ஏ9 பாதையின் மேற்கு புறமாக உள்ள வன்னிப்பெரு நிலப்பரப்பினை மே, யூன் மாதங்களில் சென்று தரிசித்து அப் பகுதியின் சமூக பொருளாதார நிலைகளை ஆராய சந்தர்ப்பம் கிடைத்தது. கிழக்கு பக்கமாக உள்ள பிரதேசத்திற்கு செல்வதற்கு நீண்ட காலமாக அனுமதி கிடைக்கவில்லை. சென்ற 13ஆம் திகதி வற்றாப்பளை அம்மன் பொங்கல் தினத்தையொட்டி அம்மனை தரிசிப்பதோடு அப்பகுதியையும் தரிசிக்கும் எண்ணம் கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டோம். யாழ் குடாநாட்டிலிருந்து பெருந்தொகையானோர் வாகனங்களில் வற்றாப்பளை பொங்கலுக்கு செல்வதை அவதானிக்க முடிந்தது. வட பகுதி ஏ9 பாதை பயணிப்பதற்கு சிரமமாக இருந்தாலும் இவற்றை சமாளித்து பல வாகனங்கள் சென்றன. சாவகச்சேரியில் இருந்து இயக்கச்சி வரை உள்ள ‘துள்ளல் பாதை’ என வர்ணிக்கப்படும் மேடும் பள்ளமும் கொண்ட பாதை நீண்ட காலமாக திருத்தப்படாமல் இருந்து வருகின்றது. இதனூடாக பயணிக்கும் எவரும் இது பற்றி விசனம் கொள்ளாது இருப்பதில்லை.
ஆனையிறவில் வாகன பதிவை மேற்கொண்ட பின் பரந்தன் சந்தியை அடைந்தோம். பரந்தன் முல்லைத்தீவை இணைக்கும் ஏ35 இலக்க வீதி ஏறத்தாழ 40கி.மீ நீளமானது. யுத்தத்திற்கு பின்னர் சிங்கள சுற்றுலா பயணிகள் இதனூடாக முல்லைத்தீவுப் பகுதிக்கு சென்று வருகின்ற போதும் தமிழர்கள் இதனூடாக செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் அம்மன் பொங்கல் தினத்திற்கு சென்றுவரவே தங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்தனர். பரந்தன், முல்லைத்தீவுப் பாதையின் ஊடாக சிறிய வாகனங்கள் செல்லமுடியாத நிலை காணப்பட்டதால் மாங்குளம் சென்று அதனூடாக முல்லைத்தீவு செல்வதற்காக பயணத்தை மேற்கொண்டோம்;.
மாங்குளத்திலிருந்து முல்லைத்தீவு ஏறத்தாழ 50கி.மீ தூரத்தைக் கொண்டது. இதனூடாக பயணித்த போது இப்பிரதேசத்தின் மீள்குடியேற்றம், மீள்அபிவிருத்தி தொடர்பாகப் பல அம்சங்களை அவதானிக்க முடிந்தது. மாங்குளத்திலிருந்து சிறிது தொலைவில் இரணைமடுக் குளத்திற்கு நீர் வழங்குகின்ற கனகராயன் ஆற்று வடிநிலத்திற்கு மேலமைந்த மதகும், பின் 15கி.மீ தொலைவில் முத்தையன்கட்டு குளத்திற்கு நீர் வழங்குகின்ற பேராற்று பாலத்தையும் தாண்டி சென்றோம். பாரிய காடுகள் சூழ அமைந்த இவ் ஆற்று வடிநிலப் பகுதிகள் மிகவும் செழுமையான, பசுமையான அடர்ந்த காடுகளைக் கொண்டு காணப்பட்டன.
