Monday, October 8, 2012

வன்னியில் விளைவித்த வடுக்கள் (வன்னிப்பயணம்-2)-பேராசிரியர் இரா.சிவசந்திரன்!(Att;Photos)


சிந்தனைக்கூடம் – யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மார்ச் முதல் வாரத்தில்  வன்னிப் பிரதேசத்தில் ஒரு மேலோட்டமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.  ஏப்ரல் மாதம் 5ம் திகதி முதல் 12ம் திகதி வரை துணுக்காய், மல்லாவி போன்ற பகுதிகளை மையமாகக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் மேற்கு கரை பிரதேசங்கள் ஆழமான ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன. இவ் ஆய்வு நடவடிக்கையில் பேராசிரியர் இரா.சிவசந்திரன், பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், வி.கமலேஸ்வரன், சி.ரகுலேந்திரன், ஆகியோர் பங்குகொண்டனர். வன்னி நிலம் பற்றிய இவ்வகையான ஆய்வுகள் தொடரவுள்ளன.
‘வன்னிப்பிரதேச வளமும் வாழ்வும் என்ற தலைப்பில் இடம்பெற்ற இவ் ஆய்வில் சமூக கலாசார மேம்பாட்டிற்கான பல  தகவல்களும், தரவுகளும் பெறப்பட்டன.
வவுனிக்குளம், அக்கராயன்குளம், முறிப்புக்குளம், அம்பலப்பெருமாள்குளம், கோட்டைகட்டியகுளம், தென்னியன்குளம், இரணியன்குளம், பனங்காமம், உயிலங்குளம், போன்ற பகுதிகள் ஆய்விற்குட்பட்டன. இவ் ஆய்வு பெரும்பாலும் மக்களிடமும், அரச அதிகாரிகளிடமும், அரச சார்பற்ற நிறுவனங்களுடனும், கல்வியாளர்களிடமும், பாடசாலை ஆசிரிய மாணவர்களிடமும், விடயங்களை கேட்டு அறிவதாகவும்,  உற்றுநோக்கல் மூலம் மக்கள் வாழ்வோடிணைந்த பல அம்சங்களை அவதானித்து தரவுகளை தொகுப்பதாகவும் அமைந்தது.



குறிப்பிட்ட பிரதேச பாடசாலைகளிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது மாணவர்களின் வரவுக்குறைவு, ஆசிரியர்களின் பற்றாக்குறை, தளபாடங்களின் பற்றாக்குறை, என்பன அவதானிக்கப்பட்டன. மேலும் சில பாடசாலைகளில் யுத்தத்தால் அழிவடைந்த கட்டிடங்கள் புனர்நிர்மானம் செய்யப்படாமல் இருந்தமையும் அவதானிக்கப்பட்டது.
துணுக்காய் அரசினர் தமிழ் பாடசாலை முற்றுமுழுதாக திருத்தப்படாமல் இருந்ததை காணகூடியதாக இருந்தது.
மற்றும் தேறாங்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, ஜயன்கண்குளம் தமிழ்கலவன் பாடசாலைகளிற்கு விஜயம் செய்தபோது கல்வி  கற்பித்தல் தொடர்பான பல குறைபாடுகளை அடையாளம் காண கூடியதாக இருந்தது. எமது விஜயத்தின்போது மாணவர்களுக்கு அப்பியாசபுத்தகங்களை  வழங்கினோம்

பொதுவாக ஆசிரியர் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக விளங்கிற்று. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடங்களை கற்பிப்பதற்கு உதாரணமாக விஞ்ஞானம், கணிதம் போன்ற பாடங்களை கற்பிப்பதற்கு ஆசிரியர் பற்றாக்குறை பெருமளவு காணப்படுவதால் இப்பாடங்களை கற்பிக்காது வேறு பாடங்களை கற்பிக்க வேண்டிய நிலை காணப்பட்டதாக பாடசாலை அதிபர்கள் குறைபட்டுக் கொண்டார்கள்;.
