காய்கறி தோட்டம், பழத்தோட்டம், என்பன அமைக்கப்பெற்றிருந்தன. கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, பால் மாட்டு வளர்ப்பு என்பன நல்ல முறையில் இடம்பெற்று வருவதை காணகூடியதாக இருந்தது. அங்கே 20ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்ததையும், முக்கியமாக பெண்கள் வயல் வேலையில் ஆர்வம் காட்டுவதையும் காண கூடியதாக இருந்தது. .(படம்-3)  இப் பண்ணை போன்று பணம் படைத்தோரும்,  எமது புலம் பெயர் உறவுகளும் விவசாயப் பண்ணைகளை உருவாக்கி  வன்னியை வளம் கொழிக்கும் பிரதேசமாக மாற்ற முடியும் என்ற உண்மையைத் தரிசிக்க முடிந்தது.
அவ் வீதியில் பம்பைமடு என்ற இடத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாக தொகுதியின் புதிய கட்டிடத் தொகுதியை காண முடிந்தது. வன்னியில் முழுமையான பல்கலைக்கழகம் அமைப்பதற்கான  வளமும், வாய்ப்பும்; இப்பிரதேசம் கொண்டிருப்பதை தெரிந்து கொண்டோம். சிறிது தூரத்தே தொழில்நுட்ப கல்லூரி கட்டிடம் ஒன்று இருந்தது. அங்கு முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு நிலையம் ஒன்று இயங்குவதாக அறிந்தோம்;. காவலுக்கு நின்ற இராணுவத்தினர்  அதனை சென்று பார்க்கும் அனுமதியை எமக்கு வழங்கவில்லை. தொடர்ந்த பயணத்தில் இராட்சத குளம் என்று முன்னர் அழைக்கப்பட்டு கட்டுகரைக்குளம் என்று வழங்;கப்படுகின்ற குளக்கட்டின் கரையின் ஊடாக செல்லும் போது வெளிநாட்டுப் பறவைகள் பறந்து திரியும் அழகையும், பசுஞ்சோலையையும்  காணமுடிந்தது. அவ்விடத்தை பறவைகள் சரணாலயமாக மாற்றி சூழல் நட்பார்ந்த சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் வாய்ப்பை உணரக்கூடியதாக இருந்தது. இப் பகுதிகளில் தரித்து நின்ற லொறிகளில்  காட்டு மரங்கள் வெடடப்பட்டு ஏற்றப்பட்டு இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. பின்னர் உயிரங்குளம் சந்தியிலிருந்து அடம்பன் ஆண்டான் குளம் போன்ற குளங்களிற்கு சென்றோம். அடம்பனில் உள்ள கிறீஸ்தவ பாடசாலை, கிறீஸ்தவ கோயில் பிரதேசங்களில் பல கிராம வாசிகளை சந்திக்க முடிந்தது. அவர்களில் ஒருவர் அடம்பனின ஓய்வுபெற்ற கிராம அலுவலர் திரு.ச.பத்திநாதன் ஆகும். மாந்தை மேற்கு பிரதேசசபை தேர்தலில் போட்டியிடும் அவர் அப்பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பல பொருளாதார சமூக பிரச்சனைகளை ஒட்டி எம்முடன் மனம் திறந்து உரையாடினார். உள்ளுராட்சி அமைப்புகளை தமது கட்சி வென்றெடுப்பதன் மூலம் இந்த பிரதேசத்தை தமக்கான அபிவிருத்திக்கு இட்டுச்செல்ல முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டார். அவர் அழைத்துச் சென்று காட்டிய இன்னோர் குறிச்சியில் இந்துக்கள் செறிவாக வாழ்கின்றனர். அவர்களது பிள்ளையார் கோயில் யுத்தத்தால் தரைமட்டமாக்கப்பட்டு இருந்தது. அரச சார்பில் தேர்தலில் நிற்போர் அக்கோயிலை திருத்ததுவதற்கு சிறு தொகை அஸ்பெஸ்ரஸ் சீற்றை வழங்கியிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. இரண்டு வருடங்களாக