இவ் வீதியோரமாக குடியமர்ந்த மக்களை பெருமளவில் காண முடியவில்லை. பாதை நெடுகிலும் ஏறத்தாழ 300யார் தூரத்திற்கு ஒன்றாக காவல் கோபுரங்களை வீதியின் இருமருங்கும் அமைத்து இராணுவத்தினர் நிலைகொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. பல்வேறு இடங்களில் பல சோதனை சாவடிகளில் வாகனத்தை நிறுத்தி, பதிவுக்குட்படுத்தி செல்ல வேண்டியிருந்தது. சோதனை சாவடிகள் உள்ள இடங்களில் பாரிய இராணுவ மையங்களும், வீதியோரமாக ஏனைய இடங்களில் மேலே விபரிக்கப்பட்ட காவற்கோபுரங்களும் காணப்பட்டன. வீதியோரமாக மிகவும் குறைந்தளவு குடியிருப்புகளே காணப்பட்டன. மக்களது இருப்பிடம்; தகரங்களையும், தறப்பாளையும் கொண்டமைக்கப்பட்டவையாக விளங்கின.
இதுவே அரசு மக்களிற்கு வழங்கிய மீள் குடியேற்றத்திற்கான வளங்களாகும்.
சில இடங்களில் அரசசார்பற்ற நிறுவனங்கள், கிறீஸ்தவ மதநிறுவனங்கள் உருவாக்கி கொடுத்த சீமேந்து வீடுகள் மிக குறைவில் காணப்பட்டன. தகரக் கொட்டகைகளில் வாழும் குடும்பத்தவர்கள் காவற் கோபுரங்களிற்கு இடையே உள்ள சில கிணறுகளையே நீர்ப் பாவனைக்கு பயன்படுத்துகின்றனர். திறந்த வெளிகளில் அமைந்துள்ள இக் கிணறுகளில் தான் பெண்களும் நீராட வேண்டிய துர்பாக்கிய நிலை காணப்படுகின்றது. இவர்களுக்கு இந்திய உதவியுடன் வீட்டுத்திட்டம் வருகின்றது என்றும், ஏனைய நாடுகளின் உதவியுடன் ஏனைய அபிவிருத்திகள் விரைவில் வருகின்றன என்றும் அரச அதிகாரிகளாலும், ஆட்சி புரியும் அரசியல் வாதிகளாலும் உறுதி கூறப்பட்ட போதும் கடந்த 2 வருடங்களாக இவை நடைமுறைப்படுத்தப்பட்டதாக தெரியவில்லை.
மாங்குளம், முல்லைத்தீவு, வீதியில் 20கி.மீ தொலைவிலுள்ள ஒட்டுசுட்டான், முத்தையன்கட்டு இளைஞர் திட்டப் பகுதிகளிலே ஓரளவு விவசாயச் செய்கையும், வர்த்தக நிலையங்களும் காணப்பட்டன. ஒட்டுசுட்டான் செங்கட்டி தொழிற்சாலை புனரமைக்கப்படவில்லை. முத்தையன்கட்டு குள வாய்க்கால்களும் புனரமைக்கப்படவில்லை. ஏற்றுநீர்ப்பாசனததால் வளங்கொழித்த முத்தையன்கட்டு இளைஞர் திட்டத்தின் அடிப்படையாக அமைந்த நீர் இறைக்கும் இயந்திரங்களும் இங்கு இதுவரை பொருத்தப்படவில்லை. இதனால் மேட்டு நிலப் பயிர்செய்கையை எவரும் மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. பழைய கட்டிடங்கள, இந்து, கிறீஸ்தவ கோவில்கள் யாவும் அழிக்கப்பட்ட சுவடுகள் காணப்பட்டன. வீதியோரமாக யுத்தத்திற்கு முன்னர் பாரிய நிலப்பரப்பில் தேக்கங்காடுகள் வளர்க்கப்பட்டிருந்தன. அவை இன்று பாதுகாப்பு படையினரால் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. இம் மரங்களை தினமும் எரியூட்டியே மிருகங்கள் வராது தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றனர். மேலும் இவை லொறிகளில் ஏற்றப்பட்டு வெளியே எடுத்துச் செல்வதையும் காணக்கூடியதாக இருந்தது.