குடாநாட்டில் இருந்தும், வவுனியா போன்ற நகரங்களிலிருந்தும் ஆசிரியர் இப்பகுதிக்கு வரத் தயக்கம் காட்டுவதே இதற்கான முக்கிய காரணமாகும். தயக்கம் காட்டும் ஆசிரியரை வினாவிய போது போக்குவரத்து கஸ்டம், தங்குமிட வசதியின்மை, ஆகிய காரணங்களால் இப்பகுதிகளிற்கு போகமுடியாது இருப்பதாக தெரிவித்தார்கள். தேறாங்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மொத்தம் 124 மாணவர்கள்கல்விகற்கின்றார்கள்.
இங்கு பிள்ளைகளிடம் ஆய்வு செய்தபோது 90 வீதமான குழந்தைகள் காலை உணவு அருந்தாது பாடசாலைக்கு வருகை தந்திருந்தமையை அறிந்து துயருற்றோம். பாடசாலையில் வழங்கும் நண்பகல் உணவுக்காக அவர்கள் ஆவலுடன் காத்திருப்பது தெரிந்தது. இதுபற்றி அதிபரிடமும், ஆசிரியரிடமும், மாணவரிடமும் கலந்துரையாடிய போது வீட்டில் நிலவும் வறுமைக்கு அப்பால் வீடுகள் முறையாக முகாமைத்துவம் செய்யப்படாமையே இதற்கான காரணம் என கண்டறிய முடிந்தது. பக்கத்திலே பாடசாலை மாணவரின் வீட்டுக்கு விஜயம் செய்து அவதானித்த உண்மையின் படி ஆண்கள் பெருமளவு பிள்ளைகளின் கல்வியில், உணவு வழங்கலில் அக்கறை காட்டாமை தெரியவந்தது.
பெரும்பான்மையான ஆண்கள் குடிப்பழக்கத்திற்கு உட்பட்டிருந்தனர். அகதிமுகாம்களில் தங்கியிருந்தபோது அன்னாசி கலந்த கசிப்பினை நிறைய அருந்தியதாக கூறினார்கள். பெண்களே வயல் வேலைகளை செய்து உழைப்பதோடு வீட்டுப் பொறுப்புக்களையும் ஏற்றுக்கொண்டிருந்ததை உணர முடிந்தது. பெரும்பாலான ஆண்கள் தமது பிள்ளைகள் எத்தனையாம் ஆண்டு படிக்கின்றார்கள் என்பதைக் கூட தெரியாதிருந்தனர். தாராளமாக நிலவும் வீட்டு வன்முறையையும் பொறுத்துக்கொண்டு பெண்களே குடும்ப நிர்வாகத்தை மேற்கொண்டு வருவதை உணரமுடிந்தது.
பல வீடுகளில் இரண்டு, மூன்று பசு மாடுகளும் இருந்தன. கன்றுகளுடன் நிற்கும் மாடுகளிலிருந்து பாலைப்பெற்றும், பாடசாலை பிள்ளைகளிற்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும், கோழிகளை வளர்த்து முட்டை பெற்று ஊட்டச்சத்துள்ள உணவை பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும் என்ற எண்ணமும், காணியில் உள்ள கொய்யா, பப்பாசி  போன்ற பழங்களை பெற்று அதனையும் கொடுக்கலாம் என்ற எண்ணமும் இவர்களிடம் இருந்ததாக தெரியவில்லை. உண்மையில் தங்களிடம் உள்ள வளங்களை தமது வாழ்வுக்காக பயன்படுத்தும் முகாமைத்துவம் அற்றவர்களாகவே இவர்கள் விளங்கினார்கள். இதனை கற்பிப்பதற்கு சமூக நிறுவனங்கள் முயல வேண்டும். மேலும் துணுக்காய், மல்லாவி போன்ற பகுதிகளிற்கு தினசரிகள் ஒழுங்காக வருவதாகவும் தெரியவில்லை.  இளைஞர்கள் சனசமூக நிலையங்களையும,; இளைஞர் சங்கங்கள், மாதர் சங்கங்களையும்; உருவாக்க வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் இருந்து இங்கு வரும் பஸ் வண்டிகளில் வாசிக சாலைகளிற்கு தினசரிகளை எம்மால் வழங்கமுடியும் எனவும் அதற்காக எங்களுடன் தொடர்பு கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டது.