செய்ய எண்ணாத உதவிகளை உள்ளுராட்சி தேர்தலின் போது வாக்கு பெறுவதற்காக இவர்கள் செய்துள்ளார்கள் என அம் மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தார்கள். பொதுவாக தங்களிற்கு எவ்வித உதவிகளும் கிடைப்பதில்லை என கூறிய அவர்கள் தாங்களாகவே தங்கள் இடிந்த வீடுகளை திருத்தி வருவதாக கூறினர். செஞ்சிலுவை சங்கம் உட்பட எந்த அரசசார்பற்ற நிறுவனங்களும் இங்கு வந்து உதவி வழங்குவதை பாதுகாப்பு படையினர் தடுத்து வருவதாக அவர்கள் குறைபட்டனர். கை,கால் ஊனமுற்றவர்கள், பார்வை இழந்தோர், கணவனை, பிள்ளைகளை உறவினர்களை, யுத்தத்தில் பறிகொடுத்த பலரை காணகூடியதாக இருந்தது. கிராமத்திற்குரிய இவர்களது  கிரவல் மண் வீதிகள் மேடும் பள்ளமுமாக உள்ளதால் வாகன பயணத்திற்கு பொருத்தமற்று விளங்கின. வாய்க்கால்கள், மதகுகள், செப்பனிடப்படவில்லை. அரசு மீளக் குடியமர்த்தி விட்டோம் என்ற நிலையை காட்டுவதற்கு அவர்களை அந்த பகுதிக்கு தாங்களாகவே வர அனுமதித்து எந்த உதவியும் வழங்காது இவர்களை மீள் குடியமர செய்துள்ளதாக தோன்றுகின்றது. பாடசாலை செல்லும் சிறார்கள் பாதணிகள் இல்லாது வெற்றுக் கால்களுடன அச் சுடுமணலில் கால் பதித்து செல்வதை காண முடிந்தது. பிரதேசம் முழுதும் புழுதி பரவி சுகாதார கேடு விளைவித்து வருகி;ன்றது. ‘ஏதோ உயிர் பிழைத்து வாழ்கின்றோம்’ என கேட்ட வினாவிற்கு கிராம வாசிகள் பதில் அளித்தார்கள்.
திருக்கேதீச்சர மடத்திற்கு திரும்பிய போது கோயிலின் புனருத்தாரண நடவடிக்கை நல்ல முறையில் காணப்பட்டதை காணக் கூடியதாக இருந்தது. .(படம்-4)  இது ஒன்றே  நாம் கண்ணுற்ற அப்பகுதியில்பாராட்டப்படவேண்டிய புனர் நிர்மாண பணியாகும். இம் மகிழ்சிக்கு மத்தியில் சென்ற நாம் திருக்கேதீச்சர நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டு வரும் புத்தர் சிலையை கண்டு மனத்தாக்கத்திற்கு உட்பட்டோம். பிரதேச மக்களின் விருப்பத்திற்கு மாறாக மத சின்னங்களை திணிப்பது அந்த மதத்திற்கும்,  அதை மேற்கொள்ளும் அரசிற்கும் அவமானமான விடயம் என்பதை இவர்களால் ஏன் உணர முடியவில்லை?
13.03.2011 காலை திருக்கேதீச்சரத்திலிருந்து மன்னாருக்கு புறப்பட்டோம். உயிலங்குளம், வங்காலை போன்ற கிராமங்களிற்கு சென்றோம்.  வங்காலை,  கிறீஸ்தவ ஆலயங்களும், அம் மதத்தை பின்பற்றுவோரும்  நிறைந்த மீன்பிடி கிராமமாகும்.  எனினும் இங்கு கல்வியாளர்களும் குறைவின்றி காணப்படுகின்றனர்.  வங்காலைக்குச் செல்லும் பாதை மோசமான நிலையில் காணப்பட்டது. பின்னர் மன்னார் நகரம் சென்று அரசாங்க அதிபரை கண்டு அப்பிரதேச அபிவிருத்தி பற்றி கேட்டுத் தெரிந்துகொள்ள முடிந்தது. அதன் பின்னர் மீண்டும் திரும்பி; பேசாலை சென்றபோது அங்கு பெரும்தொகையாக சிங்கள மீனவரின் குடியிருப்புகளை காணகூடியதாக இருந்தது. பின்னர் திரும்பி புதியமன்னார் பாலமூடாக பயணத்தை மேற்கொண்டோம். இப்பாலமே சமீபத்தில் ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்டது.  