வீதிகள் பெரும்பாலும் கிரவல் வீதியாகவே காணப்பட்டன. வற்றாப்பளை அம்மன் பொங்கலுக்காக உழவு இயந்திரங்களில் பயணிக்கும் மக்களுக்கு புழுதி வாரி இறைக்கப்படுகின்றது. ஒரு வாகனம் வீதியில் செல்லும் போதே அப்பிரதேசம் புழுதியில் நிறைவதை காணக்கூடியதாக இருக்கின்றது. இச் சுகாதார சீர்கேடு பற்றி கவனிப்பார் யாருமில்லை.
முல்லைத்தீவு நகருக்கு அண்மையான பகுதிகளான தண்ணீரூற்று, முள்ளியவளை என்பனவற்றில் ஓரளவு பழைய குடியிருப்புகள் காணப்படுவதை அவதானிக்க முடிந்தது. ஒரு சில வீடுகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இங்கு சந்தித்தோர் முக்கியமாகக் குறைபட்டுக் கொண்டது யாதெனில் யுத்தத்தால் அழிவடையாத கட்டிடங்களும், வீடுகளும் யுத்தத்தின் பிற்பட்ட காலப்பகுதியிலேயே பெருமளவு அழிவுக்குள்ளாயின என்பதாகும். முக்கியமாக பெறுமதி மிக்க மர யன்னல்கள், கதவுகள் என்பன ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் கழற்றி எடுக்கப்பட்டுள்ளன. வீட்டு வளவிற்குரிய கேற்றுகளும் களவாடப்பட்டுள்ளன. ஓடுகள், சீற் கூரைகள் என்பனவும் அகற்றப்பட்டுள்ளன. இவற்றை நாம் பயணித்த போது நன்கு அவதானிக்க முடிந்தது.
இப்பிரதேசத்தில் சிலருடன் கலந்துரையாடிய போது இறுதி யுத்தத்தின் போது சென்ற பெருந்தொகையான மக்கள் அதற்கப்பால் போகமுடியாத நிலையில் புதுக்குடியிருப்பு பகுதியில் தாம் கொண்டு சென்ற பெருமளவு வீட்டுப் பொருட்களை புதைத்து விட்டுச் சென்றதாகவும் தற்போது அப்பகுதி இராணுவ வேலிக்குள் இருப்பதாகவும் அதனைப் பெறுவதற்கு தாம் பல வழிகளில் முயன்றும் முடியவில்லை என்றும் குறைபட்டுக் கொண்டார்கள். ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வாகனங்களும் இப்பகுதிகளில் தரித்து நிற்பதை காணக்கூடியதாக இருந்தது. வாகனங்களின் உதிரிப்பாகங்கள் பெருமளவு அகற்றப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிந்தது. மீளவந்த வன்னி மக்கள் இவற்றுக்கான ஆவணங்கள் யுத்தத்தின் போது தொலைந்த காரணத்தினால் தமது உடைமையை உறுதி செய்ய முடியாத நிலையில் விரக்தியுற்று காணப்பட்டனர்.