பறங்கியாறு, பாலியாறு, மண்டிக்கல் ஆறு, பல்லவராயன் கட்டு ஆறு, ஆகிய வடிநிலங்கள் வளம்படுத்தும் துணுக்காய் மல்லாவியை மையமாகக் கொண்ட இப்பிரதேசம் மேற்கே ஏ32 பாதையில் அமைந்த வெள்ளாங்குளம் சந்தியிலிருந்து ஏ9 பாதையில் அமைந்த மாங்குளம் வரை உள்ள 30 கி.மீ தூரத்திற்கு நடுவாக அமைந்துள்ளது. வவுனிக்குளம், அக்கராயன் குளம், போன்ற பாரிய குளங்களை தவிர 60ற்கும் மேற்பட்ட சிறிய குளங்களை இப்பிரதேசம் கொண்;டுள்ளது. வவுனிக்குளம் இடதுகரை கால்வாய், வலதுகரை கால்வாய் என்பனவற்றின் ஊடாக 2000 ஏக்கர் பரப்பிற்கு மேல் நீர்ப்பாசன வசதிகளை வழங்கும் இக்குளங்களில் இருந்து சிறு போகத்திற்கு ஈவு பெறுவதற்கான கூட்டம் வவுனிக்குள நீர்ப்பாசன திணைக்களத்தில்  இடம்பெற்றபோது இக்கூட்டத்தில் பங்குபற்றும் சந்தர்ப்பம்   எமக்கு கிடைத்தது.
காணி உரிமையாளர்கள் குளத்திற்கு அருகில் ஒதுக்கப்படும் காணியில் சராசரியாக 1ஏக்கர் சிறு போக செய்கையை மேற்கொள்ளலாம் என்ற தீர்மானம்முல்லைத்தீவு அரசாங்க அதிபர் பத்திநாதன் அவர்களாலும், பொறியியலாளர் சிறீஸ்கந்தராசா அவர்களாலும் விவசாயிகளின் ஒப்புதலுடன் தீர்மானிக்கப்பட்டது.
வவுனிக்குள இடதுகரை, வலதுகரைகளில்  அமைந்துள்ள குடியேற்ற காணிகள் ஏறத்தாழ 10,000 ஏக்கர்களை கொண்டதாகும். இதில் ஏறத்தாழ 1800 பேருக்கு காணிகள் வழங்கப்பட்டிருந்தன. ஒவ்வொருவருக்கும் தாழ்நிலம் மூன்று ஏக்கரும், மேட்டுநிலம் இரண்டு ஏக்கரும் வழங்கப்பட்டிருந்தன. மேட்டுநிலம் ஏற்று நீர்ப்பாசன வசதிகளுடன் கூடியதாக விளங்கிற்று.  இங்கு பெரும்போகத்தில் மூன்று ஏக்கர் பாசன வசதியுடன் தாழ்நிலத்தில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. சிறுபோக காலத்தில் குளத்து நீர் பற்றாக்குறை நிலவும் காரணமாக  சராசரியாக ஒருவர் ஒரு ஏக்கர் செய்யவே அனுமதி வழங்கப்படுகின்றது. ஏற்றுநீர்ப்பாசன அடிப்படையில் மேட்டுநிலங்களில் உபஉணவுப் பயிர்செய்கைக்கான வசதிகள் யுத்தத்திற்கு முன்னர் வழங்கப்பட்டிருந்தன. யுத்தகாலத்தில் இம்மக்களது குடியிருப்புகள், ஏற்றுநீர்ப்பாசன வசதிகளிற்கான உபகரணங்கள், வாய்க்கால்கள் என்பன பெருமளவிற்கு அழிவடைந்துள்ளன.