விடத்தல்தீவு – கள்ளியடி ஊடாக இலுப்பைக்கடவை கிராமத்தை வந்தடைந்தோம். இப்பகுதிகள் நாயாறு, பாலியாறு, பறங்கியாறு என்பனவற்றின் வடிநிலங்களில் அமைந்துள்ளன. இவ் ஆறுகள் ஊடாக பெருந்தொகையான நன்நீர் வெளியேறுவதை காணக்கூடியதாக இருந்தது. இவ் வடிநிலங்களில் பாரிய பல குளங்களை உருவாக்ககூடிய வாய்ப்புகள் உள்ளன. நாயாறு, பறங்கியாற்று பகுதிகளில் சிறுசிறு குளங்கள் உள்ளனவே அன்றி பாரியகுளங்கள் அமைக்கப்பட்டிருக்கவில்லை. பாலியாற்று வடிகாலில் வவுனிக்குளம் உருவாக்கப்பட்ட போதும் அதன் கொள்ளளவை அதிகரிக்ககூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஏ32 வீதியில் அமைந்துள்ள கள்ளியடி கிராமமும், இலுப்பைக்கடவை கிராமமும், பறங்கியாறு சங்கமிக்கும் கழிமுகப் பிரதேசத்தில் அமைந்துள்ளதால் வளம்மிக்க விவசாய கிராமமாக காணப்படுகின்றன. யுத்தத்திற்கு முன்னர் அதிக குடித்தொகையை  கொண்ட விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்ட பிரதேசமாக  இது விளங்கிற்று. கிராமத்தில் பனங்காணிகள் பெருமளவு காணப்பட்டன. இங்கிருந்த விவசாய விரிவாக்க கட்டிடம் இராணுவ பாதுகாப்பு நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.  தற்பொழுது வெளிநாட்டுக்கு புலம் பெயர்ந்தவர் உட்பட  பலர் தமது கிராமத்தை வந்து பார்ப்பதை அவதானிக்க முடிகின்றது. இங்கு சுப்ரமணியம்; எனும் நிலச்சுவாந்தரின் அழிந்த மாடி வீட்டையும், .(படம்-5)  அவர்களது  உறவினர்களது அழிந்த வீட்டையும,; அவர்கள் பயிர்செய்த பாரிய நெல் விளைபரப்பையும,; அவர்களது வீட்டைச்சுற்றி அமைந்திருந்த பனந்தோட்டத்தையும் காணக்கூடியதாக இருந்தது. அவர்களது உறவினருடன் உரையாடிய போது பொது தொண்டுக்கும், கல்வி நிறுவனங்களிற்கும் தங்கள் சொத்துக்களை தரமுடியுமென தெரிவித்தனர்.
யாழ்ப்பாண குடாநாட்டிலிருந்து மேற்கு கரையோரமாக அமைந்துள்ள வீதியே(ஏ32) நீண்ட நெடுங்காலமாக தமிழரின் பாரம்பரிய வீதியாக விளங்கிய  தெனலாம். எமது முதிய அரசியல் தலைவர்கள் ஏ9 வீதியை அபிவிருத்தி செய்வதற்கு பதிலாக இந்த மேற்கு கரையோர வீதியையும் பருத்தித்துறையில் இருந்து கதிர்காமம் செல்லும் கிழக்கு கரையோர வீதியையும் அபிவிருத்தி செய்திருந்தால் தமிழர் குடிப்பரம்பல் ஆரோக்கியமான முறையில் அமைந்திருக்கும் என்ற யதார்த்தத்தை உணரக்கூடியதாக இருந்தது. மன்னாரிலிருந்து 27கி.மீ வரை காப்பெற் வீதியாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள இவ்வீதி கள்ளியடியிலிருந்து பூநகரி வரை கிரவல்மண் வீதியாகவே காணப்பட்டது. சீன அரசாங்கத்தின் உதவியுடன் இடம்பெற்று வரும் இவ்வீதி அபிவிருத்தியானது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகின்றது. ஒப்பந்தத்தின்படி 85மூ சீன அரசாங்கமும், 15மூ இலங்கை அரசாங்கமும், இவ்வீதி அபிவிருத்திக்கான செலவினை பொறுப்பேற்க வேண்டும். இதுவரை இலங்கை அரசு 15மூ ஒதுக்கீட்டை ஒதுக்கவில்லை என்ற தகவலினை இவ்வீதி அபிவிருத்தியில் ஈடுபட்டிருக்கும் பொறியியலாளரிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது.
