Monday, October 8, 2012

இலங்கையில் உள்ளுராட்சி அமைப்புகளும் அவற்றுக்கான தேர்தல் முறைகளும்’ -பேராசிரியர் இரா.சிவசந்திரன்


01. யாழ்ப்பாண தேர்தல் தொகுதியையும், கிளிநொச்சி தேர்தல் தொகுதியையும் உள்ளடக்கிய 19 உள்ளுராட்சி சபைகளுக்கானதும், திருமலை, அம்பாறை, மட்டக்களப்பு பிரதேசங்களில் மொத்தம் 5 உள்ளுராட்சி சபைகளுக்கானதுமான  ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது. கடந்த 30 வருடங்களாக ஆயுதப் போராட்டம் நடைபெற்ற போது உள்ளுராட்சி அமைப்புக்களை பகிஸ்கரித்து  அதன்மூலம் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையே தமிழ் பிரதேசங்களில் காணப்பட்டது. மக்கள் தமக்கு கொடுக்கப்பட்ட அரசியலுரிமைகளை பகிஸ்கரிப்பதன் மூலம் ஜனநாயக ஆட்சி முறைகளை அலட்சியப்படுத்தும் அரசுக்கு எதையும் கற்பிக்க முடியாது. இவ்வாறான பகிஸ்கரிப்பால் மக்களை நேசிக்காத மக்களுக்கான வளங்களையும், வருமானங்களையும் சுரண்டுகின்ற கல்வியறிவற்ற புல்லுருவிகளே இவ் அமைப்புக்களுக்குள் புகுந்து  ஜனநாயகம் என்ற பெயரில் அட்டகாசம் செய்வர். எனவே இதனை தடுக்க வேண்டியது உண்மையாக மக்களை நேசிப்போர்களது கடமையாகும். இதனாலேயே தான் தமிழத் தேசியக் கூட்டமைப்பினர்  தமிழர் பிரதேசங்களில் பரந்துள்ள உள்ளுராட்சி அமைப்புக்களை தம் வசப்படுத்தி அப்பிரதேச மக்களுக்கு நல்லாட்சியை வழங்க முன்வந்துள்ளமை யாவரும் அறிந்ததே. வன்னியில் பெரும்பாலான உள்ளுராட்சி சபைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது போன்று இங்கும் கைப்பற்ற வேண்டியது அவசியமாகும். உள்ளுராட்சி அமைப்புக்களும், தேர்தல் முறைகளும் பற்றி நீண்டகாலமாக இதில் பரிட்சயமற்றிருந்த மக்களுக்கும், வேட்பாளர்களுக்கும் அறிவுறுத்த வேண்டி அதுபற்றி இங்கு விளக்கமளிக்கப்படுகிறது.       




02. இலங்கையில் வரலாற்றுக்காலம் முதலாக உள்ளுராட்சி முறைகள் நிலவிவந்துள்ளன. எனினும் நாம் 1948 பின் இலங்கையில் உள்ளுராட்சி முறைகள் எவ்வகையில் அமைந்திருந்தன என்பதைப் பார்ப்போம். உண்மையில் இவை பிரித்தானியரால் அறிமுகம் செய்யப்பட்ட முறைகளின் திருத்திய வடிவமேயாகும்.
          1948 இல்  நடைமுறையில் இருந்த  உள்ளுர் அதிகார அமைப்புகள்.
மாநகர சபை (Municipal Councils)
நகர சபை (Town Council)
கிராம சபை (Village Committee) என்பதாக விளங்கிற்று.
1981 இல் நகரசபை, கிராமசபை என்பன ஒழிக்கப்பட்டு மாவட்ட அபிவிருத்திச் சபை(DDC) எனும் அமைப்பு இல 35, 1981 சரத்து மூலம் ((Act)) உருவாக்கப்பட்டது. மேற்படி மாவட்ட அபிவிருத்திச் சபை எனும் அமைப்பு முறை எதிர்பார்த்தளவு திருப்திகரமாக அமையாததால் 1987 இல் சரத்து 15,1987 இன்படி பிரதேச சபைகள் அறிமுகம் செய்யப்பட்டன. இலங்கையில் தற்போது நாம் 3 வகையான உள்ளுர் அதிகார சபைகளை கொண்டுள்ளோம். அவையாவன
       மொத்தம்
மாநகர சபைகள் (Municipal Councils)  14
நகர சபைகள் (Town Council)               37
பிரதேச சபைகள்(Pradeshiya sabhas)   258
    