அரசஅதிபரிடமும், நீர்ப்பாசன பொறியியலாளரிடமும் உரையாடிய போது வுவுனிக்குள அணைக்கட்டை உயர்த்தி நீர் கொள்ளளவை அதிகரிக்கும் செயற்திட்டம் விரைவில்  நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டார்;. மேலும் ஏற்றுநீர்ப்பாசன வசதிகளையும் புனரமைக்க உள்ளதாக விளக்கினார். வவுனிக்குள திட்டத்தில் வழங்கப்பட்ட இரண்டு ஏக்கர் மேட்டுநிலத்தில் அமைக்கப்பட்ட மக்களிற்கான வீடுகளில் 90 வீதமானவை முற்றாக அழிக்கப்பட்ட நிலையிலேயே காணப்பட்டன. அவர்களின் வீடுகளின் அத்திவாரத்தை மாத்திரமே காணகூடியதாக இருந்தது.  அதற்கருகே அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நான்கு தகரங்களுடனும், மறைவை ஏற்படுத்துவதற்காக வழங்கப்பட்ட படங்குகளையும் கொண்டே இவர்கள்  தற்காலிக தங்குமிடங்களை உருவாக்கி இருந்தார்கள். அரசாங்கம் குடியிருப்பை மேம்படுத்துவதற்காக 25 000 ரூபா பணத்தை  மாத்திரமே வழங்கியதாக கூறும் இவர்கள்  இத்தொகை வீடு கட்டுவதற்கு மிகவும் பற்றாக்குறையானதெனத் தெரிவித்தனர். விவசாயிகளின் ஆர்வமும் வாழ வேண்டும் என்ற துடிப்பும்  அரசாங்கம் முறையாக வளங்களை வழங்கினால் விரைவாக புனர்நிர்மானம் பெறப்படலாம் என்பதை உணர்த்துவதாக இருந்தது.
வன்னியின் வளத்தையும் வாழ்வையும் மேம்பாடு செய்தல் என்று நோக்குகையில் தாழ்நில நெற்செய்கையையும், மேட்டுநில பயிர்செய்கையையும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. குளத்தின் கொள்ளளவை அதிகரிப்பதன் மூலமும் சிறுபோகத்திற்கான விளைபரப்பை அதிகரிப்பதன் மூலமும்;  ஆண்டுக்கு அதிக உற்பத்தியை பெறமுடியும். ஏற்றுநீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்துவதனால் குடியிருப்புகளுடன் கூடிய நிலங்களை உப உணவுப்பயிர்செய்கை, ஆடு,மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, போன்றவற்றுக்கு பெரிதும் பயன்படுத்த கூடிய வாய்ப்புகள் உள்ளன. யுத்தத்தில் புலம்பெயர்ந்த போது இப்பிரதேச மக்களின் கால்நடைகள் காடு, வயல் பிரதேசங்களில் கட்டாக்காலியாக விடப்பட்டன. அனர்த்தத்தின் போது இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் போன்ற வகையினர் இப்பகுதிக்கு திரும்பாததால் பல கால்நடைகள் காடு, வயல் பிரதேசங்களில் கட்டாக்காலியாக திரிகின்றன.
நெல் அறுவடையின் பின் நெல் சந்தைப்படுத்துதலில் தரகர் தொல்லைகள் பெரிதும் காணப்பட்டன. ஒரு மூடை நெல் 1500 ரூபா முதல் 2000 ரூபா வரை விற்பனையாகும் நிலை காணப்பட்டது. உழவு, சூடடித்தல் போன்றவற்றுக்கு வாடகை இயந்திரத்தை பயன்படுத்துவதால் விவசாயிகள் அதிக செலவினத்தை எதிர் நோக்குகின்றார்கள். இதனால் நெல் விளைச்சலில் கிடைக்கும் வருமானம் பெரிதும் சுரண்டப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இதற்கு அரசும், கூட்டுறவு சங்கம் போன்ற அமைப்புகளும் பெருமளவு உதவிபுரிதல் வேண்டும்.