அன்று மாலை வெள்ளாங்குளத்திலிருந்து துணுக்காய், மல்லாவி, ஊடாக மாங்குளம் செல்லும் வீதியில் பயணித்தோம். வெள்ளாங்குள சந்தியிலிருந்த இராணுவ சோதனை சாவடியில் சோதனையை முடித்துக்கொhண்டு துணுக்காய் பிரதேசத்தை நோக்கி பயணித்தோம்.  வெள்ளாங்குளம் – மாங்குளம்வீதி மேடு பள்ளம் உள்ள கிரவல்மண் வீதியாக காணப்பட்டது. இவ்வீதியில் 5கி.மீற்றருக்கு அப்பால் இரு மருங்கிலும் அடர்ந்த காடுகள் காணப்பட்டன. இதில் 3–4கி;மீ தூரத்திற்கு இராணுவத்தினர் வீதியின் இரு மருங்கிலும் காவல் கடமையில் ஈடுபட்டிருந்தனர். காட்டின் உள்ளே என்ன நடக்கின்றதென்று தெரியவில்லை. இவர்கள் தொடராக காவல் காப்பதன் காரணமும் புரியவில்லை. வாகனத்தை சிறு கடை ஒன்றில் நிறுத்தி அங்கிருந்தவர்களை விசாரித்த போது காட்டினுள்ளே இராணுவத்தால் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும்; அங்கே இராணுவப் பயிற்சியும் இடம்பெற்று வருவதாக ஊர்வாசிகள் தெரிவித்தனர். தாங்கள் தமது மாடுகளைத் தேடி காட்டிற்கு சென்றபோது இக்காட்சிகளை கண்டதாக தெரிவிக்கின்றார்கள்.
வெள்ளாங்குளத்திலிருந்து 10கி.மீ தொலைவில் துணுக்காய் உள்ளது. துணுக்காய், மல்லாவி, ஒட்டன்குளம், வன்னி விளான்குளம், பனங்காமம் போன்ற கிராமங்கள் பாலியாற்று வடிநிலத்தில் அமைந்த நீர்ப்பாசன வசதியுடன் கூடிய விவசாய நிலங்களை கொண்டுள்ளன. பாலியாற்று வடிநிலத்தில் அமைந்த வவுனிக்குளமும் அதனோடு இணைந்த சிறு குளங்களும் இப்பிரதேசத்திற்கு நீர்ப்பாசன வசதியை அளித்துவருகின்றன. ஆங்காங்கே பல சிறு குளங்களும் காணப்படுகின்றன. இவையெல்லாம் நீர்வளம் நிறைந்த வளமான விவசாய கிராமம் என்பதை காட்டி நிற்கின்றன. துணுக்காய், ஒட்டுசுட்டான் பகுதிகளில் ஓரளவு வசதியானவரின் வீடுகளை காணக்கூடியதாக இருக்கின்றது. துணுக்காயில் ‘வடக்கின்வசந்தம்’ திட்டத்தின் கீழ் ஒரு பஸ் தரிப்பிடம்  புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. .(படம்-6)  துணுக்காய் பிரதேச கிராம மக்கள் சிலரை சந்தித்து உரையாடக் கூடிய வாய்ப்பு கிட்டியது. தீவுப்பகுதியில் வேலணை, புளியங்கூடல், என்ற இடத்திலிருந்து 50 ஆண்டுகளிற்கு முன்  இப் பகுதியில் குடியேறிய காசி என்ற விவசாயியை காணமுடிந்தது. அவரது கதை மிகவும் சோகம் நிறைந்ததாக இருந்தது. யுத்தத்தின் முன் தான் 3 டிராக்ரர்களின் உரிமையாளராக இருந்ததாகவும் ஏறத்தாழ 40 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்ததாகவும் கூறிய அவர் மிகவும் வசதியான வீட்டை உருவாக்கி வாழ்ந்ததாக கூறுகின்றார். தென்னைமர சோலையின் நடுவே அமைந்திருந்த வீடும், அது சார்ந்த கட்டிடங்களும் தற்போது தரைமட்டமாக காணப்பட்டன. நீச்சல்குள வசதியுடன் அமைக்கப்பட்டிருந்த தனது வீடு தரைமட்டமாக்கப்பட்டதற்கான காரணத்தை அப்பிரதேசத்திற்கு பொறுப்பான இராணுவ அதிகாரியை கேட்டபோது அது டு.வு.வு.நு தலைவரது வீடு என எண்ணி  தாம் அதனை அழித்ததாகவும் அங்கிருந்த பொருட்களை கொள்ளையிட்டதாகவும் கூறினார். காசி மேலும் கூறுகையில் தனக்கு நான்கு ஆண் குழந்தைகளும், ஒரு பெண்குழந்தையும்  உள்ளனர் என்றும் தனது பதினேழு வயது நிரம்பிய பெண்குழந்தை தன் கண் முன்னாலேயே இராணுவம் வீசிய செல் விழுந்து இறந்ததாகவும் அந் நிகழ்வின் போது  தான் தன் ஒரு காலை இழக்க நேர்ந்ததாகவும் கூறினார். குழந்தையினதும் தனது கால் இழப்பின் துயரத்துடன்; வாழும் அவரும் அவரது ஆண் பிள்ளைகளும் வயல் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். தமது வீட்டு வளவினுள் ஒருபகுதி கட்டிடத்தை திருத்தி அதில் வாழ்கின்றனர். தற்போது அவர் ஒரு டிராக்ரரை வாங்கி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதை காண முடிந்தது.  இவர் மிகவும் ஆளுமையுள்ள சிறந்த விவசாயியாக காணப்பட்டார். குளங்களை புனரமைத்தல், வாய்க்காலை திருத்துதல்  போன்ற நடவடிக்கையில் அரசு ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார். யுத்தத்தின் பின்னர் முள்ளிவாய்க்கால் வரை சென்று மீண்டநினைவுகளை  நெடுங்கதையாக விபரிக்கின்றார். இவ்வாறு பல விவசாயிகள் மீள்எழுச்சி அடைவோம் என்ற துணிவுடன் வாழ்வதை காணகூடியதாக இருந்தது. துணுக்காய் பிரதேசசெயலகம், பலநோக்கு கூட்டுறவுசங்கம், அங்கமைந்த சில பாடசாலைகளை பார்க்க கூடியதாக இருந்தது. எல்லாம் அழிவடைந்த நிலையில்  அவற்றின் சில பகுதிகள் புனரமைக்கப்பட்டு அவை இயங்கி வருகின்றன. மீள் எழுவோம் என்ற நம்பிக்கை கீற்று அனைவரிடமும் தென்படுகின்றது.