மொத்தம்                  309 அலகுகள்.
பாரிய நகரத்தை மாநகர சபைகளும், சிறிய நகரத்தை நகர சபைகளும் கிராமப்;புறப் பகுதிகளை பிரதேச சபைகளும் கொண்டுள்ளன. இவை மாநகரசபைச் சட்டம், நகரசபைச் சட்டம், பிரதேசசபைச் சட்டம் என்பவற்றினால் அரசியல் சட்ட அந்தஸ்;தைப்; பெற்றுள்ளன. இந்தியாவைப் போல உள்ளுராட்சி அமைப்புகள் அரசியல் சாசன அங்கீகாரத்தையும் அரசியல் சாசன பாதுகாப்பையும் கொண்டிருக்கவில்லை. இந்தியாவில் 1992 இல் ஏற்படுத்தப்பட்ட 73 ஆவது, 74வது அரசியலில் சாசனத் திருத்தங்கள் கணிசமான அதிகாரங்களை உள்ளுராட்சி அமைப்புகளுக்கு வழங்கின. பஞ்சாயத்து ராஜ் என்பது கிராமிய மட்டத்திலும் மாநகர அமைப்புகள் நகர மட்டத்திலும் சமூகத்தின் அபிவிருத்தி;, மக்கள் நலன் பேணுதல் தொடர்பான பணிகளை ஆற்றுகின்றன. இந்த சட்ட திருத்தத்தினால் பஞ்சாயத்து ராஜ் வீதிகளை அமைத்தல், கல்வி, விவசாய அபிவிருத்தி போன்ற பல விடயங்களில் பணியாற்ற முடிந்தது.
       இலங்கையின் 13 ஆவது திருத்தத்தின்படி உள்ளுராட்சி அதிகார சபைகளின் உருவாக்கம், அமைப்பு, சட்ட வரையறைகள் என்பனவும் தேசிய கொள்கைகளும் மத்திய அரசிடமே தொடர்ந்தும் உள்ளன. எனினும் அரசியலமைப்பின் 13 வது திருத்தம் உள்ளுராட்சி அதிகாரசபைக்கு ஏலவே உள்ள அதிகாரங்களை மாவட்ட சபை பெற்றுக் கொள்ள முடியாதெனவும் கூறுகின்றது. தேவைப்படுமிடத்து மாகாணசபை உள்ளுராட்சி சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கமுடியும் எனவும் விதந்துரைக்கப்பட்டுள்ளது.
       தேசிய மட்டத்திலான உள்ளுராட்சி அமைச்சு பொதுக்கொள்கை வழிகாட்டல், தேசிய ஒருங்கிணைப்பு என்பவற்றினை உள்ளுராட்சி அமைப்புகளுக்கு வழங்கும். தேசிய மட்டத்தில் உள்ளுராட்சி அமைச்சுக்குக் கீழ் இரு முகாமை நிறுவனங்கள் செயற்படுகின்றன. அவையாவன
1) உள்ளுராட்சிக்கான இலங்கை நிறுவனம்: உள்ளுராட்சிக்குரிய முகாமைத்துவ அபிவிருத்தி மற்றும் உள்ளுராட்சிக்குரிய ஆய்வு என்பவற்றை ஒன்றிணைக்கும்.
2) உள்ளுர் கடன் மற்றும் அபிவிருத்தி நிதியம்: உள்ளுர் நிறுவனங்களுக்கு சலுகை அடிப்படையில் கடன்களை வழங்குவதற்கான அதிகார அமைப்பாகும்.
உள்ளுராட்சி அமைப்பின் அதிகாரங்களும் செயற்பாடும்.
       உள்ளுராட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை ஆகிய உள்ளுராட்சி அமைப்புகள் பொதுவான ஆட்சி நடைமுறைகள் வழியாக அமுல்படுத்தலாம். அவை வருமாறு.
01) சொத்துக்களை பாராதீனப்படுத்துவதற்கும் தன்னுரிமையாக்குவதற்கும் விற்பதற்கும் அதிகாரம் இவைகளுக்கு வழங்கப்படும்.
02) உள்ளுராட்சி அமைப்புக்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி ஒப்பந்தங்களைச் செய்துகொள்ளலாம்.
03) வரிகளை அறவிடும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04) செலவுகளைக் கணிப்பிடும் அதிகாரம்.
05) உரிமைப்பத்திரங்களை வழங்கும் அதிகாரம்.
06) உபவிதிகளை உருவாக்கும் அதிகாரம்.
மேற்படி அதிகாரங்களும் செயற்பாட்டு வழிமுறைகளும் உள்ளுராட்சி அதிகாரசபை சட்டங்களிலும் உப சரத்துக்களிலும் கூறப்பட்டுள்ளன.