கைத்தொழிலை பொறுத்தவரையில்  தற்போது வீட்டு கட்டுமானத்திற்கான பொருட்கள் அதிகம் தேவைப்படுகின்றன. முக்கியமாக செங்கட்டி தொழிற்சாலை தனியாராலோ, அரசாங்கத்தாலோ இங்கு அமைக்கப்படுமானால் அது இம் மக்களின் பெருமளவு தேவையை பூர்த்தி செய்வதாhக அமையும். பரந்துள்ள பல குளங்களில் செம்மண் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் இலகுவாக பெறப்படமுடியும்.  நிதி மிகுந்த புலம்பெயர் மக்கள் இவ்வாறான ஆலைகளை வன்னியில் அமைப்பது பற்றி கவனம் கொள்ள வேண்டும். மற்றும் பல்வேறுபட்ட சிறு கைத்தொழில்கள் என்பனவும் இங்கு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அரசு பஸ் போக்குவரத்தை அதிகரிப்பதோடு முச்சக்கர வண்டிகளை பெறுவதற்கான வாய்ப்புகளும் வழங்கப்படுதல் வேண்டும்.
இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் கைத்தொலைபேசியை பயன்படுத்துவதனை காணகூடியதாக இருக்கின்ற போதும் அரசு ஏனைய தொடர்பாடல் வசதிகளையும் அதிகரிக்க வேண்டும். சமீபத்தில் தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக  தொழில்சார் பயிற்சி நிறுவனம் ஒன்று அரசினால் துணுக்காயில் திறந்து வைக்கப்பட்டு 20 கணனிகளுடன் இளைஞர்களுக்கான பயிற்சியை மேற்கொண்டு வருவதை அவதானிக்க முடிந்தது.
இவ் வசதிகள் வன்னி எங்கும் பரவலாக்கப்படுதல் இன்றியமையாதது. இதில் விவசாயம், கைத்தொழில், வர்த்தகம் என்பவற்றை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் இளைஞர்களுக்கு வழங்கப்படுதல் வன்னியின் எதிர்கால வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும்.
உள்ளுர் குளங்களை பயன்படுத்தி நன்னீர் மீன்பிடியை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் நிறைய இங்குள்ளன. யுத்தத்திற்கு முன்னர் இங்குள்ள வவுனிக்குளம், அக்கராயன் குளம் ஆகிய நீர்நிலைகளில் இம் முயற்சிகள் மேற்கொண்டிருந்தாலும் தற்போது இதனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன.  மேலும் விவசாயம்சார் கைத்தொழில்களையும் அதிகரிக்கலாம். கொய்யா, பபப்hசி, மாதுளை, திராட்சை போன்ற பழ உற்பத்திகளை மூலப்பொருட்களாக கொண்ட பழரச பான உற்பத்தி கைத்தொழிலை முன்னெடுக்க முடியும்.
இன்று உலகம் அறிவியல் உலகமாக மாறிவருகின்றது. பாடசாலை கல்வியுடன் தகவல் தொழில்நுட்ப கற்கை நெறியையும் ஆங்கில கற்கை நெறியையும் கிராம மட்டங்களில் ஏற்படுத்துவதற்கு குறிப்பாக புலம்பெயர்ந்த மக்கள் பெரிதும் உதவமுடியும். கிராமத்திற்கு ஒரு கணனி நிலையத்தை உருவாக்குவதன் மூலம் இளைஞர்களுக்கான நவீன கல்வியை மேம்படுத்துவதற்கு புலம்பெயர் மக்கள் அக்கறை காட்டவேண்டும்.  புலம்பெயர் நாடுகளில் வாழும் நம்மவர்கள் உபயோகித்த கணனிகளை கூட இங்கு அனுப்பி உதவலாம். அத்துடன் அனைத்து பாடசாலைகளும் அரசாங்க உதவியை மாத்திரம் நம்பியிராது மக்கள் வழங்கும் உதவியுடன் அபிவிருத்தி செய்யப்படுதல் வேண்டும்.