14.03.2011 காலை துணுக்காயில் இருந்து உயிலங்குளம், அக்கராயன்குளம் ஊடாக கிளிநொச்சி நோக்கி அரசபேரூந்தில் பயணித்தோம். வீதி  மேடும் பள்ளமும் நிறைந்த கிரவல்மண் வீதியாகவே காணப்பட்டது. தமது விவசாய உற்பத்திகளை சந்தைக்கு எடுத்து செல்வதற்கு சிறு விவசாயிகள் பஸ்ஸை எதிர்பார்த்து காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது. சிலர் நெல் மூடைகளை அடுக்கி பஸ்ஸை மறித்த போதும் அவர்களை ஏற்றுவதற்கு பஸ் நிறுத்தப்படவில்லை. இன்னும் சிலர் குறிப்பாகச் சிறுவர்கள் கிளிநொச்சி சந்தைக்கு சிறு விறகு கட்டுக்களை கொண்டு வந்தார்கள். பாடசாலை மாணவ மாணவிகளும், ஆசிரியர்களும் பஸ்ஸில் பயணம் செய்ததை காணமுடிந்தது.  வீதியின் இருமருங்கிலும் பசுமையாக காணப்பட்ட வயல்நிலங்களில் சில அறுவடைக்கு உட்பட்டிருந்தன. வயல் நடுவே உள்ள மக்களின் குடியருப்புகள் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டன. வீதியின் இருமருங்கிலும் வர்த்தககட்டிடங்கள் உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன. விவசாயிகளின் கல்வீடுகள் பலவும் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தன. அதனருகே அரசினால் வழங்கப்பட்ட கூடாரங்களை மக்கள் தமது குடியிருப்பாக கொண்டிருந்தனர். சில இடங்களில் சிறிய அளவில் மண்குடிசைகள் கதவுகளின்றிக் காணப்பட்டன. .(படம்-7,8) ஒவ்வொரு சந்திகளிலும் இராணுவ காவலரண்களும், இராணுவத்தின் சோதனைசாவடிகளும் இருந்ததை அவதானிக்க முடிந்தது. இராணுவ மயமாக்கல் என்ற செயற்பாட்டை நன்கு தரிசிக்க முடிந்தது.
கிளிநொச்சி வந்த நாங்கள், அந்த நகர் விரைவாக அழிவுகளை செப்பனிட்டு   ஓரளவு அபிவிருத்தி அடைவதை காணக்கூடியதாக இருந்தது. ஏ9 ஊடான போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகரித்து காணப்பட்டன. நகரம் பொதுவாக சிறிதுசிறிதாக விழிப்படையும் தன்மையை உணரமுடிந்தது.  வன்முறையால் அழிக்கப்பட்ட வன்னியை மீண்டும் வளங்கொழிக்கும் பசுமைப்பூமியாக மாற்றவேண்டும் என்ற  திடமான எண்ணத்துடன் யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டோம்.  எமக்கான வளத்தைப் பயன்படுத்தி எமக்கான அபிவிருத்தியை நாமே முன்னெடுக்க வேண்டும்.
பேராசிரியர் இரா.சிவச்சந்திரன்.


வளமான வன்னியில் வன்முறையால் விளைவிக்கப்பட்ட வடுக்கள்! – பேராசிரியர் இரா.சிவசந்திரன்(Att;photos)

No comments:

Post a Comment