       தற்போது இலங்கையில் நிலவும் உள்ளுராட்சி அதிகார அமைப்புக்களுக்கு மேற்கு நாடுகளில் காணப்படுவது போல் முழுமையான சுய  ஆட்சி அதிகாரம் வழங்கப்படவில்லை. மேற்கு நாடுகளில் உள்ளுராட்சி அமைப்புகள் அவ்வப் பிரதேசத்திற்குரிய கல்வி, காவற்றுறை, சமூக சேவைகள் என்பவற்றில் அதிகாரம் செலுத்த முடியும். ஆனால் இலங்கையில் உள்ளுராட்சி அமைப்புகள் பொது நலன்கள் சார்ந்த துறைகளில்: குறிப்பாக பொது சுகாதாரம், கழிவகற்றல் போன்றவற்றிலும் சில சமூக சேவைகளிலும் ஈடுபட முடியும். பிரதேச, நகர சபைகளை விட மாநகர சபைகளுக்கு மேற்படி விடயங்களை கையாள்வதில் அதிக அதிகாரம் உண்டு. எனினும் பிரதேச, நகர சபைகள் மக்கள் பங்களிப்புடன்கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகளில் கணிசமான செல்வாக்கைச் செலுத்தமுடியும்.
     உள்ளுராட்சி அதிகார சபைகளுக்கான மேலே கூறப்பட்ட சட்டங்கள்ஃசரத்துக்களைவிட இலங்கைக்கான பொதுவான பிற சட்டங்களையும் உள்ளுராட்சி அமைப்புகள் பயன்படுத்த முடியும். அவையாவன அரசமைப்பு சட்டம், உள்ளுராட்சி தேர்தல் சட்டம். பொது நிர்வாகச் சட்டம், முகாமைத்துவ சட்டம், வரி செலுத்தும் வழி வகைகள்பற்றிய சட்டம், பொதுச்சுகாதாரம், பௌதிக திட்டமிடல், பொதுநலன் சேவை சட்டம் போன்றவற்றையும் இவை பயன்படுத்த முடியும்.
உள்ளுராட்சித் தேர்தல் முறை
       1981இற்கு முன்னர் உள்ளுராட்சி சபைகளுக்கு வட்டார அடிப்படையிலேயே அங்கத்தவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒருவர் தெரிவு செய்யப்பட்டு பின்னர் அவர்கள் ஒன்றுகூடி தமது உள்ளுராட்சி சபைகளுக்கான தலைவர், துணைத்தலைவர்களை தெரிவு செய்யும் முறை இருந்து வந்துள்ளது. இம்மாதிரியான தேர்தல் முறை 1989ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட உள்ளுராட்சி தேர்தல் அதிகார சபையின் சட்டத்தினால் மாற்றியமைக்கப்பட்டது.
       1989ஆம் ஆண்டு உள்ளுராட்சி அதிகார சட்டத்தின் படி விகிதாசார பிரதிநிதித்துவ முறை உள்ளுராட்சி அமைப்புகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி பிரதேசசபை, நகர சபை, மாநகர சபைக்குரிய குறித்தொதுக்கப்பட்ட மொத்த அங்கத்தவர்கள் மொத்தமாக ஒரு கட்சி அல்லது சுயேட்சைக் குழுவுக்கு வாக்களிப்பதன் மூலம் தேர்வுசெய்யப்படுபவர்  கட்சிக்கு அல்லது குழுவுக்கு கிடைக்கும் மொத்த வாக்குகளின் அடிப்படையில் விகிதாசார முறையில் அங்கத்தவர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள். இவர்களில் சபைக்குரிய தலைவர், துணைத்தலைவர் என்போர் அரசியல் கட்சிஃகுழுக்களின் செயலாளர்களினால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உள்ளுராட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டோர் நான்கு ஆண்டுகள் அப்பதவியை வகிக்க முடியும். உள்ளுராட்சி அமைச்சு விரும்பின் மேலும் ஒரு வருடத்திற்கு தேர்தலை ஒத்திவைக்க முடியும்.