யுத்தத்திற்கு முன்னர் மிகவும் வசதியாக வாழ்ந்து அன்னமிட்ட கை இன்று உணவுக்காக கையேந்தும் நிலை காணப்படுவது பெரும் துயரமான நிலையாகும். இவ்வாறு துன்பத்திற்குள்ளான முதியவர்கள்பலரை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிட்டிற்று. அவர்களில் ஒருவரின் கதை பெரிதும் சோகம் நிறைந்ததாகும். யுத்தத்திற்கு முன் வசதியாக வாழ்ந்த திரு.ராமசாமி எனும் முதியவர் 70 வயதில் சைக்கிளில் சென்று வீடுவீடாக யாசிப்பதை கண்டு கண்ணீர் பனித்தது. அவர் தனது ஆறுபேர் கொண்ட  குடும்ப அங்கத்தவருடன் முள்ளிவாய்க்கால் வரை சென்று தனிமையாகத் திரும்பியுள்ளார். கடந்த இரு வருடங்களாக உறவுகளைத்தேடி அலைகின்றார். இவர்  யுத்தத்தின் இறுதிக்காலகட்டத்தில் துணுக்காயிலிருந்து ஒருவருடத்திற்கு முன்பு பின்வரும் வகையில் தனது குடும்பத்தை நகர்த்தியுள்ளார்.துணுக்காயில் இருந்து கிளிநொச்சிக்கு புலம்பெயர்ந்து மூன்று மாதம் வாழ்ந்ததாகவும் பின்னர் விஸ்வமடு சென்று  மூன்று மாதம் வாழ்ந்ததாகவும், அதன் பின்னர் வல்லிபுரத்தில் இரண்டு மாதம் தங்கியிருந்ததாகவும், அதன் பின்னர் இரணைப்பாலையில் ஒரு மாதம் தங்கியிருந்ததாகவும், இறுதியாக முள்ளிவாய்க்காலில் மூன்று மாதம் தங்கியிருந்து இறுதி யுத்தத்தின் பின்னர் சகலரையும் இழந்து தனியாக துணுக்காய் திரும்பியுள்ளதாகவும் கூறும்  இவரின் கதை போன்றே பலரின் கதைகளும்  துயரம் நிறைந்தவை.  நாம் சந்தித்த குடும்பத்தினருள் ஒருவர் தன்னும்  ஏதோ ஒருவகை இழப்பின்றி மீண்டமையை அறியமுடியவில்லை.
கலை கலாசார அம்சங்களில் முக்கியமாக கோயில்களில் சில புனரமைக்கப்பட்டு திருவிழாக்கள் இடம்பெற்று வருவதை காண கூடியதாக இருந்தது.
வன்னியின் பனங்காமம் எனும் கிராமம் அடங்காவன்னிமை என்று வரலாற்று காலத்தில் விளங்கிய பகுதியாகும். போர்த்துக்கீச, ஒல்லாந்த, ஆங்கிலேயர் என்போரால் வெற்றி கொள்ள முடியாத வன்னி அரசனின் குடியிருப்புகளும், அவர்களது பரம்பரையினரும் இக் கிராமத்தில் காணப்பட்டனர். இம் மன்னர் வழிபட்டதாக கூறப்படும் சிவன் கோயில் அழிவடைந்த நிலையில் இன்றும் காணப்படுகிறது. யாரோ ஒரு சுட்டி விளக்கை இதில் எரிப்பதை காண முடிந்தது. அப்பாரம்பரிய கிராம மக்களுடன் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. வவுனியாவில் இருந்து மீண்டும் வந்துள்ள இவர்கள் இக்கிராமத்தை கட்டிவளர்க்கும் முயற்சியில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றார்கள். அழிந்த வீட்டில் ஒருபகுதியை திருத்தி வாழும் இவர்களது கைலாயவன்னியர் குடும்பம் இவ் ஆண்டு நெல்விளைச்சலை மேற்கொண்டு  நல்ல  விளைச்சலைப் பெற்றுள்ளனர். முற்றத்தில் அடுக்கியிருக்கும் நெல்மூடைகளின் மேல் வீற்றிருக்கும் அன்னலக்ஷ்மியின் பிரகாசமான கண்கள் வன்னியின் மேம்பாட்டையும், மீள் எழுவோம் என்ற நம்பிக்கையையும் உணர்த்துவதாக உள்ளது. 



வன்னியில் விளைவித்த வடுக்கள் (வன்னிப்பயணம்-2)-பேராசிரியர் இரா.சிவசந்திரன்!(Att;Photos)

No comments:

Post a Comment