வற்றாப்பளை அம்மன் கோவிலுக்கு பெருந்தொகையான பக்தர்கள் இம்முறை வந்திருந்தார்கள், சென்ற ஆண்டு பொங்கல் நடைபெற்ற போதிலும் குறைந்த அளவிலே மக்கள் வருகை தந்திருந்ததாகவும், இப் பொங்கலுக்கு வரலாறு காணாத தொகையில் மக்கள் வந்திருந்ததாகவும் முல்லைத்தீவு வாசிகள் கூறினர். வன்னியில் யுத்த நெருக்கடியில் சிக்கியோர் தங்களது உயிரைக் காக்க வேண்டி அம்மனுக்கு வைத்த நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்கே பெரும்பாலும் வந்திருந்ததாக தெரிகிறது. தூக்குக் காவடி, பறவைக்காவடி, பாற்செம்பு, கற்பூரச்சட்டி ஊடாக இந் நேர்த்தியை பெருந்தொகையானோர் நிறைவேற்றியதை காணமுடிந்தது. யாழ்ப்பாணம், வன்னி, வவுனியா, கொழும்பு போன்ற இடங்களில் இருந்து உழவு இயந்திரம், லொறி, வான், பஸ் போன்ற வாகனங்களில் பெருந்தொகையான மக்கள் வந்து குழுமி அம்மனை தரிசித்தார்கள். பொங்கல் தினத்தன்று ஹெலிகெப்டரில் இருந்து வான்படையினர் மூன்றுமுறை பூத்தூவி வழிபாடு செய்தமையையும் காணக்கூடியதாக இருந்தது. அம்மனின் அருளால் இப்பிரதேசம் மீண்டும் பொலிவுறும் என்ற நம்பிக்கை மக்களிடம் காணப்பட்டதை அவர்களுடன் பேச்சு கொடுத்த போது அறியமுடிந்தது. சுண்டிக்குளம் முதல் புதுமாத்தளன், முல்லைத்தீவு வரை நந்திக்கடலுக்கு அப்பால் உள்ள கரையோர நிலங்கள் சுற்றுலா அபிவிருத்தி என்றும், மீன்வாடி உருவாக்கம் என்றும் சிங்களவர்களிடம் பறிபோவதாக மக்கள் குறைபட்டுக் கொண்டார்கள். சிங்கள மீனவர்களை கடலுக்குள் செல்ல அனுமதிக்கும் இராணுவம் தமிழர்களுக்கு அனுமதி வழங்குவதில்லை என பலர் தெரிவித்தனர்.
சங்க இலக்கியம் கூறும் ஜம்பெரும் நில காட்சியில் குறிஞ்சியை தவிர முல்லை, மருதம், நெய்தல், பாலை, ஆகிய நில பிரிவுகளை கொண்ட வளமான இப்பிரதேசம் மக்களுக்கு வாழ்வழிக்கக் கூடிய அபிவிருத்தி வாய்ப்புக்களை நிறையவே கொண்டுள்ளது. கோவிலில் மணல்மேடு ஒன்றில் குந்தியிருந்த முதியவர் ஒருவருடன் கதைத்த போது முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏறத்தாழ 70 000 பேர் மீள்குடியேறியுள்ளனர் என அரச அதிகாரிகள் சொல்கின்றார்கள். ஆளுக்கு ஒருவர் என்ற விதத்தில் 70 000 இராணுவத்தினரும் உள்ளனராம். இவ்வளவு மோசமான இராணுவ மயமாக்கல் வேறு எந்த நாட்டிலாவது, எந்த பிரதேசத்திலாவது உள்ளதா என கேள்வியெழுப்பிய அவர் கடைசியாக இதைத்தான் நான் சொல்லலாம் என கூறிய வார்த்தைகள் அதிர்ச்சியடையவும், சிந்திக்கவும் வைத்தது. அவ் வார்த்தை இதுதான். ‘சிங்கள அரசியலும் வேண்டாம், யாழ்ப்பாண அரசியலும் வேண்டாம் எம்மை எம் பிரதேசத்தில் சுயமாக வாழவிடுங்கள்’
(முக்கிய குறிப்பு இதை மீள்பிரசுரம் செய்பவர்கள் நன்றி தினக்கதிர் என குறிப்பிடவும்)
(முக்கிய குறிப்பு இதை மீள்பிரசுரம் செய்பவர்கள் நன்றி தினக்கதிர் என குறிப்பிடவும்)
‘சுயமாக எங்களை வாழவிடுங்கள்’ (வன்னிப்பணயம் 3) தினக்கதிருக்காக பேராசிரியர் இரா.சிவசந்திரன்!
No comments:
Post a Comment