       உள்ளுராட்சி சபைக்குரிய வாக்காளர் ஒருவர் கட்சிக்கு அல்லது குழுவுக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்திற்கு புள்ளடி இடுவதன் மூலம் வாக்கை அளிக்க முடியும். அதன் பின் அவருக்குரிய மூன்று விருப்பு வாக்குகளை வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட இலக்கங்களின் நேரே புள்ளடியிடுவதன் மூலம் வழங்க முடியும். வாக்காளர் ஒருவர் தனது மூன்று விருப்பு வாக்குகளை ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ அல்லது மூவருக்கோ வழங்க முடியும். விருப்பு வாக்குகளை பயன்படுத்தாது விடவும் முடியும். கட்சிக்கு அல்லது குழக்களுக்கான வாக்கு அளிக்கப்பட்ட பின்னரேயே விருப்பு வாக்குக்கான உரிமை பெறப்படுகின்றது.
தேர்வுபெற்ற அங்கத்தவர்களை கொண்ட அவையானது உள்ளுராட்சி (Council) அமைப்பின் கொள்கைகளை உருவாக்கும் அமைப்பாகும். இது உள்ளுராட்சி அமைப்பின் செயற்பாட்டிற்கு  இன்றியமையாதது. அவை சில உப குழக்களை அமைத்துச் செயற்படும்.
 அவையாவன
1) நிலையியல் குழு,
2) தேவையை ஒட்டிய தற்காலிக குழு
        உள்ளுராட்சி அவையின் எந்த தீர்மானங்களும் நிலையியற் குழுவில் கலந்துரையாடப்பட்ட பின்னரே அவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மாநகர சபைக்கு இவ் வழிமுறை இன்றியமையாதது. நகரசபை, பிரதேசசபைகளுக்கு இவை அத்தியாவசியம் இல்லை. எனினும் இம்முறையைப் பயன்படுத்துதல் பொதுவாக வரவேற்பிற்குள்ளாகும் எனலாம்.
       உள்ளுராட்சி சபைகளின் அதிகாரம் மாகாண சபைகளின் உருவாக்கத்தினால் எல்லைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் அமைச்சுகளும், அரசு முகாமை நிறுவனங்களும் உள்ளுராட்சி சபையின் மேல் தமது அதிகாரத்தைச் செலுத்துகின்றன. வட்டார தேர்வுகளை ஒழித்தமை விகிதாசார பிரதிநிதித்துவ முறையை கொண்டுவந்தமை என்பன பிரதேச ரீதியாக மக்கள் சேவையாளர் உள்ளுராட்சி சபைக்கு தேர்ந்தெடுக்க தடையாக அமைந்துள்ளதென சுட்டிக்காட்டப்படுகின்றது. உள்ளுராட்சித் தேர்தலின் பின் தலைவர் /துணைத்தலைவர் என்போரை அரசியல் கட்சி  அல்லது குழு செயலாளர் தேர்ந்தெடுப்பது நல்ல ஜனநாயக முறையல்ல எனவும் விமர்சிக்கப்படுகின்றது.
       உள்ளுராட்சி சபை எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவென ஜனாதிபதி விசாரணைக்குழு ஒன்று சமீபத்தில் அமைக்கப்பட்டு எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்காகச் சில திருத்தங்கள் முன்மொழிந்துள்ளது. உள்ளுராட்சி சபைகளின் அதிகாரங்களை அதிகரித்தல், தேர்தலில் மீண்டும் வட்டார முறையினை அமுலாக்குதல், வட்டாரங்களில் மக்கள் குழுக்களை அமைத்தல், உள்ளுராட்சி சபைகளுக்கு கூடிய சுயாட்சி அதிகாரங்களை வழங்குதல், உள்ளுர் அரச சேவை ஆணைக்குழுவை மீளவும் அமைத்தல், மனிதவள அபிவிருத்திக்காக  சிறப்பான திட்டங்களை உருவாக்கல் போன்ற திருத்தங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சட்ட ஆக்கத்தைப் பெறும் எனவும் அடுத்த உள்ளுராட்சித் தேர்தலானது திருத்தச் சட்டத்தின்படியே இடம்பெறும் எனவும் நம்பப்படுகின்றது.


இலங்கையில் உள்ளுராட்சி அமைப்புகளும் அவற்றுக்கான தேர்தல் முறைகளும்’ -பேராசிரியர் இரா.சிவசந்திரன்

No comments:

Post a Comment